

ஜெயலலிதா காலமானார்
சென்னை அப்போலோ மருத்துவ மனையில் 74 நாட்கள் சிகிச்சையிலிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்குக் காலமானார். அதற்கு முந்தைய நாள் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவருக்கு அவசர உதவி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 68. சினிமா நடிகையாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயலலிதா, 1960-கள் தொடங்கி 70-கள் வரை தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தார். எம்.ஜி.ஆர். நிறுவிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக 1982-ல் அரசியலில் நுழைந்தார். பின்னர் அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரானார். மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 1989-ல் எம்.ஜி.ஆர். மரணமடைந்த பிறகு இரண்டாகப் பிரிந்த அதிமுகவை ஒருங்கிணைத்து, மாநில அளவிலும் தேசிய அளவிலும் முக்கியமான சக்தியாக ஜெயலலிதா திகழ்ந்தார்.
முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்
தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்த ஜெ. ஜெயலலிதாவின் மறைவையடுத்து, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார். டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவில் ராஜ்பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில், 31 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ளார். 2001 முதல் 2002 வரையும், 2014 முதல் 2015 வரையும் இடைக்கால முதல்வராக அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
அரசியல் சாசன அதிகாரம் உண்டு
காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பாகத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் ஆகிய மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீப மிஸ்ரா தலைமையிலான அமர்வு டிசம்பர் 9 அன்று தெரிவித்தது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 2000 கன அடி நீர் வழங்க, கர்நாடக அரசுக்கு விதித்த இடைக்கால உத்தரவு தொடரும் என்றும் தெரிவித்தது. மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் தாவா சட்டத்தின் அடிப்படையிலும், 262(2)-ம் அரசியல் சாசனப் பிரிவின் கீழும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பே இறுதியானது என்று மத்திய அரசு கூறியது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்க இடமில்லை என்று மத்திய அரசு வாதாடிய நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
எஃப்.டி.சி. மருந்துகள் தடை ரத்து
ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் (எஃப்.டி.சி.) என்று சொல்லப்படும் 344 நிலையான கலப்பு மாத்திரை, மருந்துகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை, டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. மத்திய அரசால் மார்ச் 10-ம் தேதி அறிவிப்பாணையாக இத்தடை வெளியிடப்பட்டது. இத்தடையை எதிர்த்து மருந்து நிறுவனங்கள் சேர்ந்து 454 மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை விசாரித்துத் தீர்ப்பு கூறிய நீதிபதி ராஜிவ் சஹாய் எண்ட்லா, மருந்துகள் மற்றும் அழுகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் மத்திய அரசு தடைவிதித்திருப்பதாகக் கூறினார். விஞ்ஞானபூர்வமாக எஃப்.டி.சி. கலப்பு மருந்துகளின் பயன்கள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த மருந்துகளின் விற்பனைக்கான தடையை ரத்து செய்திருப்பது பொது நல மருத்துவ நிபுணர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
மாக்னஸ் கார்ல்சன் உலகச் சாம்பியன்
நார்வே நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சன், உலகச் சதுரங்க சம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது முறையாகச் சேம்பியன் பட்டத்தை வென்றார். ரஷ்யாவின் செர்கய் கர்ஜாகினை இறுதிக் கட்டத்தில் வீழ்த்தினார். 2004-ல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை 13 வயதில் வென்ற மாக்னஸ் கார்ல்சன் கிளாசிகல் (classical), ரேபிட் (rapid), பிளிட்ஸ் (blitz) ஆகிய அனைத்து வகை சதுரங்க விளையாட்டுகளிலும் தரப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர். 19 வயதில் உலகத் தரப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். 2013 நவம்பர் மாதம் உலகச் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தினார். 2013-ல் அமெரிக்காவின் டைம் இதழ், உலகில் தாக்கம் செலுத்தும் நூறு ஆளுமைகளில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது.