Last Updated : 02 Dec, 2016 11:09 AM

 

Published : 02 Dec 2016 11:09 AM
Last Updated : 02 Dec 2016 11:09 AM

விடலைத்தனம் விற்பனைக்கு...

கமல் ஹாஸனின் ‘விக்ரம்’ படம் வெளியானபோது, அந்தப் படம் பற்றிக் கமல் இப்படிக் குறிப்பிட்டார்: “தமிழ் சினிமா பார்வையாளர்களின் சராசரி வயது 13 என்று முன்பு சொல்வார்கள். அது கொஞ்சம் வளர்ந்து 15 ஆக மாறியிருக்கலாம். அந்த 15 வயதுச் சிறுவனைத் திருப்திப்படுத்தும் விதத்தில்தான் பொழுதுபோக்கு சினிமா எடுக்கப்படுகிறது” (நினைவிலிருந்து என் சொற்களில் தந்திருக்கிறேன்).

தமிழ்ப் படங்களில் காணப்படும் தர்க்கம், உணர்ச்சிகரமான நாடகங்கள், நாயக சாகசங்கள், பிரச்சினைகள் கையாளப்படும் விதம் ஆகியவற்றைப் பார்க்கும்போது அவை அறிவு வளர்ச்சி பெற்ற, பக்குவமான ஒரு மனதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். பார்வையாளர்களின் ரசிப்புத் தன்மை, அவர்களது எதிர்பார்ப்பு ஆகியவை 15 வயதுச் சிறுவர் நிலையில் இருப்பதையே பெரும்பாலான தமிழ்ப் படங்களின் கட்டமைப்பு பிரதிபலிக்கிறது. சில விதிவிலக்குகள் நீங்கலாகத் தமிழ் சினிமாவின் பொதுப் பண்பு இதுதான்.

அர்த்தம் இழக்கும் தணிக்கை

ரசிப்புத்தன்மையின் சராசரி வயது விடலைப் பருவத்தினரின் வயதாக இருப்பதால்தானோ என்னமோ இப்போதெல்லாம் பொழுதுபோக்குப் படங்கள் எடுப்பவர்கள் பலர் விடலைச் சிறுவர்களை மட்டுமே குறிவைத்துப் படமெடுக்கிறார்கள். விடலைச் சிறுவர்களின் உலகில் பிரதான இடம்வகிக்கும் பாலியல் குறுகுறுப்புகள், பாலியல் சார் கற்பனைகள் ஆகியவற்றை வைத்தே படத்தை எடுத்துவிடுகிறார்கள். படத்தில் வரும் பிரச்சினைகள், வசனங்கள், நகைச்சுவை எல்லாமே விடலைத்தனமாக இருக்கின்றன.

அண்மையில் திரைக்கு வந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘கவலை வேண்டாம்’ஆகிய படங்களை முன்வைத்து இதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். கடந்த ஆண்டு வெளியான ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம் வெற்றிகரமாகப் பயன்படுத்திய உத்தியின் தொடர்ச்சியாகவே இந்தப் படங்களைக் கருத வேண்டும்.

இரண்டு படங்களிலுமே பேச்சுக்குக்கூடக் கதையோ, சொல்லிக்கொள்ளும்படியான திரைக்கதையோ இல்லை. இருப்பதெல்லாம் பாலியல் நகைச்சுவை, பாலியல் சீண்டல்கள், பாலியல் வசைகள். ‘கவலை வேண்டாம்’ படத்தின் டீஸர் வெளியானபோது அதில் இடம்பெற்றிருந்த காட்சியொன்றில் கதாநாயகன் உள்ளாடை அணியாமல் கால்சட்டை போடுவதை அவன் காதலி கண்டிப்பதுபோல ஒரு காட்சி வரும். அதற்குக் கதாநாயகன் திருவாய் மலர்ந்தருளும் பதிலை ஆபாசம் என்று சொல்வது ஆபாசத்துக்கு அவமானம். படத்தில் இந்தக் காட்சியில் நாயகன் பேசும் வசனம் மவுனமாக்கப்பட்டுள்ளது. ஆனால், டீஸரிலேயே அதைக் கேட்டுப் பரவசமடைந்த ரசிக சிகாமணிகள் அந்தக் காட்சியின்போது அரங்கம் அதிரக் கை தட்டுகிறார்கள். தணிக்கை இல்லாத யூடியூப் தளத்தில் அரங்கேற்றப்பட்டுப் பிரபலப்படுத்திய பிறகு தணிக்கைத் துறை பரிந்துரைக்கும் மவுனங்கள் தம் பொருளை இழந்துவிடுகின்றன.

