Published : 11 Jul 2014 09:41 AM
Last Updated : 11 Jul 2014 09:41 AM

அட்டகத்தி தினேஷுடன் மோதல் ஏன்?- சசிதரன்

கோடம்பாக்கத்தில் முதல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பைத் தேடிப்பிடிப்பதே குதிரைக் கொம்பு. இதில் முதல் படம் இயக்கிக் கொண்டிருக்கும்போதே இரண்டாவது படத்துக்கு வாய்ப்புக் கிடைத்து விடுவது முயல் கொம்பு. சமீபத்தில் இரண்டு அறிமுக இயக்குநர்கள் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஒருவர் ‘குக்கூ’ பட இயக்குநர் ராஜு முருகன். மற்றொருவர் ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஆர். சசிதரன். முதல் படம் முடியும் தறுவாயில் இருக்கும்போது ‘கடை எண் 6’ என்ற இரண்டாவது படத்தையும் இயக்க ஆரம்பித்துவிட்டார். அவர் தமிழ் சினிமாவின் போக்கைக் கொஞ்சம் மாற்றியமைத்த ‘சென்னை 28’ படத்தின், திரை வசனகர்த்தாவும்கூட. அவரிடம் பேசியதிலிருந்து…

இரண்டு படங்களில் எந்தக் கதையை உங்களது முதல் படமாக இயக்க நினைத்தீர்கள்?

இரண்டாவதாக இயக்கிவரும் கடை எண் 6தான் என் கதை எண் 1. இந்தப் படத்தையே என் முதல் படமாக உருவாக்க விரும்பினேன். ஏனென்றால் இது ஒரு காமெடி த்ரில்லர் படம். அண்ணன்கள் அமீர், பாண்டிராஜ், பிரபுசாலமன் ஆகியோர் இந்தக் கதையைக் கேட்டு, தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் படமாக்க விரும்பினார்கள். மூவரில் யாருக்கு இயக்குவது என்ற தர்மசங்கடமே வந்துவிட்டது. ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக இரண் டாவது கதையை இயக்கும் வாய்ப்பு வர உடனே ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தை ஆரம்பித்துவிட்டேன்.

இதற்கிடையில் கடை எண் 6 படத்தின் கதை, வெங்கட் பிரபு சாரின் நண்பரான கமல் ஏகாம்பரத்துக்கு நன்றாகவே தெரியும். அவர், வாருங்கள் அந்தக் கதையைத் தயாரிப்போம் என்றார். ரசனை யுள்ள, சினிமா தெரிந்த, துடிப்பான தயாரிப்பாளர். இந்தக் கதையைத் தயாரிக்க விரும்பிய அமீர், பாண்டிராஜ், பிரபுசாலமன் ஆகியோரிடம் ஆசிகள் வாங்கிக்கொண்டு கமல் ஏகாம்பரத்துக்காகத் தற்போது கடை எண் 6ஐ இயக்குகிறேன். இந்தக் கதை எனக்குத் திரையுலகில் பெரிய நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொடுத்துச்சு. 200 தயாரிப்பாளர்கிட்ட இந்தக் கதையைச் சொல்லியிருக்கேன். கேட்டு முடிச்சதும், படத்தை ஆரம்பிச்சிடலாம்னு சொல்வாங்க. ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடை எண் 6-ல் நெடுஞ்சாலை ஆரி நாயகனாக நடிக்கிறார்.

அட்டகத்தி தினேஷுடன் உங்களுக்கு மோதல் என்று செய்திகள் வெளியானதே?

மோதல் என்று சொல்ல முடியாது. அட்டகத்தியில் நன்றாக நடித்த தினேஷ், அவருக்கு இரண்டாவது படமான ‘வாராயோ வெண்ணிலா’வில் வேறொரு பரிமாணத்தில் நடிக்க வேண்டியிருந்து. ஆனால் அவரால் அட்டகத்தி படத்தின் பாதிப்பிலிருந்து வெளியே வரமுடியவில்லை. அதனால் எனது படத்துக்குத் தேவையான நடிப்பைக் கொண்டுவரச் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் நடந்தது உண்மைதான். ஊசி போடுகிற எந்த டாக்டரையும் குழந்தைகளுக்குப் பிடிக்காது. படம் முடிந்து முதல் பிரதியைப் பார்த்ததும், நடந்த தவறுகளுக்கு அவர் வருத்தப் பட்டது என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தின் மூலம் அவர் இன்னும் எட்டாத உயரத்துக்குப் போவது நிச்சயம்.

அதேபோல் ஆரியும் முன்னணி நாயகனாவது உறுதி. அவர் படம் இயக்க ஒரு உதவி இயக்குநராக நான் முயற்சித்துக்கொண்டிருந்தபோது ‘கடை எண் 6’ கதையைக் கேட்டுவிட்டு, “நாம இந்தக் கதையை எடுக்கிறோமோ இல்லையோ, இன்று முதல் நீ என் நண்பன்” என்றார். இப்போது அவருக்கும் நல்ல அடையாளம் கிடைத்துவிட்டது. அவர் சொன்னபடியே இந்தக் கதையில் சிறப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பிலும் நண்பராகவே இருக்கிறார்.

