Published : 16 Dec 2016 10:49 AM
Last Updated : 16 Dec 2016 10:49 AM

எங்களுக்குச் சுதந்திரம் கொடுங்கள்: இயக்குநர் செல்வராகவன் நேர்காணல்

ஒரு இடைவெளிக்குப் பிறகு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் மூலம் ‘உள்ளேன் அய்யா’ சொல்லியிருக்கிறார் செல்வராகவன். அவரை ‘தி இந்து’ தமிழுக்காகச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது, நீங்களும் பேய்ப் படத்துக்குள் போய்விட்டது போலத் தெரிகிறதே...

எனக்குப் பேய்ப் படங்கள் என்றாலே பயம். ஒரு பேய் வந்தால் சாதாரணமாகப் போய்விடும். ஆனால், அதற்குப் பின்னணி இசையெல்லாம் போட்டுக் காட்டுகிறார்கள். எனக்குச் சாதாரணமாக ஒரு பேய் வந்துவிட்டுப் போவது மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. நீங்கள் பயமின்றி இப்படத்துக்கு வரலாம். பேயை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதைத்தான் படமாக எடுத்திருக்கிறேன். அது கண்டிப்பாக ரசிகர்களுக்குப் புதுமையாக இருக்கும்.

‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என உங்களுடைய படங்கள் வெவ்வேறு களத்தில் இருக்கின்றன. வேண்டுமென்றே இப்படிச் செய்கிறீர்களா?

என்னைப் பொறுத்தவரை ஒரே மாதிரி படம் பண்ணுவது, தினமும் 3 வேளையும் இட்லி சாப்பிடுவது மாதிரிதான். திகட்டிவிடும். ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சினிமா என்பது வாழ்க்கை. அது மாறிக்கொண்டேதான் இருக்கும். ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய படங்கள் இப்போது கொண்டாடப்படுகின்றன.

சமீபத்தில் ‘புதுப்பேட்டை’ வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடியதைக் கவனித்தீர்களா?

பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். 10 வருடங்கள் கழித்து ஒரு படத்தைத் திரையிடும்போது கொண்டாடுகிறார்கள் என்றால் எவ்வளவு பெருமிதமான ஒரு விஷயம்.

‘புதுப்பேட்டை’, ‘இரண்டாம் உலகம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய படங்களுக்குப் போதிய வரவேற்பு இல்லாதபோது எங்கே தவறு நடந்ததாக உணர்கிறீர்கள்?

நான் மட்டுமே கஷ்டப்படவில்லை. எல்லா மக்களும்தான் கஷ்டப்படுகிறார்கள். உங்களுக்குச் சரியான ஊதியம் கிடைக்கிறதா என்று கேட்டால், பெரும்பான்மையான மக்கள் ‘இல்லை’ என்றுதான் சொல்வார்கள். ஆனாலும், அது பற்றிக் கவலைப்படாமல் திரும்பி வேலைக்குப் போவார்கள். அதைத்தான் நாங்களும் செய்ய வேண்டி இருக்கிறது.

உங்கள் படங்களில் பிரதான பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் அதுமுழுமையடையாமல் ஏதோ ஒரு கட்டத்தில் பிரதான ஆண் கதாபாத்திரம் முன்னிலை பெறுவது ஏன்?

எனக்கென்று ஒரு முறையே கிடையாது. பெண்கள் சார்ந்த படங்கள் என்பது வேறு ஒரு களம். நீங்கள் கேட்பது என்னுடைய படங்களில் இருக்கும் நாயகிகளுக்கான முக்கியத்துவம். அது என்னுடைய கதைக் களத்துக்கு ஏற்றவாறு இருக்கும். பெண்கள் சார்ந்த படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது.

உங்கள் படங்களும் பாத்திரங்களும் தொடர்ச்சியாக அதிர்ச்சிகளையோ ஆச்சரியங்களையோ தருவது ஏன்?

