Published : 15 Jul 2014 10:09 AM
Last Updated : 15 Jul 2014 10:09 AM

சர்க்கரை நோய்க்கு மாற்றுத் தீர்வு என்ன?

எனக்கு வயது 19. கடந்த சில நாட்களாகச் சிறுநீர் கழித்தால் எரிச்சலாக உள்ளது. எங்கள் வீட்டில் உள்ளவர்கள் சூட்டின் காரணமாகத்தான் இப்படி இருக்கும் என்று சொன்னார்கள். அதனால் இளநீர் போன்ற குளிர்ச்சி தரும் பொருட்களை அருந்தினேன். சில நாட்கள் சரியாக இருந்தது. கோழி இறைச்சி சாப்பிட்டால் திரும்பவும் எரிகிறது. அடிக்கடி சிறுநீர் வருகிறது. இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

- ஹனீபா, மின்னஞ்சல்

தண்ணீர் குடிக்காமல் இருப்பது இதற்கு ஒரு காரணம். சிறுநீர் என்பது கபத்தின் இருப்பிடம், அங்குப் பித்தம் சேர்ந்ததால் சிறுநீர் எரிச்சலுடன் போகலாம். ஒரு Ultrasound abdomen pelvis செய்து சிறுநீர்ப் பையில் கற்கள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். காலையில் முதலில் செல்லும் சிறுநீரில் நடுவில் வரும் சிறுநீரைப் பிடித்து (Midstream urine) Culture and sensitivity பரிசோதனை செய்ய வேண்டும். பழுப்பு அணுக்கள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

அதற்குப் பின் நெருஞ்சி முள் கஷாயத்தில் கற்பூரச் சிலாஜி பஸ்மம் சேர்த்துச் சாப்பிடலாம். சதாவரி லேகியம் காலையிலும் மாலையிலும் இரு வேளை சாப்பிடலாம். நன்னாரி மணப்பாகு இரண்டு நேரம் சாப்பிடலாம். காரம், புளி, எண்ணெய், உப்பு போன்றவற்றைக் குறைக்க வேண்டும். மீண்டும் மீண்டும் வருகிறது என்று சொன்னால், எந்தக் காரணத்தால் வருகிறது என்பதைத் தெளிவாகக் கண்டறிய வேண்டும்.

இதற்கு Blood urea, Creatinine, Uric acid போன்றவற்றைப் பார்ப்பதும், மூத்திரத்தில் பழுப்பு இருக்கிறதா என்றும், Ultrasonogram செய்து பார்ப்பதும் நல்லது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வாழைத் தண்டு, கொத்தமல்லி, அகத்திக் கீரை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இளநீர் குடிக்கலாம். கரும்புச் சாறு குடிக்கலாம்.

Chronic relapsing prostatitis உள்ளவர்களுக்கு ஆயுர்வேதத்தில் சந்திரபிரபா என்று ஒரு குளிகை உள்ளது. அதை உணவுக்குப் பின் இரண்டு வேளை சாப்பிடலாம்.

நான் Sarcoidosis-க்காக ஸ்டீராய்ட் எடுத்துவந்தேன். 3 மாதங்களாக விழித்திரையில் பிரச்சினை உள்ளது. ஒன்றரை வருடத்துக்கு முன்பிருந்து உடல் பருமனாகிவிட்டது. இப்பொழுது எனக்கு வயது 36. எடை 77 கிலோ, உயரம் 165 செ.மீ. உடல் பருமன் குறைய ஏதாவது வழி உள்ளதா?

- மீனாட்சி வெங்கடேஷ், சென்னிமலை

Sarcoidosis பொதுவாக மாறிவிடும். நீண்ட நாட்கள் ஸ்டீராய்ட் பயன்படுத்தினால் எலும்புகளின் கனம் குறையும். வயிற்றில் குடற்புண் வரும், நீரிழிவு நோயும் வரலாம். வயிற்றில் புண் வராமல் இருப்பதற்காக, இத்துடன் கால்சியம் சாப்பிட வேண்டும். உடல் எடையைக் குறைப்பதற்குப் புனர்னவாதி கஷாயம், சந்திரபிரபா மாத்திரை, திரிபலாதி சூரணமும் சாப்பிடலாம். வேங்கை காதலை 50 கிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதைத் தண்ணீருக்குப் பதில் குடிக்கலாம். பொதுவாக Sarcoidosis தானாகவே குணமடைகிற நிலைகளையும் பார்த்திருக்கிறேன்.

எனக்கு நீரிழிவு நோய் உள்ளது. தற்போது 66 வயது ஆகிறது. பிராஸ்ட்டேட் சுரப்பி வீக்கம் அடைந்துள்ளது. PSA சுரப்பி 13.5 இருக்கிறது. கடந்த மாதம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்தேன், அது 400 இருந்தது. மருந்து சாப்பிட்டு வருகிறேன். இதற்கு ஆயுர்வேதத் தீர்வு ஏதாவது உண்டா?

- ஏ. சதகத்துல்லா, திருச்சி

மருந்தைச் சாப்பிட்டுவிட்டு 3 மாதங்கள் கழித்து பரிசோதிக்கவும். புற்று போன்ற நிலை இருந்தால் மிகவும் அதிகமாக PSA கூடியிருக்கும். இது வயதில் வரும் வீக்கத்தால் ஏற்பட்ட அளவு என்றே நினைக்கிறேன். மருந்தைச் சாப்பிட்ட பிறகு, மீண்டும் ஒருமுறை பரிசோதிக்கவும். தேவைப்பட்டால் Biopsy எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் சாப்பிட்ட மருந்து நல்ல மருந்துதான். ஆனால் சம்பிரதாயமாகக் கபத்தால் அபான வாயு அடைக்கப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு வருணதி கஷாயம், சந்திரபிரபா மாத்திரை, சுகுமார கிருதம் போன்றவற்றை நீங்கள் சாப்பிட்டு வர வேண்டும். மூன்று மாதச் சர்க்கரை அளவு (HbA1C) பார்த்து, அதை 7க்குக் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சிறுநீர் பழுப்பு அணுக்கள் வரலாம்.

தங்களுடைய சர்க்கரை கட்டுப்பாடு போதாது, நீங்கள் இன்னும் நன்றாகக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதற்கு நிசாகதகாதி கஷாயம், கதக கதிராதி கஷாயம் 25 மி.லி. வீதம் எடுத்து 200 மி.லி. தண்ணீர் சேர்த்துத் தினசரி இரண்டு வேளை உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பழம் என்று எடுத்துக்கொண்டால் பாதி ஆப்பிள், ஒரு கைத்துண்டு மாதுளை, கொஞ்சம் பப்பாளி, நாவல் பழம், தர்ப்பூசணி ஆகியவற்றைச் சாப்பிடலாம். மாம்பழம், பலாப்பழம் அறவே வேண்டாம்.

நீங்கள் வெந்தயம் சாப்பிடுவதில் தவறில்லை. 20 நிமிடமாவது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

(குறிப்பு: இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்துகள் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஆனால், மருத்துவரின் நேரடி பரிந்துரையின்படியே உட்கொள்ள வேண்டும்.)

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x