தேர்வுக்குத் தயாரா? - உயிரி-விலங்கியலிலும் வெற்றி பெற

தேர்வுக்குத் தயாரா? - உயிரி-விலங்கியலிலும் வெற்றி பெற
Updated on
3 min read

உயிரி-விலங்கியலின் 7 பாடங்களில் முதல் பாடத்தை மாணவர்கள் சிரமமாக உணருகிறார்கள். மருத்துவ மேற்படிப்பை இலக்காகக் கொண்ட மாணவர்களுக்கு இப்பாடம் முக்கியமானது. வினாத்தாளின் 35 மதிப்பெண்கள் முதல் பாடத்திலிருந்தே இடம்பெறுகின்றன. 2 பத்து மதிப்பெண், 1 ஐந்து மதிப்பெண், 2 மூன்று மதிப்பெண், 4 ஒரு மதிப்பெண் என அவ்வினாக்கள் அமையும்.

பெரும்பாலான மாணவர்கள் 1 மதிப்பெண் தவிர்த்து, முதல் பாடத்தின் வினாக்களைச் சாய்ஸில் விடுகிறார்கள். ஆனால் வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தைச் சரியாகக் கவனிப்பது, உடனுக்குடன் அவற்றைப் படிப்பது, படித்ததைச் சிறு தேர்வுகளில் அடிக்கடி எழுதிப் பார்ப்பது போன்ற வழிமுறைகளின் மூலம் முதல் பாடத்தையும் சிறப்பாகத் தயார் செய்யலாம். பாடத்தின் உட்தலைப்புகளில் ஒரே பாடப்பொருள் மீண்டும் இடம்பெறும்போது அவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளைத் தனியாகக் குறித்துக்கொண்டு படித்தால் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

கட்டாய வினா

உயிரி-விலங்கியல் எவ்வளவு கடினமானது என்பதைத் தீர்மானிப்பவை கட்டாய வினாக்களே. 5 மதிப்பெண் பகுதியில் வினா எண் 31 கட்டாய வினாவாகக் கேட்கப்படுகிறது. 3-வது பாடத்திலிருந்து இக்கட்டாய வினா அமையும். 12 ஐந்து மார்க், 30 மூன்று மார்க் அடங்கிய இப்பாடத்திலிருந்து நேரடியான 5 மார்க் கேள்வியைக் கேட்பதை விட, அவ்வினாவினைச் சற்றே மாற்றி கேட்பதும், 2 மூன்று மார்க் கேள்விகளை இணைத்துக் கேட்பதும் உண்டு. எனவே அதற்கேற்றவாறு கவனமாகப் படியுங்கள்.

நேர மேலாண்மை

மாதிரித் தேர்வுகளின்போது குறிப்பிட்ட நேரத்தில் உயிரி-தாவரவியலை முடிக்கப் பயிற்சி எடுக்க வேண்டும். தேர்வின் தொடக்கத்தில் வினாத்தாளை வாசிப்பதற்கான கால அவகாசத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில் நேர மேலாண்மை தொடங்குகிறது. தேர்வின் நிறைவாக 2 பாடங்களையும் திருப்பிப் பார்ப்பதற்குத் தலா 10 நிமிடங்களேனும் நேரம் ஒதுக்கி எழுதிப் பழக வேண்டும். வினாத்தாளின் பெரிய பதில்கள் அவசியப்படும் வினாக்கள், படங்கள் அடங்கிய பதில்கள் ஆகியவற்றைச் சாய்ஸில் ஒதுக்குவது நேர மேலாண்மைக்கு உதவும்.

உள்ளிருந்து ஒரு மதிப்பெண்கள்

ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கப்படும் 16 வினாக்களில் 8 மட்டுமே பாடங்களின் பயிற்சி வினாக்களில் இருந்து கேட்கப்படுகின்றன. ஏனைய 8 வினாக்கள், பாடத்தின் உள்ளிருந்தோ, பாட வினாக்களைச் சற்றே மாற்றியோ அமைகின்றன. இந்த உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்களில் மாணவர்கள் தவறிழைப்பது நடக்கும். எனவே தயாரித்த வினாக்களை அவற்றுக்கான முன்னெச்சரிக்கையுடனே படிக்க வேண்டும். முதல் பாடத்தில் 4 வினாக்களும், 2, 6-வது பாடங்களிலிருந்து தலா 3, 7, 3-வது பாடங்களிலிருந்து தலா ஒன்று, 4 மற்றும் 5வது பாடங்களில் இருந்து தலா 2 என்பதாக ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுகின்றன.