உச்சரிக்கப்படாமல் உணரப்படும் ஆபாசம்

ஆபாச நகைச்சுவையில் இவர்கள் கண்டுபிடித்த இன்னொரு உத்தி, பாலியல் வசைகள். ஒருவர் பாலியல் வசைச் சொல்லைச் சொல்லவருவதுபோல் சொல்லி நிறுத்துவார். மற்றவர்கள் போலி அதிர்ச்சியுடன் அவர் வாயைப் பொத்துவார்கள். அவர் உடனே வேறொரு சாதாரணமான வார்த்தையைச் சொல்லி, ‘அதைத்தான் சொல்ல வந்தேன்’ என்பார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு அது என்னவென்று புரிந்துவிடும்.

பாலியல் வசைச் சொல்லைக் காது ‘குளிர’க் கேட்ட திருப்தியை இது விடலைத்தனமான ரசிகர்களுக்குக் கொடுக்கும். விவேக், சந்தானம் எனப் பலரும் பயன்படுத்தியிருக்கும் இந்த உத்தியை இப்போதெல்லாம் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் தாராளமாகப் பயன்படுத்துகிறார்கள். ‘கவலை வேண்டாம்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய இரு படங்களிலும் இந்த உத்தி காற்றில் மாசுபோலப் பரவியிருக்கிறது. மனோபாலா என்னும் முன்னாள் இயக்குநர், மூத்த நடிகர், ஒரு பெண்ணைப் பார்த்து, சிறிதும் கூச்சமின்றி மிக மோசமான ஒரு வசைச் சொல்லைச் சொல்லாமல் சொல்லி விடலைகளின் கைத்தட்டலை அள்ளிக்கொள்கிறார்.

இதுதான் உங்கள் அடையாளமா?

இதே படத்தில், பால சரவணன் என்னும் வளர்ந்துவரும் நகைச்சுவை (?) நடிகர் குன்னூரில் மலைவாழ் சமூகத்துப் பெண்ணைக் காதலிப்பார். அவர்களுடைய திருமணச் சடங்கு ஒத்துவராததால் பிரிந்துவிட முடிவுசெய்வார். அது குறித்த பேச்சில் கீழ்த்தரமான சொல் ஒன்று இடம்பெறும். அதுவும் பாதி வசனத்தைச் சொல்லி, முழு வசையை உணர்த்தும் வசனம்தான். அது போதாதென்று பால சரவணனுக்கு மலைவாழ் மக்கள் வழங்கும் தண்டனையும் அது காட்சிப்படுத்தப்பட்ட விதமும் மலினமான சிந்தனைக்கு இன்னொரு உதாரணம். அப்போது உதிர்க்கப்படும் வசனங்களும் கீழான ரசனையின் பிரதிபலிப்பு.