இயற்கையாகப் பண்ணுவது உங்களுக்கு எதிர்பாராததாக இருக்கிறது என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. எந்தக் களத்தை எடுத்துப் படம் பண்ணுகிறேனோ, அதில் பிரதிபலிக்கிற சில நினைவுகளைத்தான் காட்சிகளாக உருவாக்குகிறேன். உங்களுக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது என்றால், நீங்கள் எந்தச் சூழலில் வளர்ந்தீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் என்று எதற்குள்ளும் அடக்கிவிட முடியாது.

‘ஆயிரத்தில் ஒருவன்’ சொல்லும் விஷயம் என்ன? பலர் அதைத் தமிழர் வரலாற்றுப் பெருமை பேசும் படம்என்றார்கள். முள்ளிவாய்க்கால் சம்பவத்துடனும் சிலர் ஒப்பிட்டுப் பேசினார்கள். அது சரிதானா?

ஒரு இயக்குநருடைய பணி மெசேஜ் சொல்லுவது கிடையாது. அவருடைய வேலை சினிமாவை உருவாக்குவது மட்டும்தான். உள்ளுணர்வுதான் படங்களாக வருகிறது. படம் பார்ப்பவர்கள் எப்படியெல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பது அவர்களுடைய பார்வை.

‘ஆயிரத்தில் ஒருவன்’ ஒரு கதை. இக்கதையை உங்களுக்குக் கதை சொன்ன பாட்டியிடம் கேட்க முடியாது. இயக்குநர் என்பவர் ஒரு கதைசொல்லி. அப்படத்தில் நான் என்ன சொல்லவந்தேன் என்று தோன்றினால் சொல்லிவிடுவேன். உங்களைப் போல எனக்கு ஒரு பிரதிபலிப்பு இருந்திருக்கலாம். ஒருவேளை அதை நீங்கள் அடையாளம் கண்டிருக்கலாம். அவ்வளவுதான்.

‘மயக்கம் என்ன’ படம் யதார்த்தமானது. ஆனால் அதன் முடிவு மட்டும் வலிந்து திணிக்கப்பட்ட சந்தோஷமான முடிவாக இருந்ததே ஏன்?

நான் என்ன நினைக்கிறேனோ அதை மக்களுக்குக் காட்ட வேண்டும். ‘மயக்கம் என்ன’ படத்தை ஏன் சோகமாக முடிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? ஒரு பெண், ஆணுக்காக அவ்வளவு விஷயம் தாங்க வேண்டும் என்றால், அது அவனுக்குப் போடும் பிச்சையாகத்தான் இருக்கும். அவனுடைய திறமைக்காகத்தான் அவள் அவ்வளவு விஷயத்தையும் தாங்கிக் கொண்டாள். இதை நான் எப்படித் தோல்வியில் முடிப்பேன்? அக்கதையின் முடிவு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே எழுதி முடித்தேன். நான் எழுதியதைத்தான் இயக்கவும் செய்தேன்.

தமிழில் நல்ல ஃபேன்டஸி படம் வராததற்குக் காரணம் பட்ஜெட் மட்டும்தானா?

அப்படியெல்லாம் கிடையாது. பொருட்செலவுக்கும் ஃபேன்டஸி படங்களுக்கும் சம்பந்தமே இல்லை. வரலாற்றுப் படங்களையும் எப்படி வேண்டுமானாலும் பண்ணலாம். நிறைய படங்களில் ராஜா என்றாலே நிறைய நகைகளைப் போட்டுக் கொண்டு வருவார் எனக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் ராஜாக்கள் எப்படியிருந்தார்கள் என்பதை நீங்கள் கல்வெட்டுகளில் போய் ஆராய்ச்சி செய்து இயக்க வேண்டும். இன்றைக்கு அதற்கான நேரம் யாரிடமும் இல்லை. அந்த ராஜா, ராணியே போதும் என்றால் சிரித்துவிடுவார்கள்.

