Published : 24 Nov 2022 06:11 PM
Last Updated : 24 Nov 2022 06:11 PM

சென்னையில் ஸ்லோவீனியப் படவிழா!

மலைகள், மாபெரும் ஏரிகள், மனம் குளிர வைக்கும் பசுமை என்றால் பல நாடுகள் உங்கள் நினைவுக்கு வரலாம். இயற்கை வழங்கிய அவ்வளவு அழகுடன் வசீகரிக்கும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்று ஸ்லோவீனியா. ஐரோப்பாவின் இதயம் என்று அழைக்கப்படும் இந்த தேசம், கலை, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைப் பேணிக் காப்பதிலும் அவற்றை ஆராதிப்பதிலும் தனித்த கவனம் செலுத்தி வரும் அமைதியான நாடு ஸ்லோவீனியா. அதன் முக்கிய ஊர்களில் ஒன்றான பிரானில் (Piran) பிறந்து, உலகமே கொண்டாடும் தலை சிறந்த வயலின் இசை மேதையாக, உலகப் புகழ்ப்பெற்றவர் பல சிம்பொனிகளை கம்போஸ் செய்தவர் ஜுசப்பே தர்த்தினி (Giuseppe Tartini). இவரது இசையின் தாக்கத்தால் உந்தப்பெறாத இத்தாலிய இசையமைப்பாளர்களே கிடையாது. அவ்வளவு ஏன், நம்முடைய இசைஞானி இளையராஜவையும் கூட இவர் பாதித்திருக்கிறார். ஜுசப்பே தர்த்தினியின் நினைவாக ஸ்லோவினியா ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய உப்புத் திருவிழாவைக் கொண்டாடுகிறது

இத்தாலிய மொழிக்குடும்பத்தின் வேர்களைக் கொண்ட ஸ்லோவீனிய மொழி பேசக்கூடிய மக்கள் வாழும் இந்த நாடு யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்து 1991இல் விடுதலை பெற்றது. விடுதலையடைந்த கடந்த இருபது ஆண்டுகளில், வாகன உற்பத்தி, சுற்றுலா, உணவு உற்பத்தி, மருந்து தயாரிப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ஸ்லோவீனிய மொழியில் உருவாகும் திரைப்படங்களை யுகோஸ்லாவிய உலக சினிமாவாக இதுவரைப் பார்த்து வந்த உலக சினிமா ஆர்வலர்கள், கடந்த இரு பத்தாண்டுகளாக நேரடிப் பிரதிநிதித்துவத்துடன் சர்வதேச உலகப் படவிழாக்களை அலங்கரித்து வரும் இந்த தேசத்தின் தலை சிறந்த படங்களைக் கண்டு வருகிறார்கள்.

வரும் டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை சென்னையில் 20வது சென்னை சர்வதேசப் படவிழா நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு அரசின் உதவியுடன் அதை ஒருங்கிணைக்கும் இண்டோ சினி அப்ரிசியேசன் பவுண்டேஷன் திரைப்படச் சங்கம், அதற்கு முன்னதாக வரும் 29, 30 (நவம்பர் 2022) ஆகிய இரு தினங்கள் ஸ்லோவீனியப் படவிழாவைச் சென்னையில் நடத்துகிறது. இதற்காக டெல்லியில் இயங்கிவரும் ஸ்லோவீனியக் குடியரசின் தூதரகமும் அதன் சென்னைக் கிளை (Embassy of the Republic of Slovenia in New Delhi and Consulate of Slovenia in Chennai) ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிச் சாலை உள்ள அலையான்ஸ் பிரான்சேஸ் ஆப் மெட்ராஸ் வளாகத்தில் இப்பட விழாவை நடத்துகின்றனர். நவம்பர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு 30 நிமிடம் நடைபெறும் தொடக்க விழா நிகழ்வுக்குப் பின், சரியாக 6.30 மணிக்கு ‘ஆல் எகைன்ஸ் ஆல்’ (All Against All/Vsi proti vsem/2019 Andrej Kosak) என்கிற 100 நிமிடப் படம் திரையிடப்படுகிறது. மேயர் தேர்தல் ஒன்றின் போது தனது போட்டி வேட்பாளர் மீது தற்போது மேயராக இருப்பவர் பரப்பிவிடும் அவதூறுகளையும் அவற்றின் விளைவுகளையும் சித்தரிக்கும் பொலிடிகல் த்ரில்லர் திரைப்படம் இது.

நவம்பர் 30 ஆம் தேதி மொத்தம் 3 படங்கள் அடுத்தடுத்து திரையிடப்படுகின்றன. மாலை 4 மணிக்கு ‘டோண்ட் ஃபர்கெட் டு ப்ரீத்’ (Don't Forget to Breathe/Ne pozabi dihati/2019/ Dir. Martin Turk/97 min), 6 மணிக்கு ‘எவ்ரிதிங் இஸ் டிப்ரெண்ட்’ (Everything Is Different/Jaz sem Frenk/2019/Dir. Metod Pevec/98 min), 8 மணிக்கு ‘கஜாஸ் வேல்ர்ட்’ (Gaja’s world/Gajin svet/2018/Dir. Peter Bratusa/89 min) என்கிற வரிசையில் திரையிடப்படவுள்ளன. சென்னையில் வசிக்கும் உலக சினிமா ஆர்வர்லர்கள் தவறவிடக் கூடாத தற்கால ஸ்லோவீனியன் சினிமாக்கள் இவை.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x