Published : 17 Dec 2016 12:00 PM
Last Updated : 17 Dec 2016 12:00 PM

வீழ்ந்தது ஆணிவேரா, சல்லிவேரா?

வார்தா புயலில் சென்னையில் பார்க்கும் இடமெல்லாம் மரங்கள் வீழ்ந்துள்ளன. இப்படி வீழ்ந்தவற்றில் பெரும்பாலானவை ஆழமாக ஆணி வேர் கொண்டிருக்காத மரங்கள். மேம்போக்காக வேர் பரப்பும் சல்லி வேரைக்கொண்டவை. இவற்றை உள்ளூர் மரங்கள் - வெளிநாட்டு மரங்கள் என்று பகுப்பதைவிட, ஆழ வேர் கொண்ட மரங்கள் - மேற்பரப்பு வேர் கொண்ட மரங்கள் என்று பகுப்பது பயன் தரும்.

உள்ளூர் மரங்களிலும் ஆணி வேர் இல்லாத சில மர வகைகள் உண்டு. குறிப்பாக தென்னை, பனை போன்றவற்றுக்கு ஆணி வேர் கிடையாது. ஆனால் தென்னையைவிட பனை காற்றை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியது. இதற்குக் காரணம் அவற்றின் இலை அமைப்பு. பனையின் இலைகள் கிளைகளற்று, பெரும் கவிகை (இலைக்குடை) இல்லாமல் வளர்ந்திருக்கும். காற்று இவற்றைத் தள்ளிவிட்டுச் செல்லாது. ஆனால் தென்னையின் இலை அமைப்பு காற்றை எதிர்கொள்ள இயலாத அளவில் அகலமாக இருப்பதால், காற்று மரத்தைத் தள்ளிவிடும் சாத்தியம் அதிகம்.

அயல் மரத்தின் ஆழவேர்

வெளிநாட்டில் இருந்து வந்த மரங்களில் ஒன்றான சீமைக்கருவேலம் (Prosopis juliflora) ஆழமான வேர் அமைப்புக் கொண்டது. தென்னமெரிக்காவைத் தாயகமாகக்கொண்ட இந்த மரம், ஏறத்தாழ 170 அடி ஆழத்துக்கு வேர்களை மண்ணில் ஆழப் பதிக்கும் திறன் கொண்டது என்று ஃபிலிப் என்ற ஆராய்ச்சியாளர் பதிவு செய்துள்ளார். இதனால்தான் அவை எந்த ஒரு வறட்சியையும் தாங்கும் திறனைப் பெற்றுள்ளன.

நமது நாட்டு மரமான வன்னி மரம் இதே குடும்பத்தைச் சேர்ந்தது. வன்னி 70 அடி ஆழத்துக்கும் அதிகமாக வேர்களை இறக்கும் திறன் கொண்டது. நமது நாட்டு மரங்களில் ஒன்றான மாமரம் ஏறத்தாழ 20 அடி ஆழத்துக்கே வேர் இறக்கும் திறனைக் கொண்டுள்ளதை இங்கே கவனிக்க வேண்டும்.

யாருக்கான மரம்?

இப்படி ஒவ்வொரு மரமும் அதற்கே உரிய வேர் மண்டலத்தைக்கொண்டு அமைந்துள்ளன. அதற்கேற்ப அவற்றின் நிலைப்புத் திறன், புயல்காற்றை எதிர்கொள்ளும் திறன் போன்றவை அமையும். பைன் (தேவதாரு), தைலமரம் (யூகலிப்டஸ்), சவுக்கு போன்ற மரங்கள் தொழிற்சாலைகளின் மூலப்பொருளாகப் பயன்படும் என்பதற்காகவே, நம் பகுதிகளில் பெருமளவு நடப்பட்டன. அடித்தட்டு மக்களின் தேவையை மனத்தில்கொண்டு அவை நடப்படவில்லை. இவற்றின் வேகமான வளர்ச்சி மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டதே தவிர, அவற்றின் பிற குணநலன்கள் கவனத்தில் கொள்ளப்படவே இல்லை.

இப்படி அறிமுகப்படுத்தப்பட்ட, அதிவேகமாக வளரும் மரங்களே நகரங்களிலும், ‘மரம் நடும்' விழாக்களிலும் பெரும்போலும் இடம்பெறுகின்றன. மரம் நடுதல் சார்ந்த புரிதலில் மாற்றம் தேவை என்பதே, இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x