தினமும் மனதைக் கவனி - 7: கண்ணை மறைக்கக் கூடாது காதல்

தினமும் மனதைக் கவனி - 7: கண்ணை மறைக்கக் கூடாது காதல்

Published on

காதலிக்கும்போது சிலவற்றில் கவனத்துடன் இருக்க வேண்டும். காதலிக்கும்போது பெரிதாகத் தெரியாத குடி, போதைப் பழக்கம், திருமணமான பின்பு அதிகரித்து, அடிமைப்படுத்தலாம். போதை நோயின் ஆரம்ப கால அறிகுறிகளைக் கண்டறியுங்கள். முழு விவரமும் தெரிந்து கொண்டபின், மறு சீராய்வு செய்யுங்கள். காரணம், போதை நோயிலிருந்து மீள்வது ஒரு போராட்டம். காதலித்துக் கரம்பிடித்த பின் இவற்றைத் தெரிந்துகொண்டு சிக்கித் தவிப்பதற்குப் பதில் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

மனநலக் கோளாறுகளும் இதுபோல்தான். பிற்காலத்தில் முற்றிப்போகும்போதுதான் மனநல மருத்துவரை அணுகத் தோன்றும். அதனால், இப்படியொரு பிரச்சினை காதலருக்கு உள்ளதாகத் தோன்றினால், மனநல மருத்துவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் கோளாறு அதிகரித்தால் போராட நீங்கள் தயாரா என்று யோசித்து முடிவெடுங்கள்.

மேலே சொல்லப்பட்ட பிரச்சினைகள் பெண்களுக்கும் இருக்கலாம், போதை உட்பட. அவை உங்களுக்கு இருந்தால் உடனே கவனியுங்கள். போதை, மன நோய் இரண்டிலும் மரபணுவின் பங்களிப்பும் இருக்கலாம். காதலன்/உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இவை இருக்கின்றனவா என்று கண்டறியுங்கள். மிரண்டுபோக வேண்டாம்; வரும் முன் காப்பதற்கான முயற்சி இது. ‘ரப்பர் பந்தா’க இருப்பவர்கள், உணர்வுப் போராட்டங்களிலிருந்து விலகி, படிப்பை முடித்து, தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள். காதலே வேண்டாம் என நான் சொல்லவில்லை. ஆனால், வாழ்க்கை அனுபவங்கள் இல்லாத பருவத்தில், என்னென்ன சோதனைகள் வரலாம் என்று வெளிச்சமிட்டுக் காட்டுகிறேன்.

அலையில் சிக்கக் கூடாது

வெற்றிகரமாகப் படிப்பை முடித்து நல்ல வேலையில் அமர்வது ஒரு பெண்ணுக்கு முதல் மைல் கல். வேலையில் கிடைக்கும் ஊதியம் அவளைப் பரவசப்படுத்தும். பொருளாதாரச் சுதந்திரத்தை அடைந்தவுடன், ஆசைப்பட்டதையெல்லாம் வாங்க மனம் விரும்பும். இந்த இடத்தில் பிரேக் போடுவது நல்லது. உங்களுக்கு உயர்கல்வியைக் கொடுக்க, பெற்றோர் செய்த தியாகங்களை உணர்ந்து, அவர்களது நெருக்கடியைச் சமாளிக்க உதவுங்கள். வேலையில் காலூன்றி, நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அசந்துவிட்டால் பின்னால் வருபவர் உங்களைத் தாண்டிப் போகும் ‘rat race’ காலம் இது.

பல நிறுவனங்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்தவுடன், தேவையான திறன்களைப் பயிற்சி மூலம் (Life Skills Training) அளித்தபின் வேலையில் அமர்த்திக்கொள்கிறார்கள். வேலையின் ஆரம்ப காலத்தில் தினம் புதுப் புது அனுபவங்கள் வெளிப்படும். விழிப்போடிருந்து அவற்றிலிருந்து தேவையானதை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள். தொழிலில், பிறரிடம் பழகுவதில், நேர்த்தியாக அழகுபடுத்திக்கொள்வதில், ஜொள்ளு விடும் ஆண்களைத் திறமையாகச் சமாளிப்பதில் இருக்கும் நுணுக்கங்களை உணவு இடைவேளை அரட்டையிலும் அனுபவசாலிகளின் முன்னுதாரணங்களிலும் தெரிந்துகொள்வீர்கள். ஐ.டி. வேலையோ வேறு வகை. பகல், இரவு ஷிஃப்ட் தினசரி வாழ்க்கை முறையைத் தலைகீழாக்கிவிடும். பார்ட்டிகள், வெளியூர் பயணங்கள் இவையெல்லாம் நடக்கும்போது, ஆண் பெண் வேறுபாடின்றிப் பழக வேண்டும். குடி, போதை, பாலியல் சபலங்கள் / தொல்லைகள் இவற்றுக்குக் கூடுதலான சந்தர்ப்பங்கள் அமைவதால், உங்களுக்குள் அழுத்தமான தாக்கம் ஏற்பட்டு, கலாச்சார அதிர்வலைகள் குழப்பிவிடும். இந்த அலையில் மாட்டியவர்களும் உண்டு; தப்பித்தவர்களும் உண்டு!

குழுவாகச் செயல்படும்போது நான் என்பது மறைந்து நாம் என்று பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்வீர்கள். தலைமை ஏற்கும் திறமையை வளர்த்துக்கொள்ள பல தருணங்கள் கிடைக்கும். நழுவ விடாதீர்கள். உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் நடவடிக்கைகள் உங்கள் பெற்றோரின் யூகத்திற்கு அப்பாற்பட்டிருக்கும். சம்பாதிக்க ஆரம்பித்த நாள் முதல் உங்கள் வாழ்விற்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள். உங்கள் செயல்களின் பின்விளைவுகளுக்குப் பொறுப்பும் நீங்களேதான். புரிகிறதா?

(மனம் திறப்போம்)

கட்டுரையாளர் உளவியல் ஆற்றாளர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in