Published : 14 Nov 2016 10:35 AM
Last Updated : 14 Nov 2016 10:35 AM

உன்னால் முடியும்: தொழில் வளர்ச்சியே என் வளர்ச்சி...

தனது திறமை என்ன என்பதை அறிந்து கொண்டு அதை வித்தியாசமான முறை களில் கொடுக்கத் தெரிந்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதென்னவோ உண்மை. அப்படியான வகையில் வெற்றி பெற்றவர்தான் சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்த சிவக்குமார். பள்ளியில் கற்றுக் கொண்ட ஓவியக் கலையை, காய் களிலும் பழங்களிலும் மிக நேர்த்தியாக வடிவமைக்கிறார். சமீப ஆண்டுகளாக இந்தியாவில் தனி தொழிலாக வளர்ந்து வரும், இந்த அலங்கார கலையின் மூலம் தனது அடையாளத்தை உருவாக்கி வரும் இவர் தனது அனுபவத்தை இந்த வாரம் `வணிக வீதி’-க்காக பகிர்ந்து கொண்டார்.

மிக வறுமையான குடும்ப சூழ்நிலை யால் ஐந்தாம் வகுப்புக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படிப்பை நிறுத்தி விட்டார் கள். ஆனால் படிக்க வேண்டும் என்கிற எனது தீவிர முயற்சியால் இரண்டு ஆண்டு களுக்கு பிறகு பள்ளியில் சேர்ந்துவிட் டேன். பனிரெண்டாம் வகுப்பு வரை பகுதி நேர வேலைகள் பார்த்துக் கொண்டே படித்தேன். எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்ததைக் கண்டுபிடித்து பள்ளிக்கூடத்தில் ஊக்கப்படுத்தியதுதான் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

அப்போது பகுதி நேர வேலையாக கேட்டரிங் வேலைகளுக்குச் செல்வேன். அங்கு சில இடங்களில் காய்களில் டிசைன்களை செதுக்கி வைத்திருப்பார்கள். ஒன்றிரண்டு இடங்களில் அவற்றை பார்த்த ஆரம்பத்திலேயே அந்த கலையில் எனக்கு ஆர்வம் வந்தது. அதன் பிறகு இதை செய்பவர்களுடன் அவ்வப்போது வேலைக்கு போகத்தொடங்கினேன்.

பனிரெண்டாவது முடித்துவிட்டு பூந்தமல்லியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். கல்விக்கட்டணத்துக்கு அரசு உதவி கிடைத்தாலும் இதர செலவுகளை சமாளிக்க முடியவில்லை. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்றாவது ஆண்டுக்கு பிறகு படிப்பை தொடரவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் இந்த டிசைன் வேலைகளை தனியாக எடுத்துச் செய்யத் தொடங்கியிருந்தேன்.

காய்கள், பழங்களில் சாதாரணமாக டிசைன் செய்து கலரிங் செய்து வைப்பதுதான் சில இடங்களில் பழக்கமாக இருந்தது. ஆனால் என்ன டிசைனை நினைக்கிறோமோ அதை அப்படியே வரைந்து வைக்க வேண்டும் அதுதான் இந்த கலையின் வெற்றி. இவற்றை எனது அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டதுடன், இணையதளங்களிலும் தேடி பயிற்சி செய்து பார்ப்பதை வழக்க மாக்கிக் கொண்டேன். வெளிநாடுகளில் இது தனி துறையாகவே வளர்ந்துள்ளது.

ஆனால் நம் நாட்டில் திருமண வீடுகள், பார்ட்டிகள் மற்றும் விழா கொண்டாட்டங்களில் இப்போதுதான் இந்த வகையான அலங்காரம் வரத் தொடங்கியுள்ளது. பள்ளிகளில் காய்கறி, பழங்களுக்கு என்று தனியாக ஒரு ‘தினம்’ கொண்டாடுகிறார்கள், குழந்தைகளை இந்த அலங்காரங்கள் மூலம் எளிதில் ஈர்க்க முடியும். ஆனால் இந்த திறமைக்கான விலையை கொடுக்கிறார்களா என்றால் கிடையாது.

ஒரு தர்பூசணியில் சாதாரண டிசைன் செய்ய அரைமணி நேரம் ஆகும். இதுவே அதிக வேலைப்பாடுகள் கொண்ட தாய்லாந்து டிசைன்கள் செய்ய நான்கு மணி நேரம் வரை ஆகும். ஆனால் வாடிக்கையாளர்களின் மனநிலையோ ‘என்னப்பா ஒரு தர்பூசணி பழத்துக்கு இவ்ளோ விலை சொல்ற’ என்பார்கள். பள்ளிக்கூட புராஜெக்டுக்கு ஒரு கிளி செய்து கொடுக்கிறேன் என்றால் ‘ஒரு முள்ளங்கி, காரட்டுக்கு இவ்ளோ விலையா’ என்கிறார்கள். திறமையை, உழைப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பேசும்போது வருத்தமாக இருக்கும்.

ஒரு பிரபல பள்ளிக்கூடத்துக்கு ஆர்டர் வாங்க செல்லும்போது எனது திறமையைக் காட்டும் விதமாக அப்துல்கலாம் உருவம் செதுக்கிய ஒரு பழத்தையும் தூக்கிச் சென்றிருந்தேன். திறமையை நன்றாக உணர்ந்தவர்கள், இதை கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என ஆர்வமாக கேட்டனர், ஆனால் நான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த சான்றிதழ் இல்லை என்பதற்காக வாய்ப்பையே வழங்கவில்லை. ஒரு பட்டத்துக்கு கிடைக்கும் மரியாதையை திறமைக்கு கொடுக்க படித்தவர்களே தயங்குகிறார்கள் என்கிற வருத்தம் இருக்கவே செய்கிறது.

ஆனால் இப்படியான அலங்காரத் துறை ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் ஒரு பாடமாக இருந்தாலும் முழுமையாக சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. பெரிய ஹோட்டல்களில் வேலை வாய்ப்புகள் இருந்தாலும், வேலைக்கு செல்வதைவிட இந்த தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற முயற்சிகளில் உள்ளேன். இப்போது ஆர்டர்களுக்கு ஏற்ப ஐந்து நபர்களுக்கு பகுதி நேர வேலை வழங்கி வருகிறேன். திருமண நிகழ்வு, பார்ட்டிகள் என்கிற இடத்திலேயே முடங்காமல் பரவலாக சென்றால்தான் இதற்கான முழுமையான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். இந்த தொழிலின் வளர்ச்சியே என் வளர்ச்சி என்பதில் மிக தெளிவாக உள்ளேன் என்றார்.

vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x