

நாட்டிலஸ் நீர்மூழ்கி தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளின் அருகில் வேகத்தைக் குறைத்து, 700 மீட்டர் ஆழத்தில் நின்றது.
“நான் ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சேன். நம்ம நீர்மூழ்கிக்கு நாட்டிலஸ்னு ஏன் பெயர் வந்தது?” என்று ஆரம்பித்தான் செந்தில்.
“எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய ஒரு நாவலில் (Jules Verne - Twenty Thousand Leagues Under the Seas) வரும் நீர்மூழ்கிக்கும் இதே பெயர்தான். அது ரொம்ப சுவாரசியமான ஒரு சாகசக் கதை. நம்ம பள்ளி நூலகத்துல எடுத்துப் படிச்சேன்” என்றாள் ரோசி.
“அந்தக் கதையில் வரும் நாட்டிலஸை வெச்சுதான் இந்தப் பெயர் வந்ததா?” என்று கேட்டாள் ரக் ஷா.
சிரித்த அருணா, “இல்லை, 1790களில் ராபர்ட் ஃபுல்டன் என்பவரால் உருவாக்கப்பட்ட நாட்டிலஸ் நீர்மூழ்கிதான் உலகில் பயன்பாட்டுக்கு வந்த முதல் நீர்மூழ்கின்னு சொல்வாங்க. அதைக் கவுரவிக்கும் விதமாக வைத்த பெயர் இது. நாட்டிலோஸ் என்கிற கிரேக்க மொழிச் சொல்லுக்குக் கடலில் பயணிப்பவர், கடலோடின்னு பொருள்” என்று விளக்கினார் அருணா.
சுற்றியிருந்த கடற்பகுதியில் நீந்திவரும் ஒரு விலங்கைக் காட்டி, “இந்தக் கடல்வாழ் விலங்கின் பெயரும் நாட்டிலஸ்தான். கடலோடி என்கிற வார்த்தையிலிருந்து பெயர் வெச்சிருக்காங்க” என்றார் அருணா.
“பெரிய நத்தை மாதிரி இருக்கு”, “ஒரு அடி நீளம் இருக்கும்போல” என்றெல்லாம் குரல்கள் எழுந்தன.
“இது கணவாய்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை தலைக்காலி. இதைத் தமிழில் சங்குக் கணவாய், நத்தைக் கணவாய்னு சொல்வாங்க. இதில் ஆறு தனி இனங்கள் இருக்கு. பொதுவா மற்ற கணவாய் இனங்களுக்கு வெளியில் ஓடு இருக்காது. ஆனா, இதற்கு ஓடு இருக்கும். இந்த ஓடு எட்டு முதல் பத்து அங்குலம் வரை வளரும். இவை பெரும்பாலும் 100 மீட்டர் ஆழத்துக்கு மேல்தான் காணப்படும். இரவில் வேட்டையாடும் உயிரி இது” என்று சொல்லி நிறுத்தினார் அருணா.
“இந்த ஓடு இவ்வளவு பெரிசா இருக்கே, ஓட்டுக்குள்ள என்ன இருக்கும்?” என்றான் செந்தில்.
“இந்த ஓட்டுக்குள் பல சிறு அறைகள் இருக்கும், அதில் மிகப்பெரிய அறையில்தான் இந்தக் கணவாய் வசிக்கும்” என்று அருணா சொல்லிக்கொண்டிருந்தபோதே, “மத்த அறைகளை எல்லாம் வாடகைக்கு விட்டிருக்குமோ?” என்று கேட்டு, தானே சிரித்துக்கொண்டாள் ரக் ஷா.
