

‘‘Black comedy ஏன் இன்னமும் தடை செய்யப்படவில்லை? பெரிய எழுத்தாளர்கள்கூட ‘black comedy’ல் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை அறியும் போது வருத்தமாக இருக்கிறது” என்று ஒரு வாசக நண்பர் ஆதங்கப்பட்டார். மேலும் அவரிடம் பேசியபோது, ‘black comedy’ என்பது கறுப்பர்கள் குறித்து நகைச்சுவையாக எழுதுவது என்று தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.
‘Black comedy’யை ‘black humour’ என்றும் ‘dark comedy’ என்றும் அழைப்பதுண்டு. பொதுவெளியில் விவாதிக்கச் சங்கடமாக உள்ள ஒரு விஷயத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தினால், அதை இப்படிக் கூறுவார்கள். இறப்பு, வறுமை, தற்கொலை, வன்முறை, தீவிரவாதம் போன்றவற்றை நகைச்சுவையாக வெளிப்படுத்தினால் அது ‘பிளாக் காமெடி’யாக வாய்ப்பு உண்டு.
‘ஒரு நாயை அதிக விலை கொடுத்து வாங்கிக்கொள்ளப் பலரும் பெரிய வரிசையில் நிற்கிறார்கள். காரணம் கேட்கும்போது ‘இந்த நாய் கடித்ததால் அதை வளர்த்தவரின் மாமியார் இறந்துவிட்டாராம்’ என்று பதில் வருகிறது’ என்ற நகைச்சுவை இந்த வகைதான். ‘மரங்களில் காதலர்கள் தங்கள் பெயர்களைச் செதுக்கி வைப்பது எனக்கு விபரீதமாகப் படுகிறது. காதலரோடு செல்லும்போது கத்தியை ஏன் கொண்டு செல்கிறார்கள்?’ என்பது போன்ற ‘பிளாக் காமெடி’யைப் படித்துவிட்டு காதலைக் கொச்சைப்படுத்துவதா என்று கேள்வி எழுப்புபவர்கள் உண்டு.
இப்போது செய்தி வாக்கியத்துக்கு வருவோம். ‘The main trigger for the current round of conflict is the government’s criticism of the collegium system on the ground that it is opaque.’ இதில் உள்ள சில வார்த்தைகளைத் தெளிவாக்கிக் கொள்வோம்.
துப்பாக்கியின் ஒரு பாகம் ‘trigger’. அதன் மீது விரலை வைத்து உட்பக்கமாக இழுத்தால் துப்பாக்கியிலிருந்து தோட்டா வெளியேறும். ‘Trigger’ என்பதைத் தூண்டச் செய்யும் ஒன்று என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஊருக்குச் செல்லும்போது அது நம் நினைவுகளை ‘trigger’ செய்து, அங்கு நமக்கு நடைபெற்ற கடந்த கால சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வரலாம்.
பெரும்பாலும் அச்சம், கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகள் அல்லது நினைவுகளை தூண்டுகிற ஒன்றைத்தான் ‘trigger’ என்று குறிப்பிடுவார்கள். செய்தி வாக்கியத்தில் அரசுக்கும் நீதித்துறைக்கும் உள்ள தற்போதைய மோதலை தூண்டிவிட்ட ஒன்றைக் குறிப்பிட ‘trigger’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்றைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது என்றால், சாதாரணமானவர்கள் ஒன்றை அறிந்து கொள்ள முடிவதில்லை என்றால் அதை குறிக்க ‘opaque’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அடிப்படையில் ‘opaque’ என்றால், ஒளி புகாத என்று பொருள். ஒரு ஒளிக்கதிர் சுவரின் மீது பட்டால் அந்த ஒளிக்கதிர் அதற்குள் செல்லாது. எனவே சுவர் என்பது ‘opaque’. இதன் எதிர்ச்சொல் ‘transparent’ எனலாம். ஒளிபுகும் தன்மை கொண்ட என்பது இதன் பொருள். எனினும் வழக்கில் ‘transparent’ என்பதை வெளிப்படைத்தன்மை கொண்ட என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள்.
‘Criticism’ என்ற வார்த்தைக்கான பொருளைத் திறனாய்வு எனலாம். என்றாலும் எதிர்மறை விமர்சனங்களை குறிக்கத்தான் இந்த வார்த்தை அதிகம் பயன்படுகிறது. செய்தி வாக்கியத்தில்கூட ‘கொலீஜியம்’ அமைப்பு குறித்து அரசு திறனாய்வு செய்கிறது என்பதைவிட அதைக் குறை கூறுகிறது என்ற பொருளில்தான் ‘criticism’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. சமீபத்தில் இந்த மோதலைத் தூண்டிய முக்கியமான விஷயம் கொலீஜியம் முறை வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்ற அரசின் விமர்சனம். இதைத்தான் செய்தி வாக்கியம் வெளிப்படுத்துகிறது. (தொடரும்) - தொடரின் முழு வடிவத்தை ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் வாசிக்கலாம், aruncharanya@gmail.com