Last Updated : 16 Jul, 2014 10:00 AM

 

Published : 16 Jul 2014 10:00 AM
Last Updated : 16 Jul 2014 10:00 AM

கதை பேசும் கார்கள்

கார் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா? அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியோட எங்கேயாவது போறப்ப எப்பாவது கார்ல போயிருப்பீங்க. நீங்க போற கார் வேகமா பஸ், லாரியைத் தாண்டி பாஸ்ட்டா போணும்னு நெனச்சிருப்பீங்க இல்லையா? சரி அந்தக் காரும் நம்மள மாதிரி பேசுனா எப்படி இருக்கும்?

இந்த ‘Cars 2’ படத்துல மனுஷங்க மாதிரி காருங்க நடிச்சிருக்குங்க. இந்தப் படத்துல காருங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து வாழுதுங்க. நாம எல்லாம் ஹோட்டல்ல சேர்ந்து சாப்பிடுற மாதிரி காருங் களுக்கும் தனியா ஹோட்டல் இருக்கு. அதுங்க அங்க அவுங்க ஃபிரண்ட்ஸோட போய் ஜாலியா சாப்பிடுதுங்க. நமக்கு டி.வி. இருக்கிற மாதிரி அதுங்களுக்கும் தனியா டிவி இருக்கு. காமெடியா இருக்குல்ல?

சரி, நம்ம படத்தோட ஹீரோ பேரு மெக்குயின். அவரு பெரிய சாம்பியன். கலந்துகிட்ட எல்லாப் போட்டிகள்லயும் ஜெயிச்சி கப் வாங்கிட்டு வந்துடுவார். நீங்க ஸ்கூல்ல ஓட்டப்பந்தயப் போட்டியில கலந்து கப் வாங்குவீங்கல்ல, அது மாதிரி. காருங்க ஓட்டப் பந்தயத்துக்குப் பேரு கார் ரேஸ். மெக்குயின் ‘பிஸ்டன் கப் கார் ரேஸ்ல’ நாலு முறை ஜெயிச்சு கப் வாங்கியிருக்கு. ஒரு நாள் போட்டி எல்லாம் முடிச்சிட்டு கப் வாங்கிட்டு தன்னோட சொந்த ஊருக்குத் திரும்புச்சு. அங்க ஃபிரண்ட்ஸ்களப் பார்த்து ஜாலியா இருக்கலாம்னு வந்துச்சு.

மெக்குயினோட பெஸ்ட் ஃப்ரண்ட் பேரு மாட்டர். உங்களுக்கும் ஸ்கூல்ல ஒரு பெஸ்ட் ஃபிரண்ட் இருப்பாங்கல்லா? அதுமாதிரி அதோட ஃபிரண்ட். ஊருக்குப் போன கதை, வீட்டுக் கதை எல்லாம் அவுத்து விடுவீங்கல்ல, அந்த மாதிரியான ஃபிரண்ட்தான் மாட்டர். மெக்குயினும் மாட்டரும் சின்ன வயசுல இருந்து நல்ல ஃபிரண்ட்ஸ். மாட்டர் உடம்பு சரியில்லாத காருங்கள சரி பண்ற ஒர்க் ஷாப்ல வேலை பாக்குறான். அதாவது காருகளுக்கான ஹாஸ்பிட்டல்னு சொல்லலாம். நமக்குக் காய்ச்சல் வந்தா அப்பா, அம்மா ஹாஸ்பிட்டல்தானே கூட்டிட்டுப் போவாங்க.

ஃபிரண்ட் வந்த உடனே வேலைக்கு லீவ் போட்டுட்டு ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா ஊர் சுத்துறாங்க. இதுக்கு இடையில, காருங்களுக்கு சாப்பாடு தயாரிக்கிற அக்ஸலேர்டு அப்படிங்கிறவர் ஒரு கார் ரேஸ் நடத்த முடிவு பண்றார். நமக்கு இட்லி, தோசை, சோறு, சப்பாத்தி, பூரி இதெல்லாம் சாப்பாடு இல்லையா? காருங்களுக்கு டீசல், பெட்ரோல்தான் சாப்பாடு. இதைத் தயாரிக்கிறவர்தான் அக்ஸலேர்டு. மெக்குயின் தன்னோட ஃபிரண்ட் மாட்டரையும் மற்ற சில ஃபிரண்ட்ஸையும் கூட்டிட்டு போட்டிக்குப் போகுது.

ஆனால் லெமன் காருங்கள வச்சு சாப்பாடு தயாரிக்கிற ஜுண்டாப் அப்படிங்கிற கார் இந்தப் போட்டிய தடுக்க பிளான் போடுது. ஏன்னா இந்தப் போட்டி மூலமா அக்ஸலேர்டோட கம்பனி எல்லாருக்கும் தெரிஞ்சு நம்ம சாப்பாடு விக்காம போயிரும்னு அதுக்குப் பயம். அந்தப் போட்டி நடக்கிற இடத்தைக் குண்டு போட்டுத் தாக்கப் பாக்குது. அந்தப் போட்டி நடந்ததா? ஹீரோ மெக்குயினுக்கு என்ன ஆச்சு? ‘ Cars 2’ படம் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x