

ஆன்ட்ரூ குரோவ். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட, உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர். இவர், 1970-களில் இன்டெல் நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்த ஓகே ஆர் (Objective Key Results - OKR) என்ற ஒரு வழிமுறையை உருவாக்கினார்.
ஒரு நிறுவனம் தனது இலக்கை வெற்றிகரமாக அடைய வேண்டுமென்றால், முதலில் அந்நிறுவனம் தனது இலக்கை தெளிவாக வரையறுத்து எழுத வேண்டும். அதன் பிறகு அந்த இலக்கை அடைவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொன்றாக பட்டியலிட வேண்டும். பிறகு, அந்த செயல்பாடுகள் சரியாக செய்யப்படுகின்றனவா என்பதைக் கண் காணிக்க வேண்டும்.
இந்த வழிமுறைதான் ஓகேஆர் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இலக்கை எழுதி, அதற்கான செயல்பாடுகளை ஆவணப்படுத்தும்போது நிறுவன இயக்கத்தில் எங்கு பிரச்சினைகள் உள்ளன என்பது சரியாக புலப்படும். இதுதான் ஆன்ட்ரூ குரோவ் உருவாக்கிய ஓகேஆர் வழிமுறையின் சாராம்சம். கேட்பதற்கு மிக எளிமையாக தோன்றக்கூடியது. ஆனால், நிறுவனத்தின் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவியல் பூர்வமான வழிமுறை இது.
தற்போதுகூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான், நெட்பிளிக்ஸ் என உலகின் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஓகேஆர் வழிமுறையை தங்கள் நிறுவனங்களில் கடைபிடிக்கின்றன. “ஓகேஆர் வழிமுறையை கடைபிடிக்க ஆரம்பித்த பிறகு 10 மடங்கு வேகத்தில் கூகுள் வளர்ந்தது” என்றார் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ். தற்போது பல நிறுவனங்கள் ஓகேஆர் வழிமுறையை, மென் பொருளாக உருவாக்கி விற்பனை செய்துவருகின்றன.
சென்னையைச் சேர்ந்த டேட்டாலிஜென்ஸ் (Datalligence) நிறுவனம் அவற்றில் ஒன்று. 2020-ம் ஆண்டு இந்த ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களான தர்மேந்திரன் மற்றும் ரம்யா சந்திரசேகரன் தங்கள் தயாரிப்பைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார்கள்...
ஓகேஆர் என்பது மேலாண்மை வழிமுறைகளில் ஒன்று. பல ஆண்டுகளாக இது நிறுவனங்களில் நடைமுறையில் இருக்கிறது. இதை ஒரு மென்பொருளாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது?
தர்மேந்திரன்: நானும் ரம்யாவும் குடும்ப நண்பர்கள். நான் ஒரு நிறுவனத்தில் மேலாண்மை அதிகாரியாக பணிபுரிந்து கொண்டிருந்தேன். ரம்யா தனியாக ஒரு நிறுவனம் வைத்து ஓகேஆர் வழிமுறை தொடர்பான ஆலோசனை வழங்கிவந்தார். அப்படியாக, ஒரு நாள் எங்கள் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்க ரம்யா வந்திருந்தார். ஓகேஆர் வழிமுறையை நடைமுறைப்படுத்தும்படி அவர் எங்களுக்குக் கூறினார்.
அதை அப்போது எக்ஸ்எல் ஷீட்டில்தான் செய்ய முடிந்தது. எங்கள் நிறுவனத்தில் 750 ஊழியர்கள் பணிபுரிந்தனர். அனைவரையும் எக்ஸ்எல் ஷீட்டுக்குள் உள்ளடக்கி மதிப்பிடுவது மிகவும் சிரமமாக இருந்தது. ஓகேஆர் சார்ந்து சந்தையில் எங்கள் தேவ க்கு ஏற்ற வகையில் ஏதேனும் மென்பொருள் கிடைக்குமா என்று தேடினோம். நாங்கள் எதிர்பார்த்ததுபோல் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது எங்களுக்கு ஒரு யோசனை தோன்றியது.