“இல்லை, மற்ற அறைகள் இந்தக் கணவாயின் நகர்வுக்கு உதவிசெய்யும். ஒருவகை விசை (Jet Propulsion) மூலமா இது நகரும். இப்போ ஆழத்திலிருந்து மேலே போகணும்னா, உள் அறைகளில் இருக்கும் நீரை வெளியேற்றி, அப்படியே மேல்நோக்கி நகரும். கீழே வரணும்னா, அறைகளில் இருக்கும் குழல் போன்ற அமைப்புகள் மூலம் நீரை உறிஞ்சி, எடை அதிகமாகி அப்படியே கீழே வரும். ஒரே ஆழத்திலேயே பக்கவாட்டில் போகணும்னா கொஞ்சமா நீரை எடுத்து அதை வெளியேற்றி முன்னும்பின்னும் நகரும். அதே ஆழத்தில் தொடர்ந்து மிதப்பதற்குச் சுற்றியிருக்கும் நீரின் அடர்த்தியுடன் தன்னுடைய உடலின் அடர்த்தியைச் சமநிலையில் வச்சிருக்கும்” என்று வேகமாகச் சொல்லி நிறுத்தினார் அருணா. மூவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
“ஒரு காலத்தில் இது மட்டுமில்லாம இதோட உறவினர்களான அம்மோனைட் (Ammonite) உயிரிகள் எல்லாம் நிறைய இருந்ததாம். அருங்காட்சியகங்கள்ல பார்த்திருப்பீங்களே, சுருள் சுருளா வட்டமா இருக்குமே! ஒரு பேரழிவு வந்ததில் கிட்டத்தட்ட எல்லா அம்மோனைட்களும் அழிஞ்சது. ஆனாலும் இந்த ஆழ்கடல் விலங்குகள் அழியாமல் தன்னைப் பாதுகாத்துக்கிட்டு இருக்கு. 50 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய பழமையான இனம் இது. பார்க்கக் கொஞ்சம் விநோதமா இருந்தாலும் செயல்திறனுடன் நீந்துவது, ஆழத்திலிருந்து மேலே போனாலும் அழுத்த மாறுபாடுகளில் சேதமடையாமல் இருப்பதுன்னு இதுங்களுக்குப் பல தகவமைப்புகள் உண்டு” என்று சொல்லி நிறுத்தினார் அருணா. மூவரும் கைதட்டினர்.
“நாட்டிலஸ் கடற்பயணத்துல நாம் பார்க்கும் கடைசி விலங்கு இதுதான், ஆகவே கைதட்டல் பொருத்தம்தான்” என்றார் அருணா.
“ஆமா, நாங்களும் எங்க நண்பர்களைச் சந்திச்சு இப்போ கற்றுக்கொண்டதை எல்லாம் பகிர்ந்துக்கணும். அது பெரிய பொறுப்பு” என்றாள் ரோசி.
“நம் குழுத்தலைவர் சொல்வது சரிதான். கடலில் இருக்கும் அதிசயங்களில் நாம் கொஞ்சம்தான் பார்த்திருக்கோம். இன்னும் ஏராளமான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கு. இத்தனை ஆண்டுகளா ஆராய்ச்சியாளரா இருக்கேன். இப்பவும் ஒவ்வொரு முறை கள ஆய்வுக்குப் போகும்போதும் புத்தம் புதிதாக எதையாவது பார்க்க முடியும். அந்தக் கடலையும் கடலின் சூழலையும் அதிலிருக்கும் ஆச்சரியமான உயிரிகளையும் காப்பது நம் எல்லாருடைய கடமை. குறைந்தபட்சம் நாம கடற்கரைக்குப் போகும்போது குப்பை போடாமல் இருப்பதுகூட ஒரு பெரிய பங்களிப்புதான்” என்றார் அருணா.
மூவரும் தலை அசைத்தனர். அவர்கள் சென்று நிலத்தில் இறங்க வேண்டிய இடத்தின் பெயரை நீர்மூழ்கியில் பதிவிட்டார் அருணா. வேகமாகப் புறப்பட்டது நாட்டிலஸ் நீர்மூழ்கி. அனைவரும் சுற்றியிருக்கும் கடலின் அழகை ரசிக்கத் தொடங்கினர்.(அதிசயங்கள் நிறைவடைந்தன!) - நாராயணி சுப்ரமணியன், nans.mythila@gmail.com