Published : 26 Dec 2016 10:34 AM
Last Updated : 26 Dec 2016 10:34 AM

கோபோ அரங்கமும், கார் கண்காட்சியும்

ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் மிகவும் பிரம்மாண்டமானது டெட்ராய்டு கண்காட்சிதான். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கண்காட்சியில் தங்களது கார்களை காட்சிப்படுத்துவதை கவுரவமாக பெரும்பாலான நிறுவனங்கள் கருதுகின்றன. பொதுவாக ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியில் இக்கண்காட்சி நடைபெறும். மிச்சிகனில் உள்ள கோபோ அரங்கில் இக்கண்காட்சி 2017 ஜனவரி 8-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

வட அமெரிக்க சர்வதேச ஆட்டோ கண்காட்சி (என்ஏஐஏஎஸ்) என்றும் இது அழைக்கப்படுகிறது. 1899-ம் ஆண்டு முதல் இக்கண்காட்சி வெவ்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட, இந்த கண்காட்சிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. டெட்ராய்டில் 1907-ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இருப்பினும் 1957-ம் ஆண்டிலிருந்துதான் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்க தொடங்கின. 1989-ம் ஆண்டிலிருந்து இக்கண்காட்சிக்கு வட அமெரிக்க ஆட்டோ கண்காட்சி (என்ஏஐஏஎஸ்) என்ற பெயர் சூட்டப்பட்டது.

தற்போது கண்காட்சி நடைபெறவுள்ள கோபோ அரங்கில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

அக்டோபரிலிருந்து ஆயத்தம்

கண்காட்சியை நடத்துவதற்காக அக்டோபர் மாதத்திலிருந்தே கண்காட்சி அரங்குகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 1,500 பணியாளர்கள் மூன்று ஷிப்டுகளாக பணி புரிகின்றனர். மொத்தம் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரங்குகளை அமைக்கும் பணிகளை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். புத்தாண்டில் நடைபெற உள்ள இக் கண்காட்சி முந்தைய கண்காட்சி களைவிட பிரம்மாண்டமானதாகவும், மிகப் பெரிய அளவிலும் நடத்தப்பட உள்ளதாக என்ஏஐஏஎஸ் தலைவர் சாம் ஸ்டாட்டர் தெரிவித்துள்ளார்.

புதிய நிறுவனங்களாக சீனாவின் குவான்ஸு ஆட்டோமொபைல் குழுமம், வோல்ட்ரான் மோட்டார்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி கார்ப்பரேஷனும் இக்கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.

வால்ட் டிஸ்னி-யின் பிக்ஸர் கார் இக்கண்காட்சியில் அறிமுகம் ஆவதைப் பெருமையாகக் கருதுவதாக ஸ்டாட்டர் தெரிவித்தார். சீனாவின் குவான்ஸு நிறுவனம் பியட் கிரைஸ்லர் நிறுவனத்துடன் இணைந்து புதிய தயாரிப்பை இக்கண்காட்சியில் காட்சிப் படுத்தும் என்று தெரிகிறது. இதன் மூலம் அமெரிக்க சந்தையில் தடம் பதிக்க சீன நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டெக்சாஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வோல்ட்ரான் மோட்டார்ஸ் நிறுவனம் ஜீப் தயாரிப்பில் மிகவும் பிரபலமானதாகும். இந்த கண்காட்சியில் 2 ஆயிரம் சதுர அடி பரப்பில் தனது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த உள்ளது. நிறுவனத்தின் விளம்பர தூதராக ஹாலிவுட் நடிகர் டயர்ஸ் ஜிப்சன் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரங்குகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜெனிசிஸ் சொகுசு பிராண்ட் கார்கள் தனி அரங்கில் இடம்பெறுகின்றன. முன்னர் இவை ஹுண்டாய், பியட் கிரைஸ்லர் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த அரங்கில் இருந்தது. இப்போது தனி அரங்கில் ஜெனிசிஸ் தயாரிப்புகள் இடம்பெற உள்ளன. ஜெனரல் மோட்டார் கார்ப்பரேஷன், டொயோடா, கியா, சுபாரு ஆகியன தனித் தனியே புதிய மாடல்களை இங்கு காட்சிப்படுத்த உள்ளன.

எல்இடி திரை கண்காட்சி அரங்கில் இருப்பதால் பங்கேற்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். இதனால் அரங்குகளை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என்று அரங்க அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். பியட் கிரைஸ்லர் நிறுவனம் தனது தயாரிப்புகளை பிரபலப்படுத்த எல்இடி கோபுரங்களை அமைத்து அதன் மூலம் 60 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த கண்காட்சி அரங்கை அனைவரும் காணும் வகையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிறுவனம் தனது ஆல்ஃபா ரோமியோ பிராண்டை பிரபலப்படுத்த 5 ஆயிரம் சதுர அடியை கண்காட்சி அரங்கில் ஒதுக்கி யுள்ளது.

இந்த ஆண்டும் கண்காட்சிக்கு உலகெங்கிலுமிருந்து 5,000 ஊடக, பத்திரிகை துறையினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 40 செய்தியாளர் சந்திப்புக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனவரி 7-ம் தேதி பெரும் பணக்காரர்கள் எம்ஜிஎம் கிராண்ட் காசினோ அரங்கில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பிரபலமான சொகுசு மாடல் கார்கள் காட்சிப்படுத்த உள்ளன. கடந்த ஆண்டு 28 வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மொத்தம் 80 லட்சம் டாலர் மதிப்பிலான கார்கள் இடம்பெற்றிருந்தன. இதில் 30 லட்சம் டாலர் மதிப்பிலான கார்கள் விற்பனையாயின.

இந்தக் கண்காட்சிக்கு 8 லட்சம் பொதுமக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி இத்துறையைச் சேர்ந்தவர்கள் 40 ஆயிரம் பேர் வருகை தருவர் என தெரிகிறது.

ஹோண்டா ஒடிசி

ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் இந்த ஆண்டு மறுவடிவம் செய்யப்பட்ட ஒடிசி காரை இந்தக் கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த ஆண்டு இந்தக் கார் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 2018-ல்தான் இதை சந்தைக்குக் கொண்டு வர ஹோண்டா திட்டமிட்டுள்ளது. வட அமெரிக்க சந்தையில் ஹோண்டா ஒடிசியின் ஐந்தாவது தலைமுறை மாடலாகும் இது.

டொயோடா கேம்ரி

மற்றொரு ஜப்பானிய நிறுவனமான டொயோடா நிறுவனமும் 2018-ல் அறிமுகப்படுத்த உள்ள கேம்ரி மாடல் கார்களை இங்கு காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் டொயோடா கேம்ரி தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் தனது புதிய மாடல் காரை டெட்ராய்ட் கண்காட்சியில் அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்திருந்தது. அதனால் இந்நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுக தளமாக இக்கண்காட்சி இருக்கும். 100 கி.மீ. வேகத்தை 5.1 விநாடிகளில் தொடும் வகையில் மணிக்கு 244 கி.மீ. தூரம் செல்லும் திறன் கொண்டதாகவும் இந்தக் கார் இருக்கும் என நிறுவன இணைய தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. காருக்கான பெயர் கண்காட்சியில் தெரியவரும்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது புதிய மாடல் கார்களை இங்கு காட்சிப்படுத்த உள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு வாகனக் கண்காட்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்றாலும் டெட்ராய்டு கண்காட்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x