Published : 16 Dec 2016 12:23 PM
Last Updated : 16 Dec 2016 12:23 PM

இயல்பாக இருப்பதுதான் சிறப்பு!

யூடியூப் தளத்தில் பலரும் வீடியோ பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அவற்றில் ஒரு சில பேட்டிகள் மட்டும்தான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். மற்றவை எல்லாம் ஒரே மாதிரியான கேள்வி, பதில்களாகத்தான் இருக்கும்.

ஆனால், சமீபகாலமாக ‘ஃபுல்லி ஃபில்மி ஃபுல்லி ஃப்ராங்க்’ (FULLY FILMY FULLY FRANK) எனும் யூடியூப் >http://bit.ly/1Rbl0kC) பக்கத்துக்காக அபிஷேக் எடுக்கும் பேட்டிகள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன‌.

‘நீ ஹீரோடா!’ என்று பலரும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தித் தள்ள, அதன் காரணமாக ‘ஸ்டார் இன்டர்வியூவர்’ அந்தஸ்த்தைப் பெற்றிருக்கும் அவரை நேரில் சந்தித்ததிலிருந்து...

“ப்ரோ.. ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். அடுத்த வருஷம் இன்னும் அடுத்த நிலைக்குப் போய்டணும் என்பதில் குறியாக இருக்கிறேன்” என்று தொடங்கினார். மதுரைக்காரர். விஸ்காம் படிப்பு. ஆர்.ஜே. வேலை. ஆனால் கனவெல்லாம் சினிமா. அதன் காரணமாக சென்னை வந்து ‘ஃபுல்லி ஃபில்மி’ எனும் நிறுவனத்தில் சேர்ந்து, சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுக்க ஆரம்பித்தார். இன்று அவரே பேட்டி கொடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

“எங்கியிருந்து ஜி கேள்விகளை எல்லாம் பிடிக்கிறீங்க..?” என்றவுடன் சிரித்துக் கொண்டே “உண்மைய‌ சொல்லணும்னா, நான் இதுவரை எந்தவொரு பேட்டிக்காகவும் தயார் பண்ணதே இல்லை. சொந்தமாகப் பேசச் சொன்னால் பேசிவிடுவேன். வெள்ளை பேப்பரில் எழுதிக் கொடுத்தால் எனக்கு நடுக்கம் வந்துவிடும்.

இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கும் போதுகூட, நான் யாரிடமும் பேச மாட்டேன். எனக்குத் தோன்றுவதைப் பேசிக் கடந்துவிடுவேன். தினமும் நான் பார்க்கும் சினிமாக்கள் மூலமாகத்தான் நான் எடுக்கும் பேட்டிகளுக்கு என்னைத் தயார் செய்துகொள்கிறேன். கேமரா ஆன் செய்யும் வரை, நான் என்ன பேசப் போகிறேன் என்பது எனக்குத் தெரியாது” என்கிறார் கேஷுவலாக.

“மறக்க முடியாத பேட்டி...” என்று ஆரம்பிக்கும் போதே அவருக்குள் இருக்கும் சினிமா ரசிகன் எட்டிப் பார்த்தபடியே, “மணிரத்னம் சாரைப் பேட்டி எடுத்த அனுபவம்!” என்றார்.

“அவருடைய‌ ‘ஓ காதல் கண்மணி’ படத்துக்காக துல்கர் சல்மானைப் பேட்டி எடுக்கப் போயிருந்தேன். அப்போது மணிரத்னம் சார் என்னைக் கடந்து சென்றார்.

கேட்டுத்தான் பார்ப்போமே என அங்கிருந்த மாலா மணியன் மேடத்திடம் என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு மணி சார்கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தரக் கேட்டேன். கேட்டுட்டு அங்கேயே 2 மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். மணி சாரைப் பேட்டி எடுக்காமல் இந்த இடத்தை விட்டு நாம் போகக் கூடாதுங்கிறதுல உறுதியா இருந்தேன்.

அப்புறம் கொஞ்ச நேரத்துல மணி சார் கூப்பிட்டார். ஐஸ்கிரீமைப் பார்த்தவுடன் ஒடிப் போகும் குழந்தை மாதிரி போய் அவரிடம் பேசி வீடியோ பேட்டி எடுத்தேன். பேட்டி அருமையா வந்ததுல அவருக்கும் ரொம்ப சந்தோஷம். ‘குட் மா!’ என்று அவரின் அக்மார்க் சொற்சிக்கனத்துடன் பாராட்டைத் தெரிவித்தார். இதே மாதிரி செல்வராகவன், வசந்தபாலன் பேட்டிகளையும் எடுத்தேன். அதெல்லாமே மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கின்றன.

