Published : 28 Jul 2014 09:30 AM
Last Updated : 28 Jul 2014 09:30 AM

தொலைக் கல்வி பயின்று ஐ.எல்.எஸ். வெற்றி

இந்திய ஆட்சிப் பணியை போலவே (ஐ.ஏ.எஸ்) இந்தியத் தொழிலாளர் பணிக்கு என்று ஐ.எல்.எஸ். என்ற உயர்பதவியும் இருக்கிறது. இந்தியா முழுமைக்குமான 57 தொழிலாளர் உதவி ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வின் முடிவுகளை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் வெளியிட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ச. அண்ணாமலை அகில இந்திய அளவில் 33-வது இடம் பிடித்திருக்கிறார்.

தேனி மாவட்டம், பெரிய குளத்தைச் சேர்ந்த இவர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். தொலை தூரக் கல்வியின் வழியாகவே உயர்கல்வியைக் கற்று, இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். அவர் தனது வெற்றிப் பாதையைக் கூறுகிறார்.

“அப்பா சன்னாசி, அம்மா சுருளியம்மாள். இருவருமே தினக்கூலித் தொழிலாளர்கள். அவர்களது தினசரி வருமானம் குடும்பம் நடத்த மட்டுமே போதுமானதாக இருந்தது. நாங்கள் மொத்தம் ஏழு சகோதர சகோதரிகள். எங்கள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பினார்கள். அப்பா படிப்புக்காகக் கந்து வட்டி வாங்கக் கூடத் தயங்க மாட்டார். நான் அரசுப் பள்ளி மாணவன்.எனக்கு அது பெருமையானது.

பெரியகுளத்தில் உள்ள பாரதியார் நடுநிலைப் பள்ளியிலும், விக்டோரியா அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். டி.கல்லுப்பட்டியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பட்டயப் படிப்பை முடித்தேன். பிறகு மைசூரில் உள்ள தேசிய ஆசிரியர் ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர் படிப்பு படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அங்கே சென்று பயில குடும்பச் சூழல் இடம்கொடுக்க வில்லை. இதனால் கல்லூரிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தேன்.

அப்பா அம்மாவுக்குச் சுமையாக இருக்கக் கூடாது, வேலை செய்து கொண்டே பட்டம் படிக்கலாம் என்று முடிவுசெய்தேன். அதற்கு தொலைதூரக்கல்வி எனக்குக் கைகொடுத்தது. தனியார் பள்ளிகளில் வேலை தேடத் தொடங்கிய நேரத்தில் தெய்வம் போல தமிழக அரசு அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை கொடுத்தது.

1999-லிருந்து தேனி மாவட்டம், மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அரசரடியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். சிறார்களுக்குப் பயிற்றுவிப்பது கடவுளுடன் கலந்துரையாடுவது போன்றது. ஆசிரியர் பணிக்கு நடுவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் தமிழ் இலக்கியமும், முதுகலையில் தொழிலாளர் சட்டமும் முடித்தேன்.

மாறுதலும் தோல்விகளும்

முதுகலை முடித்ததுமே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு எனக்குள் வளரத் தொடங்கியது. எனக்கு வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் உதவ முடியுமோ அப்படியெல்லாம் உதவ ஆரம்பித்தார்கள்.

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுவதற்காகப் பணி மாறுதல் வாங்கிக்கொண்டு சென்னை வந்தேன். ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான புத்தகங்கள் ஆங்கிலத் திலேயே இருந்ததால் ஒரு வரி கூடப் புரியவில்லை. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்ட தமிழ் புத்தகங்களை முதலில் படிப்பேன். பிறகு அதே பாடங்களை ஆங்கிலப் புத்தகங்களில் படித்துப் புரிந்துகொள்வேன். இதன் மூலம் எனது ஆங்கிலத்தில் எழுதும் அறிவும் முன்னேற்றம் கண்டது. இரண்டு ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்குப் பிறகு 2006-ல் முதல் முறையாக எழுதிய முதனிலைத் தேர்வில் 914 மதிப்பெண்கள் பெற் றேன். ஆனால் நேர்முகத் தேர்வை மிகக் குறைந்த மதிப்பெண்ணில் தவறவிட்டேன். இதே நிலை பல முறை நீடித்தது.

இந்தியத் தொழிலாளர் பணி

இந்த நேரத்தில்தான் மத்தியத் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இந்தியத் தொழிலாளர் பணிக்காக (ஐ.எல்.எஸ்) 57 உதவி ஆணையர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்க யுபிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு உடனடியாக விண்ணப்பித்தேன். சற்றும் எதிர்பாராமல் சாலை விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார் அப்பா. மருத்துவமனையிலே இருக்கும்போதும் தேர்வுக்குத் தயார் செய்துகொண்டேன்.

இந்தச் சூழ்நிலையில் நான் தேர்வு எழுதித்தான் ஆக வேண்டுமா என்று தளரும்போதெல்லாம், என் தம்பியும் என் மனைவியும் நம்பிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். நேர்முகத் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே. தைரியமாக எதிர்கொண்டேன்.

தொழிலாளர் சட்டங்களில் இன்று தேவைப்படும் மாற்றங்கள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த பதில் அவர்களை மிகவும் கவர்ந்தது. இந்தியாவில் வாழும் ஒருங்கிணைக்கப்படாத உதிரித் தொழிலாளர்கள் குறித்து நான் தெரிவித்த கவலையையும் கேட்டு “நீங்கள் தொலைதூரக் கல்வியில்தான் படித்தீர்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள்.

அகில இந்திய அளவில் 33வது இடம் எனக்குக் கிடைத்திருப்பது என் வாழ்வின் திருப்பு முனை மட்டுமல்ல, கல்லூரிக்குச் சென்று படிக்கமுடியாதவர்கள் தொலைதூரக் கல்வியில் பயின்றும் சாதிக்கலாம் என்பதற்கு நானே உதாரணம். ஆனால் இந்த வெற்றியைக் கொண்டாட எனது தந்தையும், தங்கையும் எங்களுடன் இல்லை.

ஒரு தொழிலாளியின் மகனாக பிறந்து பல லட்சம் தொழி லாளர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி. எனது இந்த வெற்றி சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு சாமான்யனுக்கும் நம்பிக்கை தரும் என்றால் அதுவே எனக்கு மன நிறைவை அளிக்கும்” என்கிறார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x