Last Updated : 06 Dec, 2016 10:44 AM

 

Published : 06 Dec 2016 10:44 AM
Last Updated : 06 Dec 2016 10:44 AM

ஆங்கிலம் அறிவோமே - 137: எப்பேர் பட்ட மனிதர்!

கேட்டாரே ஒரு கேள்வி

‘What a man!’ என்பது பாராட்டா? கேலியா?

**********

Sack என்றால் என்ன அர்த்தம்?

கோணிப்பை​ சாக்கு மூட்டைகளை sack என்று நாம் குறிப்பிடுவதுண்டு. பள்ளி மாணவர்களிடையே sack race நடத்தப்படுவது சகஜம்.

ஒருவரை sack செய்வது என்றால் அவரை வேலையிலிருந்து நீக்குவது என்று அர்த்தம். He was sacked for refusing to obey the orders.

ஒன்றை sack செய்வது என்றால் அதை அழிப்பது என்று அர்த்தம். ஒரு நகரத்தையோ, கட்டிடத்தையோ sack செய்வது என்றால் அங்குள்ள பொருள்களைக் கொள்ளையடிப்பது என்று பொருள்.

Sack off என்றால் ஒன்றைத் தவிர்ப்பது அல்லது தடுத்து நிறுத்துவது. Some of the team members sacked off training.

அமெரிக்காவில் பேச்சு வழிக்கில் “I want to sack out’’ என்றால் “நான் ​தூங்கப் போகிறேன்” என்று பொருள்!

****************

சென்ற வாரம் nuts தொடர்பான ஒரு வாசகியின் கேள்விக்கு விளக்கம் அளித்திருந்தேன். இதைத் தொடர்ந்து வேறு சில சமையல் பொருள்களின் ஆங்கிலப் பெயர்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. கீழே உள்ளவற்றின் ஆங்கிலப் பெயர் என்ன என்பதைக் கூறுங்கள்.

1)பெருங்காயம்

2)லவங்கம்

3)கறிவேப்பிலை

4)இஞ்சி

5)சுக்கு

6)வெந்தயம்

7)வெல்லம்

8)கடுகு

9)ஜீரகம்

10)பெருஞ் ஜீரகம்

11)பட்டை

12)கொத்தமல்லி

13)கசகசா

14)ஓமம்

15)எள்

**********

‘What a man!’ என்பது பிரிட்டனைப் பொருத்தவரை கேலி வாக்கியம். “சாலை ஓரம் சிறுநீர் கழிக்கிறானே, What a man” என்பதுபோல.

‘What a man!’ என்பது அமெரிக்காவில் பாராட்டு. “கிணற்றில் விழுந்த குழந்தையைக் குதித்துக் காப்பாற்றி இருக்கிறாரே, What a man!” என்பதுபோல.

**********

“‘History-Sheeter’ என்பது போன்ற சகஜமான வார்த்தைகூட இன்று பலருக்கும் புரிவதில்லை. இதுபோன்ற மேலும் சில வார்த்தைகளை விளக்குங்களேன்” எனக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

பலருக்கும் புரியவில்லை என்றால் அது எப்படிச் சகஜமான வார்த்தை என்பது எனக்கும் புரியவில்லை. என்றாலும் History Sheeter என்பவர் யார் என்பதை இந்தப் பகுதியில் விவரிக்கச் சந்தர்ப்பம் அளித்தற்காக அந்த வாசகருக்கு நன்றி.

யாராவது உங்களைப் பார்த்து History-sheeter என்றால் “ஆஹா நான் வரலாற்று நிகழ்வுகளை விரல் நுனியில் வைத்திருப்பதற்கான பாராட்டு இது” என்று புளகாங்கிதப்பட்டுத் தொலைக்காதீர்கள்.

காவல்துறையில History-sheeter என்ற வார்த்தை அதிகம் பயன் படுத்தப்படுகிறது. “நீண்ட காலக் கிரிமினல் பின்புலம் கொண்டவர்” என்று இதற்கு அர்த்தம்.

