Published : 05 Dec 2022 04:59 PM
Last Updated : 05 Dec 2022 04:59 PM

குறும்படக் கலைஞர்களுக்கு இந்திய அளவில் 75 விருதுகள்! அசத்தும் செய்தி ஒளிப்பரப்பு அமைச்சகம்

நடிகர் நம்ரிதாவுடன் இசையமைப்பாளர் அபிஷேக் ராஜா

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகமும் (NFDC), மத்திய தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்பு அமைச்சகமும் (MIB) இணைந்து, சிறந்த முழு நீளத்திரைப்படங்களை தெரிவு செய்து ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி வருவதை அறிவோம்.

கடந்த ஆண்டு 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குறும்படப் படைப்பாளிகள், கலைஞர்களுக்கும் இதுபோன்ற விருதினையும் அங்கீகாரத்தையும் வழங்க முடிவு செய்தனர். சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை எழுத்தாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கலை இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த உடையலங்காரம் மற்றும் ஒப்பனையாளர், சிறந்தப் படத் தொகுப்பாளர், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த அனிமேசன், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பத்து விதமான பிரிவுகளின் கீழ் மொத்தமாக 75 கலைஞர்களை தேர்வு செய்கிறார்கள்.

வெண்ணிற இரவுகள் குறும்பட இயக்குநர் டேவிட் உடன் நடிகர் நம்ரிதா

சிறந்த குறும்பட படைப்புகளை உருவாக்கியுள்ள யாரும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். https://iffigoa.org/ என்கிற இணையத தளத்துக்குச் சென்று 75 CREATIVE MINDS OF TOMORROW என்கிற பிரிவில் விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்கான முதன்மைத் தகுதிகளாக 18 முதல் 35 வரையிலான வயது வரம்பும் இந்திய குடியுரிமையும் அவசியம். விண்ணப்பிக்கும் குறும்படம், கதைப் படமாகவோ, அனிமேசன் அல்லது இசை வடிவில் என இருக்கலாம். 10 நிமிட நீளத்துக்குள் இருக்க வேண்டும். அவ்வளவுதான் விதிமுறைகள். தனிப்பட்ட கல்வித் தகுதியோ வேறு எந்த பரிந்துரையோ இதற்கு தேவைப்படுவதில்லை.

இந்திய அளவில் திறமையாளர்களை தேர்வு செய்வதால் மிக அதிக எண்ணிக்கையில் கடுமையான திறன் போட்டி சூழல் உருவாகிறது. நேர்த்தியான படைப்பாக்கத்துடன், தொழில்நுட்பங்களையும் கலைஞர்களையும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வெற்றியாளர் என்பதில் சந்தேகமே இல்லை.

சில பிரிவுகளில் போட்டி சூழல் அதிகமாக நிலவுவது உண்மை. உதாரணமாக ஒளிப்பதிவாளர் தேர்வு என்பது எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்ற காட்சிமொழியைக் கையாண்டவராகவும் அதேநேரம் தொழில் நுட்பத்தை கதை சொல்லலுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் கற்பனைத் திறன் மிக்கவராகவும் (Creative Storytelling expert ஆக) இருந்தால் போதும். இன்று பெரும்பாலான குறும்படப் படைப்பாளிகள் ஒளிப்பதிவின் வழி சிறந்த கதை சொல்லலில் தேர்ச்சியும் பல படங்களை படமாக்கிய அனுபவத்தின் விளைவாக உருவான முதிர்ச்சியும் காரணமாக ஒளிப்பதிவுப் பிரிவில் போட்டி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இதில் இருக்கிறது எனலாம்.

கோவா பட விழாவில் கொண்டாட்டம்!

பெருந்தொற்று கால முடக்கங்களின் தொடர்ச்சியால் 75 CREATIVE MINDS OF TOMORROW விருதுகளின் முதல் பதிப்புக்கான தேர்வுகளில் விண்ணப்பித்துக் கலந்து கொண்டவர்களை விட இந்த ஆண்டுக்கான (2022) பதிப்புக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. அதனால் 75 தகுதியான வெற்றியாளர்களைத் தேர்வு செய்வது நீதிபதிகள் குழுவுக்கு பெரும் சவலாக இருந்தது எனலாம். தவிர வெற்றியாளர்களைத் தேர்வு செய்தபின் அவர்களின் கலைத் திறனை 53 மணி நேரத்துக்குள் பரிசோதிக்கும் புதிய சாகசமும் நிகழ்ந்தது.

75 CREATIVE MINDS OF TOMORROW என்கிற இந்த பிரிவில் தேர்வு செய்யப்படுபவர்களை, கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும் இந்திய அரசின் சர்வதேசத் திரைப்பட விழாவுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு தந்து, சிறப்பு அழைப்பாளர்களாக வரவேற்கிறார்கள்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கோவா சென்று திரும்புவதற்கான விமான பயண சீட்டும் ஆறு நாட்கள் தங்குவதற்கான மூன்று நட்சத்திர விடுதி அறை வசதியும், உணவு, போக்குவரத்திற்கான வாகன வசதியும், திரைப்பட விழாவின் எந்த ஒரு பகுதிக்கும் எந்த நேரத்திலும் செல்வதற்கான சிவப்பு அனுமதி அட்டையும் தரப்படுகின்றன.

