Published : 15 Jul 2014 10:50 AM
Last Updated : 15 Jul 2014 10:50 AM

ஒரு லட்சம் ஆதிவாசிகள் எங்கே?

பசிக்குத் தேனை எடுக்கும் மனிதனுக்கும் விற்றுப் பணம் சேர்க்கத் தேன் எடுக்கிற மனிதனுக்கும் இடையே ஒன்றல்ல, ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளன. தன்னுடைய பேராசைகளுக்காக நகர்மயமான மனித இனம் இயற்கையைச் சுரண்டி, இயற்கையையே தங்களுடைய வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் பழங்குடிகளின் வாழ்க்கையைச் சிதைக்கிறது.

பூமியில் மனித வாழ்க்கை நிலைத்திருப்பது என்பது இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது என்ற எளிமையான சமன்பாட்டில் அடங்கியுள்ளது. காசுக்கு விற்கத் தேன் எடுக்கக் காட்டுக்குள் வலிந்து ஒரு கூட்டம் நுழையும்போது, இயற்கை அழிக்கப்படுவது மட்டுமில்லாமல், அந்த இயற்கையையே தங்களது வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ள பழங்குடிகளும் அழிக்கப்படுகிறார்கள். இயற்கையுடன் மனித இனம் பராமரித்த சமன்பாடு முற்றிலும் சீர்குலைகிறது. காட்டுக்குள் புகுந்த மனிதனுக்கும் காட்டிலேயே வாழும் மனிதனுக்கும் உரசல்கள் மூள்கின்றன. நாளடைவில் அது போராட்டமாக வடிவெடுக்கிறது.

என்றாலும், இந்தப் பிரச்சினைகளின் ஊடேதான் தீர்வுகளும் பிறக்கின்றன. அதற்கான சிந்தனையையும் மனித ஆற்றலையும் ஒன்று திரட்டித் தலைமையேற்றுப் போராட்டத்தை வழிநடத்த வேண்டுமல்லவா..? அதைத்தான் செய்கிறார் பிரவீண் படேல்!

யார் இந்தப் பிரவீண் படேல்?

கொல்கத்தாவில் பிறந்த இவர், தனது கல்லூரிக் காலத்தில் மாணவர் தலைவராகச் செயல்பட்டவர். ‘அகில பாரதிய ஆதிவாசி விகாஸ் பரிஷத்' அமைப்பின் மூலமாகவும் ‘பழங்குடியினர் நலச் சங்கம்' மூலமாகவும் கடந்த 17 ஆண்டுகளாகச் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஷா மாநிலங்களில் பழங்குடியினருக்காகப் போராடி வருகிறார். ஒடிஷாவில் நிலவிய சுரங்க ஊழலை அம்பலப்படுத்தியவர். நம் நாட்டுச் சுரங்கக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததில் முக்கியப் பங்காற்றியவர். தற்போது 'விரைவான நீதிக்கான அமைப்பு' மூலம் தன் பணிகளைத் தொடர்கிறார். சென்னை வந்தவரிடம் உரையாடியதிலிருந்து...

"பழங்குடியினர் சார்ந்த பிரச்சினை என்பது 2000-ம் ஆண்டுக்கும் முன்னர் வரை பெரிதாக வெளியே தெரியவில்லை. 2000-த்துக்குப் பிறகு தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகள் பல துறைகளில் பரவலாகின. அதன் வெளிப்படையான விளைவாக நில அபகரிப்பு, நிலப் பயன்பாட்டை மாற்றுதல், பழங்குடியினரின் இடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல் போன்றவை நிகழ்ந்தன. அத்தனையும் அரசின் ஆதரவோடுதான் நிகழ்ந்தன.

நமது இயற்கை வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்ட ஆரம்பித்தன. விளைவு கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிகளில் புரள, கனிம வளம் எடுக்கப்பட்ட மாநில மக்களோ வறுமையில் வாடினர்.

அதிலும் மத்திய இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஷா மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது ‘தேசியச் சுரங்கக் கொள்கை'யில் உள்ள தவறுகள்தான்.