இன்றுவரை உங்கள் ‘அடிடா அவளை, உதைடா அவளை’ பாட்டை விமர்சிக்கிறார்கள். அதுவும் இன்றைய சூழலில் பெண்களைத் துரத்துவது, துன்புறுத்துவது எல்லாம் அதிகமாகிவரும் நிலையில், இந்தப் பாடல் குறிப்பிடப்படுகிறது. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முதல் இரண்டு வார்த்தையை மட்டுமே வைத்துக்கொண்டு முடிவு செய்துவிட்டார்கள். அதற்குப் பிறகு வார்த்தைகள் இருக்கிறது. ‘அடிடா அவள.. உதைடா அவள... விட்றா அவள’ என்றுதான் எழுதியிருப்பேன். “ஏப்பா.. விட்டுட்டு போப்பா” என்ற நோக்கத்தில் சொல்லப்பட்டதுதான் அந்தப் பாடல். இன்றைக்கு நாங்கள் நால்வரும் எங்களது அம்மா முந்தானையைப் பிடித்துக்கொண்டுதான் திரிகிறோம். அப்படிப் பொறுப்பில்லாமல் எழுதும் ஆட்கள் நாங்கள் அல்ல.

தமிழில் ப்யூர் சினிமாவுக்கான முயற்சிகள் தீவிரமாக இருப்பதாகவே தெரியவில்லையே?

ப்யூர் சினிமா என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை எல்லாமே சினிமாதான். ஒருவேளை திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்களை ப்யூர் சினிமா என்கிறீர்கள் என்றால், அதற்குத் தனி வாழ்க்கை வாழ வேண்டும். ஒவ்வொரு வகை சினிமா வாழ்க்கைக்கும் தனி வாழ்க்கை வாழ வேண்டும். சினிமாவில் எந்த வாழ்க்கையைத் தேர்தெடுக்கிறோம் என்பதை இயக்குநர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சினிமா மூலமாகக் கதை சொல்லத் தொழில்நுட்பம் எப்படித் துணை புரிகிறது?

தொழில்நுட்பம் என்பது ஒரு கருவி. அதை எப்படி நம்முடைய தேவைக்கு ஏற்பப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். தொழில்நுட்பம் இல்லாமலும் படம் பண்ணலாம். நாம் சொல்ல வந்த ஒரு காட்சியை இன்னும் மெருகேற்றிக் காட்டத்தான் தொழில்நுட்பம் உதவி புரியும். ஒரு சிலர் தொழில்நுட்பம் இல்லாமலே, அருமையான படங்களை உருவாக்குகிறார்கள். ஹாலிவுட் படத்தின் தொழில்நுட்பம் பற்றிப் பேசுகிறோம். ஆனால், இங்கு ஒரு சிறிய இடத்தில் ஒருவர் அதைவிட அருமையான கதைக் களத்தில் படம் பண்ணுகிறார். அவரிடம் அந்தத் தொழில்நுட்பமா இருக்கிறது.

படைப்பாளியின் சுதந்திரம் பற்றி…

ஒவ்வொருவரும் உள்ளே எட்டிப் பார்த்து, இதை எப்படிப் பண்ணலாம், அதை எப்படிப் பண்ணலாம் என்று கேட்கும்வரை நாங்கள் வளர முடியாது. எங்களுக்குச் சுதந்திரம் கொடுங்கள். எங்கு கண்டிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று ரசிகர்களுக்குத் தெரியும். தேவையில்லாமல் வருவதைக் கண்டிப்பாகக் கண்டியுங்கள். எங்களுக்குச் சுதந்திரம் கொடுக்கும்போதுதான், நாங்கள் நிறைய விஷயங்களைச் செய்ய முடியும்.

திரையுலகுக்கு வந்து 15 ஆண்டுகளாகிவிட்டன. திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?

நான் இன்றைக்குக் காலையிலிருந்து இரவு வரை யோசித்தாலே பெரிய விஷயம். கடந்த கால வாழ்க்கையைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x