தவிர இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 75 கலைஞர்களையும் ஐந்து குழுக்களாக பிரித்து, அவர்களுக்கு இடையே ஒரு குறும்பட போட்டி நடத்த விழாக் குழுவினர் முடிவெடுத்தனர். ஒவ்வொரு குழுவிலும் மேற்கண்ட அனைத்து துறை கலைஞர்களும் 15 பேர் இருக்கும்படி சமமாக இருக்கும்படி அணி பிரித்துக் கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான கேமரா கருவிகள், படத்தொகுப்பு மையங்கள், ஒலி மற்றும் இசைச் சேர்ப்பு மையங்களும் தரப்பட்டன. இந்த வசதிகளைப் பயன்படுத்தி, கோவாவில் தேவைப்பட்ட இடங்களுக்கு சென்று 53 மணி நேரத்திற்குள் அவர்கள் தங்களது அணிக்கான குறும்படத்தை உருவாக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் அணிக்கு ரூபாய் 2,25,000/- (ரூபாய் இரண்டு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம்) ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. என்ன மூச்சு முட்டுகிறதா?

திரைப்படச் சந்தையில் உலவலாம்!

இன்னும் பலவிதமான நன்மைகள் உள்ளடங்கி இருக்கிறது குறும்படக் கலைஞர்களைக் கொண்டாடும் இந்த 75 CREATIVE MINDS OF TOMORROW விருது மற்றும் அங்கீகாரப் பிரிவு.

குறிப்பாக உலகம் முழுவதிலுமிருந்து தயாரிப்பாளர்களும் திரைப்பட விழா நிறுவனங்களின் பிரதிநிதிகளும் திரைப்படங்களை வாங்கி அவரவர் நாட்டில் வெளியிடுபவர்களும் ஓரிடத்தில் குவியுமிடங்களில் ஒன்றுதான் கோவா படவிழாவின் திரைப்பட சந்தை (Film Bazar). இதில் பங்கெடுக்க ஆண்டு முழுவதும் தங்களது படைப்புக்காக உழைப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. திரைப்பட விற்பனை மற்றும் சந்தையிடல் வாய்ப்புகளின் நேரடித் தளமாக கருதப்படும் இந்த சந்தைக்கு நுழைவுக் கட்டணமே ரூபாய் 17,000 முதல் ரூபாய் 36,000/- வரை செலுத்த வேண்டும்.

குறும்படம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 கலைஞர்களும் பிலிம் பஷார் மூலம் தங்களது முழு நீளத் திரைப்பட வாய்ப்புகளைத் தேடலாம். இந்தத் திரைப்பட சந்தை நடைபெறும் ஐந்து நாட்களும் தங்களுடைய படத்தையோ காட்சிகளையோ அங்கே புதிய படைப்புகளை வாங்க வருபவர்களுக்குக் காட்டலாம். இதன் வழியே உலக திரைப்படங்களில் இயக்க, நடிக்க, பணிபுரிய வாய்ப்புகள் அமைகின்றன. தங்களுடைய திரைக்கதையை வாசித்து காட்டி தயாரிப்பாளர்களை குறிப்பிட்ட பங்கு முதலீடு செய்ய அழைக்கலாம். ஆக திரைப்பட சந்தையின் அத்தனை பயன்களையும் 75 கலைஞர்களும் திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறார்கள்.

இது தவிர, கோவாவின் வெவ்வேறு இடங்களில் எட்டு நாட்கள் நடைபெறும் உலக திரைப்பட திரையிடல்களுக்கும், மூத்த திரைப்பட கலைஞர்களின் திரை வகுப்புகளுக்கும் (Master Class) திரைப்பட தொழில்நுட்ப கண்காட்சிக்கும் விழாவின் தொடக்க மற்றும் இறுதி நிகழ்வுக்கும் சென்று பங்கெடுக்கலாம்.

75 பேரில் 9 பேர் தமிழ்நாட்டிலிருந்து…!

இவ்வளவு சிறப்புகளை கொண்ட 75 CREATIVE MINDS OF TOMORROW பிரிவில் அங்கீகாரம் பெற்ற 75 குறும்படக் கலைஞர்கள் ஒன்பது பேர் தமிழ்நாட்டில் சென்று வெற்றிபெற்றவர்கள் என்பது முக்கியமான ஒன்று.

இப்பிரிவு குறித்து மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது: “பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் வெவ்வேறு நிலப்பரப்புகளில் இருந்து ஆயிரம் குறும்படப் படைப்பாளிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களிலிருந்து 75 பேரை தேர்வு செய்ததாக கூறினார்.