காவல் நிலையங்களில் குற்றவாளிகள் குறித்து History sheets என்ற வடிவில் ஆவணப்படுத்துவார்கள். (அமெரிக்காவில் இவற்றை Rap sheets என்பார்கள்). இதை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ‘C’ பிரிவில் உள்ள குற்றவாளி மீண்டும் குற்றங்களைச் செய்யும்போது ‘B’ பிரிவு History sheetக்கு மாற்றப்படுவார். ‘A’ பிரிவு என்பது உச்சகட்டக் கிரிமினல்களுக்கானது.

**********

மேலே குறிப்பிட்ட சமையல் பொருள்களின் ஆங்கிலப் பெயர்கள் இதோ: -

1)Asafeotida

2)Clove

3)Curry leaves

4)Ginger

5)Dry ginger

6)Fenugreek

7)Jagger

8)Mustard

9)Cumin seeds

10)Fe​nnel

11)Cinnamon​

12)Coriander

13)Poppy seeds

14)Thymol seeds

15)Sesame seeds

**********

Martyr என்றால் தேசத்துக்காக உயிரை விட்டவரா?

நண்பரே, martyr எனப்படுபவர் அடக்குமுறைக்கு அடிபணியாமல் தன் கொள்கைகளில் திடமாக இருந்ததால் கொலை செய்யப்பட்டவர். முன்பு மதம் தொடர்பாக மட்டுமே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இப்போது அரசியலுக்கும் பயன்படுகிறது. Martyr என்றால் தியாகி என்று கூறப்படுவதால் நல்ல நோக்கத்துக்காக உயிர்விட்ட அனைவரையுமே (சுதந்திரப்போராட்டத் தியாகிகள் உட்பட) martyrs என்று அழைக்க ஆரம்பித்து விட்டோம்..

****************

போட்டியில் கேட்டுவிட்டால்?

The counsel urged the court to ____________ down the obnoxious law.

1.enforce

2.declare

3.enact

4.strike

5.emphasize

Council என்றால் குழு. ஆனால் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் counsel என்று இருக்கிறது. இந்த இடத்தில் இதன் பொருள் வழக்கறிஞர். வாக்கியப்படி ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத சட்டத்தை நீக்க வேண்டுமென்று நீதிமன்றத்தை (நீதிபதியை) ஒரு வழக்கறிஞர் வலியுறுத்துகிறார். (obnoxious என்றால் மிக அதிக அளவில் அதிருப்தியைத் தரக்கூடிய என்று பொருள் - அதாவது extremely unpleasant).

வாக்கியத்தில் கோடிட்ட இடத்தில் எதிர்மறையான ஒரு வார்த்தை இடம் பெற்றால்தான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் வாக்கியத்தின் பொருள் அப்படி. தவிரக் கோடிட்ட இடத்தைத் தொடர்வது down என்ற வார்த்தை. எனவே enforce (கட்டாயமாக நடைமுறைப்படுத்துதல்), declare (அறிவித்தல்), enact(ச​ட்டமாக்குதல்), emphasize (வற்புறுத்துதல்) போன்ற வார்த்தைகள் இங்குப் பொருத்தமாக இருக்காது.

Strike என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும். (Turn என்ற வார்த்தை கொடுக்கப்பட்டிருந்தால் அதுவும் பொருத்தம்தான்). Strike down என்றால் ஒன்றை இல்லாததாக்குவது என்று பொருள். The Management struck down the appointment என்றால் ஒருவரது வேலை நியமனத்தை நிர்வாகம் நீக்கிவிட்டது (அதாவது இல்லாமல் செய்து விட்டது) என்று பொருள். Strike down என்பதற்குச் சம வார்த்தைகளாக nullify, annul ஆகியவற்றைக் கூறலாம்.

**********

சிப்ஸ்

* Impromptu என்றால்?

தன்னிச்சையாக. முன்னேற்பாடின்றி. அதாவது unplanned, offhand.

* Overmorrow என்கிறார்களே, அப்படியென்றால்?

Day after tomorrow.

* ஒருவர் I am working என்கிறார். ‘நானும்தான்’ என்று கூறுவது எப்படி? “I too am working” என்பது சரியில்லைபோல் தோன்றுகிறதே!

“So am I” என்று நீங்கள் கூறலாம்

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x