இத்தகைய காட்சிகள், வசனங்கள் இப்போதுதான் வருகின்றன என்பதில்லை. ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களும் பாரதிராஜா, மணி ரத்னம் போன்ற இயக்குநர்களும்கூட இவற்றைப் பயன்படுத்தியவர்கள்தான். எல்லோருக்குமே விடலைத்தனமான ரசிகர்களின் ஆதரவு தேவைதான். ஆனால், படத்தின் ஒரு ஓரத்தில் கூச்சத்தோடு லேசாக எட்டிப் பார்க்கும் விதத்திலேயே பெரும்பாலானவர்கள் இந்த உத்திகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன், டீகே போன்ற இயக்குநர்கள், பிரகாஷ் குமார், பாலாஜி, மனோபாலா போன்ற நடிகர்கள் இவற்றைத் தங்களது அடையாளமாகவே கொள்ளும் அளவுக்குப் பயன்படுத்துகிறார்கள். தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் ஜீவா போன்ற நடிகர்களும் இந்தப் போக்கில் இணைந்துகொண்டிருக்கிறார்கள். தணிக்கைத் துறை இவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

கவனம் தேவை

வயது வந்தோருக்கான படங்களை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. பாலியல் நகைச்சுவையும் நகைச்சுவையின் ஒரு பகுதிதான். ஆனால், இவர்கள் எடுப்பது வயது வந்தோருக்கான படங்களை அல்ல. விடலைகளுக்கான படங்களை. இயக்குநர் வஸந்த் ‘சத்தம் போடாதே’ என்னும் படம் எடுத்தார். கதாநாயகனின் ஆண்மைக் குறைவுதான் படத்தின் மையமான பிரச்சினை. இது வயது வந்தோருக்கான கதைக்களம். கார்த்திக் சுப்பராஜின் ‘இறைவி’ படத்தில் தன் தோழனுடன் பாலியல் உறவை விழையும் ஒரு பெண் திருமணம் என்னும் பந்தத்துக்குள் சிக்கிக்கொள்ள விரும்ப மாட்டாள்.

இது வயது வந்தோருக்கான பிரச்சினை. பாலுமகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’, பி. வாசுவின் ‘பன்னீர் புஷ்பங்கள்’ ஆகிய படங்கள் விடலைப் பருவத்தினரின் வெவ்வேறு பிரச்சினைகளைப் பக்குவமான முறையில் கையாண்டன. பாரதிராஜாவின் ‘சிவப்பு ரோஜாக்கள்’, கவுதம் மேனனின் ‘நடுநிசி நாய்கள்’ ஆகிய படங்களில் கையாளப்படுபவை வயது வந்தோருக்கான பிரச்சினைகள். ரவிச்சந்திரன்களும் டீகேக்களும் கையாள்வது விடலைகளுக்கான விடலைத்தனமான சமாச்சாரங்களை. விடலைத்தனமான வக்கிரங்களை. விடலைப் பருவத்தினரின் உண்மையான பிரச்சினைகளைக் கவனமாகக் கையாள வேண்டுமென்றால் அதற்கு வாழ்வு குறித்த அக்கறையும் கொஞ்சமாவது கலையுணர்வும் வேண்டும்.

உண்மையில் பாலியல் நகைச்சுவைகள் புத்திசாலித்தனமாகவும் நுட்பமாகவும் கற்பனை வளம் கொண்டவையாகவும் இருக்கும். உலகின் எல்லா மொழிகளிலும் இத்தகைய நகைச்சுவைகள் ரசிக்கத்தக்க விதத்தில் புழங்கிவருகின்றன. ஆனால், இவர்களுடைய வசனங்களில் பாலியல் சொற்கள் இருக்கும். நகைச்சுவை இருக்காது. பெண் உடல், பாலுறவு ஆகியவை குறித்த விடலைத்தனமான புரிந்துணர்வில் விளைந்த சொற்கள் இருக்கும். கற்பனை வளமோ, நுட்பமோ இருக்காது.

விடலைத்தனத்தையும் மலினமான ரசனையையும் சுரண்டும் போக்கைத் தொடங்கிவைத்தவர்கள் இவர்கள் அல்ல. ஆனால், அவற்றையே தங்களது முதலீடாக இவர்கள் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். பொறுப்புணர்வும் பக்குவமும் அற்ற இந்தப் போக்கு எந்த விதத்திலும் அவர்களுக்குப் பெருமை சேர்க்காது.

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x