75 குறும்பட கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவில் முக்கியமான கலைஞர்கள் பங்கெடுத்து ஆயிரம் குறும்படங்களை பார்த்து தகுதியான திறமையாளர்களை தேர்வு செய்திருக்கிறார்கள். மராத்தி திரைப்பட இயக்குநர் நிகில் மகாஜன், இந்தி திரைப்பட உலகில் ஓடிடி தளங்களில் சிறந்த தொடர்களை திட்டமிட்டு உருவாக்க காரணமாக இருந்த உஜ்வல் ஆனந்த் , தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரான பிஷக் ஜோதி, இந்தி திரைப்படமான ‘முஸாபிர்’இல் அறிமுகமான இளம் நடிகர் மாளவிகா, தென்னிந்திய நடிகர்பிரனிதா, அஸ்ஸாமி திரைப்பட நடிகர் ஐமீ பருவா, அனிமேசன் கலை நிபுணரும் இயக்குநரும் கவிஞருமான த்வானி தேசாய், ‘சூர்மா’, ‘டைகர்’ திரைப்படங்களின் தயாரிப்பாளர் தீபக் சிங், ‘வாரிசு’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி - பாஜீராவ் மஸ்தானி கலை இயக்குநர் சுஜீத் சாவந்த் இணைந்து அனைத்து குறும்படங்களையும் பார்த்து ஆயிரம் என்கிற எண்ணிக்கையிலிருந்து 75 பேரை தேர்வு செய்திருக்கிறார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வெற்றி பெற்றவர்களின் விபரம் அறிவிக்கப்பட்டது. IFFI இணைய தளத்தில் அனைத்து விபரங்களும் தரப்பட்டு, தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாக உறுதிப்படுத்துதலும் நடந்தன.” என்றார்.

வியந்த மணி ரத்னம்!

இப்பிரிவின் மற்றொரு நடுவர் பிரசூன் ஜோஷி பேசும்போது “இந்தப் பிரிவு இளம் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களது திரைப்பட ஆளுமை, படைப்பின்பால் தொடர்ச்சியான ஈடுபாடு ஆகியவற்றை வளர்ப்பதற்கு ஊக்கம் அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். பன்முக குரல்களின் வழியாக கலை மேலும் செறிவு அடைவதாகவும் திரைப்பட சந்தை பொருளாதாரம் வளர்வதையும் இதன்மூலம் நாம் உறுதி செய்துகொள்ள முடியும்” என்றார்.

இப்பிரிவின் முக்கிய நடுவரான இயக்குநர் மணிரத்னம் பேசும்போது: “ 53 மணி நேரம் தந்து ஒரு குறும்படத்தை உருவாக்க சொன்னால் என்னால் முடியாது. ஐந்து குழுக்களின் திரைப்படங்களை பார்த்து முடித்தபின் எல்லாமே சிறப்பானதாக இருந்தன. இந்திய அரசின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது” என்றார்.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ரவீந்தர் பாக்கர் பேசும்போது: “ ஒத்த கருத்து உள்ளவர்கள் ஒருமித்து இணையவும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவும் இந்த திட்டம் உதவுகிறது. இந்த வருடம் அதிக அளவில் வெளிநாட்டு தயாரிப்பாளர்கள் திரைப்பட சந்தைக்கு வந்தனர். இளம் கலைஞர்கள் இவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான மேடையை ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

பரிசுகளை அள்ளி வந்த தமிழ்நாடு!

ஐந்து நிமிட நீளமுடைய ‘Dear Diary’ என்கிற குறும்படம் இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசுத்தொகை வழங்கி விழாவை நிறைவு செய்தார்கள். வெற்றி பெற்ற குறும்படத்தில் நடித்த நடிகர் நம்ரிதாவும் இசையமைத்த விஷ்வாவும் சென்னையை சேர்ந்த கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


75 CREATIVE MINDS OF TOMORROW 2022 பதிப்பில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்கள் விபரம் :

1. நடிகர் நம்ரிதா - ‘வெண்ணிற இரவுகள்’ குறும்படம்

2. இசையமைப்பாளர் - அபிஷேக் ராஜா ‘வெண்ணிற இரவுகள்’ குறும்படம்.

3. படத்தொகுப்பாளர் - அரவிந்த் ஜகன் ‘வெண்ணிற இரவுகள்’ குறும்படம்

4. நடிகர் அகிலன் - ‘ஆர்டிஸ்ட் ’ குறும்படம்

5. நடிகர் சந்தோஷ் - ‘பலாப்பழம்’ குறும்படம்

6. இயக்குநர் கணேஷ் கண்ணன் - ‘ஃபேஸ் இட் ’ குறும்படம்

7. இசையமைப்பாளர் விஷ்வா - ‘ரைஸ்’ தனி இசைப்பாடல்

8. அனிமேசன் கலைஞர் சேது ரமாலிங்கம் - ‘அமாங்க் தி ஸ்டார்’ குறும்படம்

9. திரைக்கதை எழுத்தாளர் விக்னேஷ் பரமசிவம் – ‘ஆப்போஸிட் போல்ஸ்’ குறும்படம் , ‘மை இந்தியா’ குறும்படம்

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x