நலத்தைப் பெருக்கும் பசுமை அணையாடைகள்!

நலத்தைப் பெருக்கும் பசுமை அணையாடைகள்!
Updated on
3 min read

ஒரு பெண், குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் தயாராகிறார் என்பதைத் தெரிவிப்பதே மாதவிலக்கு. ஆனால், மாதவிலக்காவதால் பெண்ணுக்குக் குழந்தை பிறக்காமல் போகுமென்று சொன்னால் அதை நம்ப முடிகிறதா? நம்பியே ஆக வேண்டும் என்கிறது ‘டாக்சிக்ஸ் லிங்க்' எனும் தனியார் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கை.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் பிரபல சானிட்டரி நாப்கின்களில் உள்ள அதிகளவிலான கரிம சேர்மங்களும், வேதிப்பொருட்களும் உடலுக்கு பல்வேறு கேடுகள் விளைவிப்பதுடன், குழந்தைப்பேறின்மையையும் புற்று நோய்களையும் ஏற்படுத்துகின்றன என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன், குழந்தைகளுக் கான டால்கம் பவுடர்கள் பிற்காலத்தில் அவர்களைப் புற்றுநோயாளிகளாக மாற்றலாம் என்றொரு செய்தி வேகமாகப் பரவியது. பின்னர் ஆஸ்பெஸ்டாஸ் இல்லாத பவுடர்களால் பாதிப்பில்லை என்று தெரிய வந்தது. அதேபோல், இப்போது பெண்கள் உபயோகிக்கும் சானிட்டரி நாப்கின்களால், அவர்களுக்குக் குழந்தைப்பேறின்மையும், புற்றுநோய் பாதிப்பும் ஏற்படலாம் எனும் செய்தியும் பரவிவருகிறது.

போருக்குப் பின் நிகழ்ந்த மாற்றம்: பொதுவாகக் காயங்களில் துணி பாண்டேஜ் கட்டும் முறையே இருந்தது. முதலாம் உலகப் போரில் காயம்பட்ட வீரர்களுக்குத் துணிப் பற்றாக்குறையால் செல்லுலோஸ் பாண்டேஜ்கள் உபயோகிக்க நேர்ந்திருக்கிறது. ஆனால், அவை துணியைக் காட்டிலும் ரத்தத்தை அதிகம் உறிஞ்சியதால் செவிலியர்கள் செல்லுலோஸ் பாண்டேஜ்களையே அதிகம் உபயோகிப்பதைக் கவனித்த இங்கிலாந்தின் கோட்டக்ஸ் நிறுவனம், இதை நாப்கினுக்கு உபயோகித்தால் என்ன என்று எண்ணி, 1921ஆம் ஆண்டு செல்லுலோஸால் தயாரிக்கப்பட்ட முதல் நாப்கினை சந்தையில் அறிமுகப்படுத்தியது.

அது பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது. அதுவரை பருத்தித் துணிகளை ஒளித்து வைத்து உபயோகித்து, சிறுநீர்த்தொற்று, பிறப்புறுப்பு தொற்றுகளுக்கு ஆளாகி அவதிப் பட்டதோடு, அவமதிப்பையும் சந்தித்து வந்த பெண்களுக்கு ‘டிஸ்போசபிள் சானிட்டரி நாப்கின்கள்' என்பது மிகப்பெரிய வரமாகத் தோன்றியது. அதை அதிகம் உபயோகிக்க ஆரம்பிக்க, உலகெங்கும் நாப்கின்கள் பல்வேறு நிறுவனங்களால் தயாரித்து சந்தைப் படுத்தப் பட்டன. இதன் பிறகே பிரச்சினைகளும் தொடங்கின.

வேதிப்பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகள்: வெறும் செல்லுலோஸால் தயாரிக்கப்பட்ட ஆரம்பக்கால நாப்கின்கள், பெண்களின் தேவைக்கேற்ப பெல்ட்லெஸ், எக்ஸ்ட்ரா லார்ஜ், ஓவர்நைட், லீக் புரூஃப், வித் விங்ஸ் எனப் பல வடிவங்களைப் பின்னர் எடுத்தன. பொதுவாக மரக்கூழ், ஞெகிழி, பாலி-எத்திலீன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நாப்கின்களை நிறத்தில் வெண்மையாகத் தோற்றமளிக்க செல்லுலோஸை பிளீச் செய்ய ஆரம்பித்தபோது முதல் பிரச்சினை தொடங்கியது.

பிறகு ஈரத்தை அதிகம் உறிஞ்சுவதற்காக SAP (Super Absorbent Polymers) எனப்படும் வேதிப் பொருள் சேர்க்கப்பட்டது. பின்னர், நறுமணம் வீச, தொற்றுகளைத் தவிர்க்க, உள்ளாடைகளில் ஒட்டிக்கொள்ள என ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒவ்வொரு வேதிப்பொருள் நாப்கின்களில் சேர்க்கப்பட, பிரச்சினைகளும் பெருகத் தொடங்கின. இவ்வாறு இதுவரை சேர்க்கப்பட்ட 3,900க்கும் அதிகமான வேதிப்பொருட்கள் பெண்களின் வாழ்க்கை முறை மாற்றத்திற்குப் பதிலாக பல்வேறு தொல்லைகளையே கொடுத்துவருகின்றன.

