

‘இந்த ஆண்டின் வார்த்தை என்று ஒரு பிரபல அகராதி ‘Gaslighting’ என்பதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறது. அந்த வார்த்தை எதைக் குறிக்கிறது?’ என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். ‘Gas stove’ஐ ஏற்றுவதை அந்தச் சொல் குறிக்கவில்லை என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.
1944இல் வெளியான ஓர் அமெரிக்க திரைப்படம் ‘Gaslight’. அந்தத் திரைப்படத்தில் ஒரு இளம்பெண் தன்னை மனநிலை சரியில்லாதவர் என்று எண்ணத் தொடங்கிவிடுவாள். அதற்குக் காரணம், அவள் கணவன். அவளை விதவிதமாகக் குழப்பி அப்படி நினைக்கச் செய்துவிடுவான்.
ஒருவரது மனநிலையை அவரே சந்தேகப்பட வைப்பது மட்டுமல்ல வேறொரு விதத்திலும் ‘gaslighting’ செய்பவர் செயல்படக் கூடும். வாசு என்பவரைப் பற்றி உங்களுக்கு உயர்ந்த கருத்து உண்டு என்று வைத்துக்கொள்வோம். ராபர்ட் என்பவர் அந்த வாசு தவறானவர் என்று விதவிதமான சூழலை உருவாக்கி உங்களைத் தவறாக நம்ப வைத்துவிட்டால், அதுவும் ‘gaslighting’தான். இந்த இடத்தில் ராபர்ட் ‘gaslighter’ என்றழைக்கப்படுவார்.
இப்போது ‘gas’ என்று தொடங்கும் வேறு சில வார்த்தைகளின் அர்த்தங்களையும் தெரிந்து கொள்வோமே. ‘Gastric’ என்றால் வாயுக்கோளாறு என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால், அப்படிக் கூறும்போது அவர்கள் தங்கள் வயிற்றை இயல்பாகத் தடவிக்கொள்வது வழக்கம். அதாவது அவர்கள் கூறுவது முழுவதும் சரியில்லை என்றாலும், அவர்களது உடல்மொழி சரியாகவே இருக்கிறது!. இரைப்பை தொடர்பான, வயிறு சார்ந்த என்பதுதான் ‘gastric’ என்ற வார்த்தைக்குப் பொருள்.
‘Gasket’ என்றால்? நகைகள் போன்ற மதிப்பு வாய்ந்த பொருள்களை போட்டு வைக்கப் பயன்படுத்தும் பெட்டகம்தானே’ என்று சிலர் கூறக் கூடும். அது ‘gasket’ அல்ல, ‘casket’.
உலோகப் பரப்புகளுக்கு இடையே நீர் அல்லது காற்று கசிந்துவிடாமல் இருக்க ரப்பர் போன்ற ஒன்றைப் பொருத்தி வைப்பார்கள். இதை ‘gasket’ என்று சொல்வார்கள். குக்கர் மூடிக்குள் பொருத்தப்படும் ரப்பர் வளையம்கூட ‘gasket’தான். ‘Astronomer’ என்றால் விண்வெளி வீரர். ‘Gastronomer’ என்பது யாரைக் குறிக்கிறது? யூகியுங்கள்.
அற்பமான விஷயங்கள் குறித்து நீட்டி முழக்கிப் பேசுபவர்களை ‘gasbag’ என்று கிண்டலாகக் குறிப்பிடுவார்கள். நாக்கை சப்புக் கொட்டி சாப்பிடுபவர். அதாவது உணவை ரசித்து ருசித்து வர்ணித்து சாப்பிடுபவரைத்தான் ‘gastronomer’.
***
இப்போது செய்தி வாக்கியத்துக்கு வருவோம். ‘After a bungled coup attempt, Peru’s president falls’.
‘Bungle’ என்பது ஒன்றைத் தவறாகச் செய்வது. அதாவது குளறுபடி செய்வது. அரைகுறையாகச் செய்வது. இதற்கு சமமான சொல் ‘botch’ எனலாம். அடுத்து ‘coup’ சொல்லைப் பார்ப்போம். ஓர் அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. ராணுவமோ அல்லது வேறு இயக்கமோ வன்முறையைப் பின்பற்றி ஆட்சி மாற்றத்தக் கொண்டுவந்தால் அதை ‘Coup’ என்பார்கள். இது சட்டமீறலாக நடக்கும் ஒன்று.
‘Autocoup’ என்ற ஒன்றும் உண்டு. சட்டப்படி தலைமை ஏற்கும் ஒருவர் தன் பதவியை தக்கவைத்துக்கொள்ள சட்ட மீறலான செயல்களில் ஈடுபட்டால், அதை ‘autocoup’ என்று கூறுவார்கள். தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க, நமது முன்னாள் பிரதமர் ஒருவர் எமர்ஜென்சி சட்டத்தைக் கொண்டுவந்துதான் தொடர்ந்து பிரதமராக இருந்ததை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். அரசியலமைப்பு சட்டத்தை ரத்துசெய்வது, நீதிமன்றங்களை இயங்க விடாமல் தடுப்பது இப்படி எல்லாம் செய்து ஒருவர் தன் பதவியைத் தக்க வைத்துக்கொண்டால் அதுவும் ‘autocoup’தான்.
‘A palace coup’ என்பது அரண்மனை தொடர்பானதல்ல! ஒரே கட்சி அல்லது அமைப்பிலுள்ள ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரை நீக்கிவிட்டு தாங்கள் ஆட்சியில் அமர்வதுதான் அது. ‘Coup’, ‘revolution’ இரண்டும் ஒன்றுபோலத் தோன்றலாம். ஆனால், வேறுபாடு உண்டு. ‘Coup’ என்பது சிறிய குழுவால் உருவாக்கப்படுவது. அது திட்டமிட்டு செயல்படுத்தப்படும் . ‘Revolution’ என்பது தானாக உருவாகும் ஒன்று. அதற்கு முன் இணைந்து செயல்பட்டிராதவர்கள் இணைந்து நடத்துவது
‘revolution’. இரண்டினாலும் ஆட்சி அகற்றப்படலாம் என்பது வேறு விஷயம்.
செய்தி வாக்கியத்தில் உள்ள ‘President falls’ என்பதற்கு அதிபர் கீழே விழுகிறார் என்று பொருள் அல்ல என்பதும் அவர் தன் ஆட்சியை இழக்கிறார் என்பதுதான் பொருள் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
நம்மில் பலரும் ‘waterfalls’ என்று அருவியைக் குறிப்பிடுகிறோம். அது ஆங்கிலத்தில் ‘waterfall’தான். அப்புறம் இன்னொன்று, இலையுதிர் காலத்தையும் ‘fall’ என்று குறிப்பிடுவதுண்டு.
(தொடரும்)
ஜி.எஸ்.எஸ். - aruncharanya@gmail.com