3 மதிப்பெண்ணில் முழுமை

3 மதிப்பெண் பகுதியானது 12 வினாக்களில் இருந்து 8 வினாக்களுக்குப் பதிலளிப்பதாக இருக்கும். 1, 3, 6 ஆகிய பாடங்களில் இருந்து தலா 2 வினாக்களும், 2, 5, 7 ஆகியவற்றிலிருந்து தலா ஒன்று, 4வது பாடத்திலிருந்து 3 வினாக்களும் கேட்கப்படுகின்றன. வழக்கமான வினாவினை மாற்றி மறைமுகமாகக் கேட்பதும் உண்டு. 3 பாயிண்டுகள் எழுதினால் முழு மதிப்பெண்கள் என்றபோதும், கூடுதலாக ஒன்றிரண்டு எழுதுவது நல்லது. “என்றால் என்ன?, வகைகள் கூறுக”, போன்ற கேள்விகளில் உதாரணம் கேட்கவில்லை என்றபோதும், அவற்றை எழுதுவது அவசியம். படம் வரைந்து பாகம் குறிப்பதில், 4 பாகங்கள் போதுமென்றாலும் அவற்றை 6-ஆக குறிப்பது நல்லது. 3 மதிப்பெண் பகுதியின் அனைத்து வினாக்களும் விடை தெரிந்ததாக இருப்பினும், அவற்றில் நன்கு தெரிந்த முழு மதிப்பெண்ணுக்கு வாய்ப்புள்ள வினாக்களுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும்.

அள்ளித் தரும் 5 மதிப்பெண்

இப்பகுதியில் 5 வினாக்களில் இருந்து ஒரு கட்டாய வினா உட்பட 3 வினாக்களுக்கு மாணவர்கள் பதிலளிப்பார்கள். 1, 2, 3, 4, 7 ஆகிய பாடங்களில் இருந்து தலா ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் முதல் பாட வினாவினைச் சாய்ஸில் விடுவார்கள். 2-வது பாடத்தின் கேள்வியானது கலவையாக அமைந்திருக்கும். அவற்றில் ‘எய்ட்ஸ்’ அல்லது ’வைரஸ், பாக்டீரியா’ தொடர்பான வினாக்கள் படிப்பதற்கு எளிமையானவை. 4-வது பாடத்தில் பண்பு, நோக்கம், பயன்பாடுகள் தொடர்பான வினாக்களைத் தேர்வு செய்து எழுதலாம். வரிசைக்கிரமமான பாயிண்டுகள், படங்கள் இல்லாதது என இந்த வினாக்கள் முழு மதிப்பெண் தரக் கூடியவை.

2 ஐந்தாக 10 மதிப்பெண்

7 பாடங்களில், 1, 5, 6 ஆகிய மூன்று பாடங்களில் இருந்து மட்டுமே 10 மதிப்பெண் வினாக்கள் அமையும். இவற்றில் முதல் பாடத்திலிருந்து 2, 5, 6-வது பாடங்களில் இருந்து தலா 1 என அவை அமைந்திருக்கும். இந்த 4 வினாக்களில் இருந்து நன்கறிந்த 2 வினாக்களுக்கு மாணவர்கள் பதிலளிக்கலாம். முதல் பாடமானது அதிக வினாக்களை உள்ளடக்கி இருப்பதால், 5, 6 ஆகிய பாடங்களில் இருந்து 10 மதிப்பெண் பகுதிக்குத் தயாராவது மாணவர்களின் வழக்கமாக உள்ளது. அவர்கள் கூடுதலாக முதல் பாடத்தின் முக்கிய வினாக்களையும் படித்துச் செல்வது நல்லது. 5, 6-வது பாடங்களில் நேரடி 10 மார்க் வினா கேட்பதைவிட, அதனை 2 ஐந்து மார்க் கேள்விகளாகக் கேட்கிறார்கள். ஆனால் ப்ளூ பிரிண்ட் அடிப்படையில், இந்த 2 பாடங்களில் 5 மார்க் கேட்கப்படுவதில்லை. இச்சிறு வேறுபாட்டினை மனதில் வைத்துப் பாடத் தயாரிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

சதம் அடிக்க

உயிரியல் பாடத்தில் சதம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை, உயிரி-விலங்கியல் வினாத்தாளே தீர்மானிக்கிறது. சதத்தை இலக்காகக் கொண்ட மாணவர்கள், அனைத்துப் பாடங்களையும் முழுமையாகப் படிக்க வேண்டும். பிரத்யேக ‘கைடுகள்’, முந்தைய வினாத்தாள்கள் போன்றவற்றை ஒதுக்கிவிட்டு, தனக்கான தயாரிப்புகளில் இருந்தே திருப்புதல்களை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிரண்டு மதிப்பெண் இழப்பு என்பது ஒரு மார்க் பகுதியிலே நடப்பதால், அப்பகுதியில் குறிப்பாக முதலாவது பாடத்தில் கவனம் அவசியம்.

(பாடக்குறிப்புகளை வழங்கியவர்: எம்.ஹபீப் முஹமது, முதுகலை விலங்கியல் ஆசிரியர், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்.)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in