Last Updated : 12 Dec, 2016 11:38 AM

 

Published : 12 Dec 2016 11:38 AM
Last Updated : 12 Dec 2016 11:38 AM

டாடா: ஒரு சாம்ராஜ்யத்தின் சறுக்கல்...

டாடா சன்ஸ் தலைவர் பதவியி லிருந்து சைரஸ் மிஸ்திரி கடந்த அக்டோபர் 24-ம் தேதி அதிரடி யாக நீக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை, பண மதிப்பு நீக்கம் உள்ளிட்ட எத்தனையோ விஷயங்கள் நடந்தாலும், டாடா, சைரஸ் இடையேயான அறிக்கை போர்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. 50 நாட்களை நெருங்கியும் நாளிதழ்களுக்கு இவர்கள் தொடர்ந்து செய்திகளை வழங்கி வருகின்றனர்.



டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டுவிட்டார். ஆனால், 148 ஆண்டு களாக செயல்படும் டாடா குழுமம் என்பது, பல கிளைகளைக் கொண்டது. சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் தலைவராக மட்டுமல்லாமல் டாடா குழுமத் தின் முக்கியமான நிறுவனங்களில் தலை வராகவும் இருக்கிறார். பட்டியலிடப் படாத டாடா சன்ஸ் குழுமத்தில் இருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்குவது எளிது.

ஆனால் பட்டியலிடப்பட்டிருக்கும் முக்கிய நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்குவது கடினம் என்று இந்த துறை வல்லுநர்கள் கணித்தனர். அதுபோலவே சைரஸ் மிஸ்திரியை நீக்குவது எளிமையானதாக இருக்கவில்லை. சைரஸ் மிஸ்திரியை நீக்குவதற்காக டிசிஎஸ், டாடா டெலிசர்வீசஸ், இந்தியன் ஓட்டல்ஸ், டாடா ஸ்டீல், டாடா மோட் டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ் மற்றும் டாடா பவர் ஆகிய நிறுவனங்களின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இம்மாதத் தில் நடக்க இருக்கிறது.

இந்த நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்க வேண்டும் என்றால் அந்த நிறுவனங்களின் பங்குதாரர்களின் ஒப்புதல் தேவை. டிசிஎஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸ் பங்கு அதிகமாக இருப்பதால் அந்த நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி எளிதாக நீக்கப்பட்டார். ஆனால் இயக்குநர் குழுவில் அவர் இன்னும் தொடர்கிறார்.

பங்குதாரர்களுக்கு கடிதம்

இந்த நிலையில் டாடா குழும பங்கு தாரர்களுக்கு ரத்தன் டாடா சில நாட் களுக்கு முன்பு ஒரு கடிதம் எழுதினார். ஏற்கெனவே தொடர்ந்து வரும் அறிக்கை போர், இதன் பிறகு மேலும் அதிகரித்தது. `சைரஸ் மிஸ்திரியை கடந்த அக்டோபர் 24-ம் தேதி டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். ஆனால் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்து நீக்குவதற்கு உங்கள் உதவி தேவை. டாடா குழுமத்தை வழி நடத்துவதற்குரிய நம்பிக்கையை மிஸ்திரி இழந்துவிட்டார். அவராக விருப்ப ஓய்வில் செல்வதற்கு வாய்ப்பு கள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அதனை செய்யாததால் அவரை நீக்க வேண்டியதாயிற்று.

டாடா சன்ஸ் தலைவராக இருப்ப தாலேயே, குழும நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் அவர் நியமனம் செய்யப்பட்டார். டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட வுடன் அவர் குழும நிறுவனங்களில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் வெளி யேறவில்லை. அவர் டாடா குழும நிறுவனங்களின் தலைவர் பதவியில் தொடர்வது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. அதனால் சைரஸ் மிஸ் திரியை நீக்குவதற்கு பங்குதாரர்களின் ஆதரவு தேவை’ என டாடா சன்ஸ் தற்காலிக தலைவர் ரத்தன் டாடா கடிதம் எழுதி இருக்கிறார்.

ரத்தன் கூறுவது பொய்!

பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத் தில் ரத்தன் டாடா கூறியது பொய் என நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி கடிதம் மூலம் கூறியிருக்கிறார். `ரத்தன் டாடா உண்மையை கூறவில்லை. என்னை நீக்கம் செய்யும் முடிவு பல கட்டங்களில் விவாதிக்கப்பட்டதாக கூறுவது அனைத்தும் பொய். அக்டோபர் 24-ம் தேதி இயக்குநர் குழு கூடுவதற்கு ஐந்து நிமிடத்துக்கு முன்பு, எனது அறைக்கு வந்து என்னை நீக்குவது குறித்து தெரிவித்தார்கள். என்னை நீக்குவதற்கு முன்பாக எங்களுடைய செயல்பாடுகளுக்கு ஏற்ற ஊதிய பரிந்துரையை டாடா சன்ஸ் இயக்குநர் குழு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தவிர நான் நீக்கப்பட்ட பிறகு டாடா குழுமத்தின் இமேஜ் அதல பாதாளத்துக்கு சரிந்த பிறகுதான் இந்த கடிதத்தை ரத்தன் டாடா எழுதி இருக்கிறார். ஆனால் என் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைக்கு ஒரு காரணம் கூட அவரால் குறிப்பிட முடியவில்லையே ஏன்?’ என சைரஸ் மிஸ்திரி கேள்வி எழுப்பி இருக்கிறார்.



இன்கவர்ன் எழுப்பும் கேள்வி?

இயக்குநர் குழுவில் இருந்து நீக்கு வதற்கு எந்த காரணத்தையும் ரத்தன் டாடா தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட வில்லை என ஆலோசனை நிறுவன மான இன்கவர்ன் கூறியிருக்கிறது.

டாடா குழுமத்தில் டிசிஎஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய இரு நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்களின் செயல்பாடு சரியில்லை என டாடா சன்ஸ் முன்னதாக தெரிவித்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாடு சிறப் பாக இருக்கிறது என டாடா சன்ஸ் தெரி வித்திருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத் தில் இருந்து ஏன் சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட வேண்டும். இதில் எந்த லாஜிக்கும் இருப்பதாக தெரியவில்லை.

டிசிஎஸ் நிறுவன விதிமுறைகளின்படி தலைவரை நீக்கும் அதிகாரமும் புதிய தலைவரை நியமிக்கும் அதிகாரமும் டாடா சன்ஸ் வசம் இருக்கிறது. ஆனால் இயக்குநர் குழுவில் இருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்க வேண்டியதன் அவசி யம் என்ன? டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஷபூர்ஜி பாலோன்ஜி குழுமம் 18.4% பங்குகளை வைத்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸுக்கு 73.3% பங்குகள் இருக்கிறது என்றால், அதன் மூலம் பாலோன்ஜி குழுமத்துக்கும் 13.4% உரிமை உள்ளது. 13.4% பங்குகள் வைத்திருக்கும் ஒருவர் ஏன் இயக்குநர் குழுவில் தொடரக்கூடாது என்பதற்கான காரணம் புரியவில்லை. அதனால் சைரஸ் மிஸ்திரி நீக்கத்துக்கு எதிராக பங்குதாரர்கள் வாக்களிக்க வேண்டும் என இன்கவர்ன் கூறியிருக்கிறது.

அதே சமயத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஓட்டெடுப்புக்கு முன்னதாக சைரஸ் மிஸ்திரி ராஜினாமா செய்வது அவருக்கு நல்லது. அந்த நிறுவனத்தில் 73.3 சதவீத பங்குகள் டாடா சன்ஸ் வசம் இருக்கும் பட்சத்தில் அவருக்கு எதிரான தீர்மானம் எளிதாக நிறைவேறும். அது அவருக்கு மேலும் அவப்பெயரை உருவாக்கும் என்றும் கூறியிருக்கிறது.

நான்கு மாதங்களுக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று அக்டோபர் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இன்னும் இரு மாத காலம் மட்டும் இருக்கும் சூழ்நிலையில் ரத்தன் - சைரஸ் இடையேயான பனிப்போர் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அடுத்த 150 வருடங்களுக்கான அடித்தளம் தற்போது அமைக்கப் பட்டு வருவதாக கடந்த செப்டம்பர் மாதம் அப்போதைய தலைவர் சைரஸ் மிஸ்திரி குறிப்பிட்டார். ஆனால் 2018-ம் ஆண்டு அந்த குழுமத்தின் 150-வது ஆண்டு விழா எப்படி இருக்கப்போகிறது?

-karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x