குவியும் கழிவுகள்: 90% நாப்கின்கள் ஞெகிழி கலந்தே தயாரிக்கப் படுகின்றன. இவற்றுடன், இந்த நாப்கின்களைக் கையாள வசதியாக எலாஸ்டிக், விற்பனைக்காக என ஞெகிழியால் உருவாக்கப்படும் பேக்கிங் உறை என உலகெங்கும் இவை மக்காத குப்பைகளின் பெருங்குவியலாக சேர்கின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில், மாதவிலக்கு ஏற்படும் வயதில் உள்ள பெண்கள் கிட்டத்தட்ட 35 கோடிப் பேர். இவர்கள் மாதம் ஒன்றுக்கு 100 கோடி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர்.

இதுவே ஆண்டுக்கு 1,200 கோடிகளைத் தாண்டும் என்பதுடன், இது ஒரு லட்சம் டன்கள் வரை குப்பையாகச் சேர்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். இவ்வளவு நாப்கின்களும் பொதுவாகப் புதைக்கப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன அல்லது கடலுக்குள் வீசியெறியப்படுகின்றன. இவை முற்றிலுமாக அழிவதில்லை. இதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு ஒருபுறம் இருக்க, இந்த மாதவிலக்கு உபகரணங் களின் பயன்பாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

செயற்கை ஹார்மோன்கள்: இதில் முக்கியமான பாதிப்பு 'எண்டோகிரைன் டிஸ்ரப்ஷன்' எனும் செயற்கை ஹார்மோன்கள். டயாக்சின் போன்ற செயற்கை வேதிப்பொருட்கள் பிறப்புறுப்பு வழியாக நுழைந்து, நாள்பட உடலுக்குள் தங்கியிருக்கும்போது, அவை நாளமில்லா சுரப்பிகளான எண்டோகிரைன் ஹார்மோன்களைப் போலவே இயங்கும். இதனால் ஏற்படும் பாதிப்பே எண்டோகிரைன் டிஸ்ரப்ஷன் என அழைக்கப்படுகிறது.

இந்த செயற்கை வேதிப்பொருட்கள் செல்களில் உள்ள ஹார்மோன் ஏற்பிகளைத் தம்வசப்படுத்தி, பெண்கள் உடலில் இயல்பாகச் சுரக்கும் ஹார்மோன்களையும் அவற்றின் செயல்திறனையும் முற்றிலும் பாதிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் அளவை இந்த எண்டோகிரைன் டிஸ்ரப்டர்கள் குறைக்கும்போது கருத்தரித்தல், மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைப்போலவே தைராய்டு, பிட்யூட்டரி உள்ளிட்ட மற்ற ஹார்மோன்களையும், அவற்றின் செயல் திறனையும் இவை பாதிக்கின்றன. கருத்தரிப்பில் மட்டுமன்றி, உருவான கருவில் பிறவி ஊனங்களை ஏற்படுத்துவதுடன் கருப்பை, மார்பகம், விரை, புராஸ்டேட் உள்ளிட்ட உறுப்புகளில் புற்றுநோய்களையும் இவை ஏற்படுத்துகின்றன.

எண்டோகிரைன் டிஸ்ரப்ஷன் மட்டுமன்றி, பிறப்புறுப்புகளில் அழற்சி, நோய்த்தொற்று களையும் இவை ஏற்படுத்தும். முக்கியமாக இந்தச் செயற்கை ஹார்மோன்கள் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற வாழ்க்கைமுறை நோய்களை உண்டாக்கி, மனித சமுதாயத்தின் ஆரோக்கியத்தைக் கண்ணுக்குத் தெரியாமலேயே பறித்துக் கொண்டிருக்கின்றன.

நலத்தைப் பெருக்கும் வழி: நாப்கின்களைப் பயன்படுத்தும் பெரும் பாலான பெண்கள் காலை முதல், இரவு வரை ஒரே நாப்கினை பயன்படுத்துவதால் பல்வேறு தொற்றுகளுக்கு உள்ளாகிறார்கள். அதையே ஆறு மணி நேரத்திற்கு ஒன்று என உபயோகிப்பது நல்லது. இருப்பினும், பாரம்பரிய முறைக்குத் திரும்புவதே, இது போன்ற தொல்லைகளுக்கான சிறந்த தீர்வு. 'பசுமை மாதவிலக்குகள்' என்ற பெயருடன் மீண்டும் பருத்தித் துணிகளை நாப்கின்களாகப் பயன்படுத்த அழைப்பு விடுக்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

இவற்றில், துவைத்து மீண்டும் உபயோகப் படுத்தும் வகையில் உள்ள 'கிளாத் பேட்கள்' 2-3 ஆண்டுகள் வரை உபயோகிக்க முடியும்; கழுவி மீண்டும் பயன்படுத்தும் வகையில் உள்ள 'மென்ஸ்ட்ருவல் கப்கள்' 10 ஆண்டுகள் வரை உபயோகிக்க முடியும். தனிமனித ஆரோக்கியத்தையும், சமுதாய நலனையும், இயற்கைச் சூழலையும் ஒன்றாகக் காக்கும் பசுமை பொருட்களை பெண்கள் ஏற்றால், பயன்பாட்டுச் செலவு குறையும், நலமும் பெருகும். - டாக்டர் சசித்ரா தாமோதரன் கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர், sasithra71@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in