நிறுவனங்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பது குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். அதேபோல் ரம்யாவுக்கு ஓகேஆர் வழிமுறையில் ஆழமான நிபுணத்துவம் இருந்தது. ஏன் நாமே ஒரு ஓகேஆர் மென்பொருளை உருவாக்கக்கூடாது என இருவரும் கலந்துபேசி தனியே ஒரு ஸ்டார்ட்அப் தொடங்க முடிவெடுத்தோம். அப்படியாகத்தான் டேட்டாலி ஜென்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
உங்கள் ஓகேஆர் மென்பொருளின் பயன்பாட்டைப் பற்றி விளக்க முடியுமா?
ரம்யா: நிறுவனத்தின் இலக்கு, அந்த இலக்கை அடைய அந்த நிறுவனம் கொண்டிருக்கும் திட்டங்கள், அந்தத் திட்டங்கள் முறையாக நடைமுறைப் படுத்தப்படுகின்றனவா, ஊழியர்களுக்கு வேலைகள் முறையாக பகிர்ந்தளிக்கப்படுகின்றனவா, அந்த வேலைகளை ஊழியர்கள் குறித்த நேரத்தில் செய்து முடிக்கிறார்களா என்பதை எங்கள் ஓகேஆர் மென்பொருள் மூலம் துல்லியமாக கண்காணிக்க முடியும்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதால் ஊழியர்களிடையே ஒருங்கிணைப்பு சாத்தியமாகும். ஊழியர்களின் செயல்பாடு அதிகரிக்கும். ஒரு உதாரணத்தோடு இதை விளக்க விரும்புகிறேன். ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நிறுவனம் மூன்று மாதங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டீ-சர்ட் தயாரித்து ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. இது அந்நிறுவனத்தின் இலக்கு. அந்நிறுவனத்தில் கொள்முதல், உற்பத்தி, விநியோகம் என மூன்று அணிகள் இருக்கின்றன.
நிறுவனத்தின் இலக்கை அடைய இந்த மூன்று அணிகளும் கூட்டாக செயல்பட வேண்டும். அதேசமயம் ஒவ்வொரு அணிக்கும் தனித்தனி இலக்கு இருக்கும். கொள்முதல் அணி உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களை தேடி வாங்க வேண்டும். உற்பத்தி அணி, குறிப்பிட்ட நேரத்துக்குள் தயாரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். விநியோக அணி, தயாரிக்கப் பட்ட டீ-சர்ட்டுகளை முறையாக விநியோகிக்க வேண்டும்.
இந்த மூன்று அணிகளும் தங்கள் இலக்கில் சரியாகப் பயணிக்கும் போது மட்டுமே நிறுவனம் அதன் இலக்கை எட்ட முடியும் இல்லையா? இந்த மூன்று அணிகளும் சரியான பாதையில் பயணிக்கின்றனவா என்பதை அளவிடுவதற்கு ஓகேஆர் மென் பொருள் உதவும். இந்த மென்பொருள் மூலம், நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகளை ஒரே இடத்திலிருந்து மதிப்பீடு செய்ய முடியும்.
ஐடி நிறுவனம், சில்லரை வர்த்தக நிறுவனம், மருத்துவத்துறை, உற்பத்தித் துறை என பலதரப்பட்ட துறைகளில் இந்த மென்பொருளைப் பயன்படுத்த முடியும். தங்கள் நிறுவனத்தை நெறிமுறைப்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் பயனளிக்கும்.
டேட்டாலிஜென்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரையில் எத்தனை வாடிக்கையாளர்களை சென்றடைந்திருக்கிறீர்கள்?
ரம்யா: தற்போது இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளில் எங்கள் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், சென்னை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி என பல்வேறு மாவட்டங்களில் பல நிறுவனங்கள் எங்கள் மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. தற்போது நாங்கள் முதன்மையாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் கவனம் செலுத்துகிறோம்.
தற்போது நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் ஓகேஆர் மென்பொருள்களை வழங்குகின்றன. அவற்றிலிருந்து உங்கள் மென்பொருள் எங்கு வேறுபடுகிறது?
தர்மேந்திரன்: முதல் விஷயம் எளிமை. எங்கள் ஓகே ஆர் மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என்பதை 1 மணி நேரத்தில் கற்றுக்கொள்ள முடியும். நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்கள் கூட எந்தச் சிக்கலும் இல்லாமல் எங்கள் மென்பொருளைப் பயன்படுத்த முடியும். ஒப்பீட்டளவில் எங்கள் மென்பொருளின் விலை குறைவானது. டேட்டாலிஜென்ஸ் நிறுவனத்தின் இணையப் பக்கம்: https://datalligence.ai/ - riyas.ma@hindutamil.co.in