

ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனப் படிப்பு களில் சேர விருப்பமா? பிளஸ் டூ தேர்வர்களுக்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.), மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது.
தேவையான தகுதி
பிளஸ் டூ தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு இத்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப் படாது. ஆனால் இத்தேர்வை எழுத பிளஸ் டூ பொதுத் தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 65 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும். விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களின் ஆதார் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு முறை
ஜே.இ.இ. தேர்வு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்தியக் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேரலாம்.
அதைத் தொடர்ந்து நடத்தப் படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி. கல்வி நிறுவனங்களில் சேரலாம். இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மைத் தேர்வைச் சென்னை ஐ.ஐ.டி. நடத்த உள்ளது.
தேர்வு நடைபெறும் நாட்கள்
முதல்நிலைத் தேர்வு (JEE Main): 2017 ஏப்ரல் 2, 8, 9. முதன்மைத் தேர்வு (JEE Advanced): 2017 மே 21.
விண்ணப்பிக்கும் முறை
முதல்நிலைத் தேர்வுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் 2017, ஜனவரி 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த ஜனவரி 3 கடைசி நாள். முதன்மைத் தேர்வுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 2 கடைசித் தேதியாகும்.
கூடுதல் விபரங்களுக்கு: >http:/www.jeemain.nic.in/