அந்தப் பேட்டிகளை எல்லாம் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டினாங்க. எல்லா கிரெடிட்ஸும் அந்தப் பிரபலங்களுக்குத்தான். அவங்க அவ்ளோ தூரம் மனம் விட்டுப் பேசுறதாலதான் இந்தப் பேட்டிகள் எல்லாம் அவ்ளோ அருமையா வருது. மத்தபடி, எந்தவொரு அலங்காரமும் இல்லாமல், இயல்பா ஒருவருடன் ஒருவர் பேசிக்கிறதுதான் இந்தப் பேட்டிகளின் சிறப்பம்சம்னு நான் நினைக்கிறேன்” என்று சொன்னவர் ஆர்டர் செய்திருந்த ஜூஸை அருந்துகிறார்.

“பாராட்டுக்கள் எல்லாம் குவியுமே” என்று கேட்க “பேட்டி முடிவு பெறும்போதே ‘எப்படியிருந்தது?’ என்று கேட்டுவிடுவேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி அவங்க பாராட்டுக்களைத் தெரிவிப்பாங்க.

உதாரணத்துக்கு சிவகார்த்திகேயன் அண்ணா எப்போது பார்த்தாலும் ரொம்ப உற்சாகப்படுத்துவார். விஜய் சேதுபதி அண்ணா ஒருபடி மேலே போய், பாராட்டுடன் நின்றுவிடாமல், சுற்றியிருப்பவர்களையும் அழைத்து ‘இவன்தான் அபிஷேக். சூப்பரா பேட்டி எடுக்கிறான். ரொம்பத் தெளிவான பையன்’னு சொல்லி அறிமுகப்படுத்துவார்.

இன்னும் நிறைய பேர் ‘உன்னுடைய பேட்டிக்கு வரணும்னா நாங்க நிறைய ஹோம்வொர்க் பண்ண வேண்டியதா இருக்கு. உன்னுடைய அடுத்த கேள்வி என்னவா இருக்கும்கிறதை ஊகிக்க வேண்டியிருக்கு’ன்னு சொல்லியிருக்காங்க. அது பெரிய வார்த்தை! பேட்டியா மட்டுமல்லாமல், அவங்களுக்கு இது ஒரு அனுபவமாகவும் இருக்கணும்கிறதுல நான் கவனமா இருக்கேன். அது மட்டும் நிச்சயம்” என்றவருக்கு, இயக்குநர் பாலுமகேந்திராவைப் பேட்டி எடுக்க முடியாமல் போனது குறித்து ரொம்பவே வருத்தம்.

“அவரைப் பேட்டி எடுக்கணும்கிறது என்னுடைய‌ ரொம்ப நாள் ஆசை. அது இறுதிவரை நடக்கவேயில்லை. அவருக்கு அடுத்து, அஜித் சாரைப் பேட்டி எடுக்கணும்கிறது என்னோட ஆசை. அவர் பேட்டி கொடுக்க மாட்டார் என்று தெரியும். இருந்தாலும் அவர் ஆர்வமா பங்கெடுத்துக்கிற‌ F1 கார் ரேஸ் பற்றியாவது பேட்டி எடுக்கணும்னு வெறியோடு இருக்கிறேன்” என்றார்.

“அடுத்து சினிமாதானே..?” என்று கேட்டால், “நான் சென்னை வந்ததே, சினிமாவில் பாட வேண்டும் என்றுதான். எங்கம்மாவுக்கு நான் இதுவரை நல்ல பிள்ளையாக இருந்தது கிடையாது. அவங்களுக்காக நான் ஒரு நல்ல பாடகனாக வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நிறைய நடிக்க வாய்ப்புகள் வருகின்றன‌. ‘யானும் தீயவன்’ அப்படிங்கிற படத்துல‌ நடிச்சிருக்கேன். அடுத்த வருஷம் இன்னும் 2 படங்களில் நடிக்கப் போறேன். நான் நல்லா வரணும்னு வாழ்த்துங்க!” என்று கைகுலுக்குகிறார்.

கண்டிப்பா..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x