உங்களுக்கும் தினேஷுக்கும் சண்டை இல்லைன்னு சொல்றீங்க. ஆனால் வாராயோ வெண்ணிலாவே படத்தைப் பற்றி மட்டும் தினேஷ் மீடியாவிடம் எதுவுமே சொல்ல மாட்டேன் என்கிறாரே?

அதற்குக் காரணம் நான்தான். படத்த பத்தின ஒரு சின்னக் கணிப்புகூட ரசிகர்களுக்கு ரிலீசுக்கு முன்னாடி வந்துடக் கூடாதுங்கிறதால ‘வாராயோ வெண்ணிலாவே’ பத்தி எதுவுமே வெளியே சொல்ல வேண்டாம்னு சொன்னேன். என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அதைக் கடைப்பிடிக்கிறார்.

இரண்டு படங்களுக்கும் என்ன வித்தியாசம்?

‘வாராயோ வெண்ணிலாவே’ ஒரு காதல் கதை. பேத்தல்கள் எதுவுமே படத்தில் இருக்காது. ரொம்ப ஸ்டைலிஷ் மேக்கிங்ல முழுப் படமும் இருக்கணும்னு பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கிற படம். ‘கடைஎண்- 6’ கலாய்க்கிற படம். சென்னை இளைஞன் எவ்ளோ கிண்டலா, நக்கலா, ஜாலியா வாழ்க்கைய ஓட்டறான்னு சித்திரிக்கிற காமடி திரில்லர்னு சொல்லலாம். முதல் படத்தோட சாயல் வராம ரெண்டாவது படம் இருக்கணுங்கிறதுல கவனமா இயக்கிக் கொண்டிருக்கிறேன். ‘கடை எண் 6’ படத்தின் ஒளிப்பதிவாளர் சலீம் திலால் இந்தப் படத்தோட முக்கிய பலம். அவர் மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஜீவாவின் உதவியாளர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஜீவா கிடைப்பார்.

‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தின் தாமதத்துக்கு என்ன காரணம்?

தாமதம் என்பதில்லை. இது நுணுக்கமாகப் பண்ண வேண்டிய காதல் கதை. அதனால் பின் தயாரிப்பு வேலைகளில் நிறைய உழைக்க வேண்டியிருந்தது. அதனால் தாமதம்போலத் தெரிகிறது. முதல் பிரதி ரெடி. தயாரிப்பாளர் ஹேப்பி. தரமான சினிமாக்களை விரும்பும் தமிழ் ரசிகர்களை வந்தடைய தயாராகிவருகிறது.

உங்க இரண்டு படங்கள்லயும் சானியா தாராதான் நாயகியா நடிக்கிறாங்க. உங்களை இணைத்துக் கிசுகிசு கிளம்பும் என்ற பயமில்லையா?

எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சானியா எனக்கு நல்ல ஃபிரெண்ட். அவங்க ரொம்ப அழகான ஹீரோயின் மட்டுமில்ல, திறமையான பொண்ணு. முதல் படத்துல நட்சத்திரங்கள், அப்புறம் டெக்னீசியன் அமைஞ்சிட்டா இரண்டாவது படத்துக்கும் அவங்களையே ஒப்பந்தம் செஞ்சு வேலை வாங்குறது ரொம்ப ஈசியா இருக்கும். ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்துல நல்ல துறுதுறு கேரக்டர் பண்ணிருந்தாங்க. கேரக்டரை உள்வாங்கி நடிக்கற விதம்தான் அவங்களயே ரெண்டாவது படத்துக்கும் கதாநாயகியா தேர்வு செய்யக் காரணம்.

வெங்கட் பிரபு தான் உங்க குருவா..?

இல்லை… பவித்ரன் சார்தான் என் குரு. வெங்கட்பிரபு என் நல்ல நண்பர். அவர் நடிச்சு நான் இயக்குறதுக்காக மூணுவருஷம் அலைஞ்சோம். செட்டாகல… அவருக்குப் படம் இயக்க வாய்ப்பு கிடைச்சதும் என்கூட சப்போர்ட்பண்ணி என் டீம்ல இருக்கீங்களான்னு கேட்டார். நண்பராச்சேன்னு ஓகே சொன்னன். முதல்ல ஒரு ஹாரர் கதையை ஆரம்பிச்சோம். அவர் சொன்ன கதைக் கருவுக்குத் திரைக்கதை எழுதினேன். வசனம் எழுதும் வாய்ப்பையும் எனக்கே கொடுத்தார். ஆனா பட்ஜெட்டால அந்தப் படம் தொடங்க முடியாமப் போச்சு. சின்ன பட்ஜெட்ல காமெடிப் படம் பண்ணலாம்னு ஒரு கதை சொன்னார், செமையா இருந்துச்சு. திரைக்கதை, வசனம் எழுதச் சொன்னார். எனக்கு நடந்த அனுபவத்தையும் அதுல நுழைச்சேன். அவருக்கு நடந்த அனுபவங்களையும் கலந்து பண்ணோம். இப்படித்தான் சென்னை 28 ரெடியாச்சு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x