தவறான கொள்கை

நமது அண்டை நாடான சீனா தனது தேவைகளுக்காக 85 சதவீத இரும்புத் தாதுவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. அந்த நாடு ஒரு டன் இரும்புத் தாதுவுக்கு 120 முதல் 210 டாலர்கள் வரை (சுமார் ரூ.12,000) இந்திய அரசுக்குச் செலுத்துகிறது. ஆனால், இந்தப் பேரத்தில் மாநில அரசுகளுக்குக் கிடைக்கும் உரிமத் தொகை நியாயமாக ரூ.8,000 ஆக இருக்க வேண்டும். ஆனால், கிடைப்பதோ வெறும் ரூ.17தான். இந்த உரிமத் தொகையை உயர்த்தப் போராடிவருகிறோம். இது சட்டரீதியான சவால்.

இது தவிர, சட்டத்துக்குப் புறம்பாகப் பல ஊழல்கள் இதில் நடந்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதை விசாரித்த எம்.பி. ஷா ஆணையம், ரூ.60,000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாகச் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒடிஷாவில் உள்ள 192 சுரங்கங்களில் 176 சுரங்கங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அமைந்துள்ளன. அவற்றில் 47 சுரங்கங்கள் மட்டுமே முறைப்படி அனுமதி பெற்றவை.

சுற்றுச்சூழல் சீர்கெட்டிருப்பது மட்டுமில்லாமல் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஷா மாநிலங்களில் சுரங்கம் அமைந்துள்ள பகுதிகளில் வாழும் பழங்குடிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். 2005-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநில அரசு தனியார் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுடன் இரும்புத் தாது எடுக்க ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த 24 மணி நேரத்தில், மக்கள் படை என்ற பெயரில் ‘சல்வா ஜுடும்' சாதாரண மக்களைக் கொல்ல ஆரம்பித்தது.

எங்கே பழங்குடிகள்?

2001-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தாண்டேவாடா காட்டுப் பகுதியில் சுமார் 1,300 கிராமங்கள் இருந்தன. அதில் 644 கிராமங்கள் ‘சல்வா ஜுடும்' மூலம் அழிக்கப்பட்டுள்ளன. இங்கிருந்த 2.5 லட்சம் பேரில் சுமார் 50,000 பேர் அரசு ஏற்படுத்தியுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 50,000 பேர் ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும்கூட, இன்னும் ஒரு லட்சம் பேர் எங்கே போனார்கள்? அவர்கள் அத்தனை பேரும் நக்சல்களோடு இணைந்துவிட்டார்கள். எனில், அரசு நக்சல் எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறதா அல்லது அதிகரித்திருக்கிறதா?

தற்போது பழங்குடியினர் தங்களுடைய உரிமைகளைப் பெற வீதிக்கு வந்திருக்கிறார்கள். ‘ஜல் ஜங்கில் ஜமீன் ஹமாரா ஹை' (நீர், காடு, நிலம் எங்களுடையது) என்று கோஷம் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

பறிக்கப்படும் உரிமைகள்

இதற்கு என்ன காரணம்? 1987-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய நீர்க் கொள்கையில் முதல் முன்னுரிமையாகக் குடிநீரும், இரண்டாவதாக நீர்ப்பாசனமும், மூன்றாவதாக வேளாண் சார் தொழில்களுக்கும், நான்காவதாக வேளாண் அல்லாத தொழில்களுக்கும், ஐந்தாவதாகப் போக்குவரத்துக்கும் என்று முன்னுரிமைகள் வரிசைப்படுத்தப்பட்டுப் பட்டியலிடப்பட்டன. ஆனால், 2012-ம் ஆண்டு திருத்தப்பட்ட நீர்க் கொள்கையில் இந்த முன்னுரிமைகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. இதேபோல, காடு சார்ந்த உரிமைகளும், நிலம் சார்ந்த உரிமைகளும் பழங்குடியினரிடமிருந்து பறிக்கப்படுகின்றன.

இன்று வரையிலும் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களுக்குச் சண்டிகர் மட்டுமே ஒரே தலைநகராக உள்ளது. ஏன், இரண்டு தலைநகரங்கள் இல்லை? காரணம், அங்கிருக்கும் மக்கள் செல்வந்தர்களாகவும் தங்கள் நிலங்களில் ஓர் அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாதவர்களாகவும் இருப்பதுதான். அப்படியானால் அவர்களுக்கு ஒரு நீதி, பழங்குடிகளுக்கு ஒரு நீதியா?" - கேள்வி யுடன் முடிக்கிறார் பிரவீண் படேல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x