Published : 13 Dec 2016 10:14 AM
Last Updated : 13 Dec 2016 10:14 AM

இந்தியன் வங்கியில் அதிகாரி ஆகலாம் படிப்புடன் வேலை

ஐ.டி.பி.ஐ., யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் திறமையான இளம் பட்டதாரிகளை தேர்வுசெய்கின்றன. அவர்களை தங்களது வங்கியிலேயே டிப்ளமா படிப்பு படிக்க வைத்து, வேலையும் வழங்குகின்றன. அந்த வரிசையில், தற்போது முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியும் இணைந்திருக்கிறது.

கல்விக் கடன் அளிக்கப்படுகிறது

இந்தியன் வங்கி, அதிகாரி பணியில் (Probationary Officer) 324 காலியிடங்களை மேற்சொன்ன முறையில் நிரப்ப உள்ளது. அதற்காக தகுதியான பட்டதாரிகளை தேர்வுசெய்து அவர்களை பெங்களூரில் உள்ள இந்தியன் வங்கி மணிபால் வங்கியியல் பயிற்சி நிறுவனத்தில் வங்கியியல் மற்றும் நிதி சேவை தொடர்பான முதுகலை டிப்ளமா படிப்பை (Post Graduate Diploma in Banking and Finance) படிக்க வைக்கும்.

ஓராண்டு காலம் கொண்ட இந்த படிப்புக்கு ரூ.3.5 லட்சம் செலவாகும். இதில், விடுதி கட்டணம், உணவுக் கட்டணம், இதர கட்டணங்கள் என அனைத்து கட்டணங்களும் அடங்கிவிடும். படிப்புக் கட்டணம் ரூ.3.5 லட்சத்தை செலுத்த இந்தியன் வங்கியே கல்விக் கடன் வழங்கும். படித்து முடித்து பணியில் சேர்ந்ததும் இந்த கடனை 7 ஆண்டுகளில் மாதாந்திர தவணையாக செலுத்திவிடலாம்.

படித்து முடித்தவுடன் வேலை உத்தரவாதத்துடன் கூடிய இந்த டிப்ளமா படிப்பில் சேரப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

தேவையான தகுதி

பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், உடல் ஊனமுற்றோர் எனில் 55 சதவீத மதிப்பெண் போதும். வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு விதிகள்

எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானோர் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முதல்நிலை, மெயின் என இரண்டு தேர்வுகள் இருக்கும். இரு தேர்வுகளுமே ஆன்லைனில்தான் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 100. ஒரு மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். மெயி்ன் தேர்வைப் பொருத்தமட்டில், ரீசனிங், ஆங்கிலம், கணிதம், வங்கித்துறை தொடர்புடைய பொது அறிவு, கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 200. 2 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும்.

மெயின் தேர்வில் ஆங்கிலத்தில் விரிவாக பதிலளிக்கும் தேர்வும் (Descriptive Type) உண்டு. கடிதம், கட்டுரை எழுதுதலில் இருந்து 2 கேள்விகள் இடம்பெறும். மதிப்பெண் 50. அரை மணிநேரத்தில் பதிலளிக்க வேண்டும். எழுத்துத் தேர்வுக்கு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், சிறுபான்மையினர் (முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர்) மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு இலவசப் பயிற்சி அளிக்க இந்தியன் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் ஜனவரி 12 முதல் 19-ம் வரை ஒரு வார காலம் நடத்தப்படும்.

பயிற்சியும் வேலையும்

மெயின் தேர்வில் வெற்றிபெறுவோர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கு 100 மதிப்பெண். இறுதியாக முதல்நிலைத் தேர்வு மதிப்பெண், மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த அடிப்படையில் டிப்ளமா படிப்புக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் பெங்களூரில் உள்ள இந்தியன் வங்கி மணிபால் குளோபல் கல்வி நிறுவனத்தில் 9 மாதங்கள் படிக்க வேண்டும். அதன் பிறகு இந்தியன் வங்கியில் ஏதேனும் ஒரு கிளையில் 3 மாதங்கள் பயிற்சி (internship) பெற வேண்டும். அதன் பிறகு இந்தியன் வங்கியில் அதிகாரியாக பணியில் சேர்ந்துவிடலாம். வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் கூடிய இந்த வங்கியியல் டிப்ளமா படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் இந்தியன் வங்கியின் இணையதளத்தை (www.indianbank.co.in) பயன்படுத்தி டிசம்பர் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இந்த இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

* ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் - டிசம்பர் 22

* இலவச பயிற்சிக்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் - ஜனவரி 5

* முதல்நிலைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் - ஜனவரி 11

* ஆன்லைன் வழி முதல்நிலைத் தேர்வு நாள் - ஜனவரி 22

* முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியாகும் நாள் - ஜனவரி 30

* மெயின் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் - பிப்ரவரி 16

* ஆன்லைன்வழி மெயின் தேர்வு - பிப்ரவரி 28

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x