

அண்மையில் நீலக் குறிஞ்சிப் பூக்களைப் பார்ப்பதற்காகக் கேரளத்தில் உள்ள சதுரங்கப் பாறைக்குச் சென்றிருந்தேன். அதனருகில் காற்றாடி மெட்டு என்று ஓரிடம் இருப்பதாக அப்பகுதி நண்பர்கள் கூறினார்கள். பெயர் புதுமையாக இருக்கிறதே எனச் சென்று பார்த்தால் மலையுச்சியில் காற்றாலைகள் பொருத்தப்பட்டிருந்தன. புதுப்பிக்கத்தக்க எரியாற்றல்களில் காற்றாலை முதன்மையானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதை நிறுவும் இடங்கள் குறித்து நிறைய விமர்சனங்கள் உள்ளன.
காற்றாலை கேட்கும் பலி: மின் உற்பத்தியில் நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களில் ஓர் அலகு (யூனிட்) மின்சாரத்துக்கு 634 – 1,630 கிராம் வரை கார்பன் டை ஆக்சைடு வெளியாவதாகக் கணக்கீடு. அதுவே சூரியத் தகடு மின்சாரத்தில் 36-90 கிராம் கார்பன் வெளியாகிறது. காற்றாலைகள் எனில் 9-18 கிராம் என்பதால் புதுப்பிக்கத்தக்க எரியாற்றலில் காற்றாலை மின்சாரம் வரவேற்கக்கூடிய ஒன்றே. ஆனால், அதைக் காடுகளில் நிறுவுவது அடிப்படை நோக்கத்தையே கேலிக்கூத்தாகி விடுகிறது.
காடுகளுக்குள் காற்றாலைகளை நிறுவுவது அதிகரித்துவருகிறது. காற்றாலை களின் இரைச்சல் ஒலி அதிகம். காடுகளில் இயல்பான ஒலியளவைக் காட்டிலும் இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக 85 டெசிபல் அளவில் உள்ளது. இந்த ஒலி மாசின் விளைவாகக் காட்டுயிர்கள், காற்றாலை இருக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவுக்கு நகர்கின்றன. அது காட்டின் எல்லைகளில் உயிரின – மனித எதிர்கொள்ளலை அதிகரிக்கலாம். காற்றாலை மீது பறவைகள் மோதி இறப்பதும் அதிகரிக்கிறது. அதனால் அவ்விடங்களில் காட்டுப் பறவைகளின் எண்ணிக்கையும் குறைகிறது.
காட்டை சூறையாடிய கதை: காடுகளைப் பாதுகாக்கிறோம் என்று பழங்குடிகளை விரட்டியடிக்கும் அரசாங்கம், காடுகளுக்குள் பெரு நிறுவனங்களை மட்டும் இரண்டு கரம் நீட்டி வரவேற்கிறது. அதிலொரு கதையைப் பார்ப்போம். புனே அருகிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மகாராஷ்டிர அரசு எனெர்கான் (Enercon) என்னும் நிறுவனத்துக்குக் காற்றாலைகளை நிறுவ அனுமதி வழங்கியது.
அப்பகுதி மலை அணில்களுக்கான பீமா சங்கர் காப்பிடத்துக்குத் தெற்கே சற்றுத் தொலைவில் அமைந்திருந்தது. இது சூழலியல் கூருணர்வுமிக்க பகுதி (Ecological Sensitive Area) என்பதால், 2002இல் இதைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியக் காட்டுயிர் அமைப்பு (Indian Board of Wild life) கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், 2009இல் காற்றாலைத் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக வனப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து (1980) விலக்கு அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும் அவை வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின்படி வனத்துறையிடமிருந்து கட்டாய ஒப்புதல் பெறவேண்டிய நிலையிருந்தது. ஆனால், எனர்கான் நிறுவனத்துக்கு இந்தியக் காட்டுயிர் அமைப்பு விதித்துள்ள பத்து கிலோமீட்டருக்கு இயந்திர ஆலைகள் கூடாது என்கிற நிபந்தனை இடையூறாக இருந்தது.
அதனால், உள்ளாட்சி நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்டதாகப் போலித் தடையற்ற சான்றிதழ் உருவாக்கப் பட்டுக் கோப்புகளில் இணைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் ஒரு வனத்துறை மேலதிகாரி போலி அறிக்கை ஒன்றை உருவாக்கி, அத்திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதலை வழங்கினார் என்று விவரிக்கிறார் சுற்றுச்சூழல் அறிஞர் மாதவ் காட்கில்.
சொத்தை இழக்கிறோம்: காலநிலை மாற்றம் நம்மை மிரட்டிக்கொண்டிருக்கும் சூழலில் இந்தியாவில் உற்பத்தியாகும் பசுங்குடில் வாயுக்களில் 11.25 விழுக்காட்டினை நம் காடுகள் உள்வாங்கிக்கொள்கின்றன. வளிமண்டலத்தில் இருப்பதைப் போன்று இரண்டு மடங்கு கார்பனைக் காடுகளும் காட்டு மண்ணும் சேமித்து வைத்துள்ளன என்பது உணவு - வேளாண் அமைப்பு (FAO) தரும் தகவல்.
இந்நிலையில் கர்நாடக அரசு ஏற்கெனவே 35 ச.கி.மீ. பரப்புள்ள காடுகளைக் காற்றாலைகளுக்கு ஒதுக்கியுள்ளது. சர்ச்சைக்குரிய வேதாந்தா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட காட்டு நிலப்பரப்பு அனைத்தும் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார்பனைப் பற்றிய ஒரு சிறிய கணக்கைப் பார்ப்போம். புவியின் மொத்த உயிரிநிறை (Biomass) 55,000 கோடி டன் கார்பனுக்குச் சமமானது. புவியின் மொத்த நிறையில் 760 கோடி மனிதர்களுடைய நிறை என்பது ஏறத்தாழ 0.01% பங்கு மட்டுமே. இங்குதான் தாவர நிறைகளின் பங்கை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
தாவரங்களின் மொத்த நிறை 82% ஆகும். ஆக, மனித பங்கான 0.01 விழுக்காடுதான், காட்டின் 82 விழுக்காட்டுப் பங்கினை அழித்துவருகிறது. இதில் தமிழ்நாட்டின் நிலையையும் நாம் தெரிந்துகொண்டாக வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிக்கப் பட்டதால் தமிழகத்தின் வெப்பநிலை 0.25 பாகை செல்சியஸ் உயர்ந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. (அடுத்த வாரம்: அசலும் வட்டியும்) - நக்கீரன், vee.nakkeeran@gmail.com கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்