

14 ஆகஸ்ட் 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்க, டெல்லி நகரம் மட்டும் ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது. ‘காலனி ஆஃப் பிரிட்டன்’ என்பது ‘இறையாண்மை மிக்க இந்திய தேச’மானது அன்றுதான். ‘Long years ago...’ என்று நேரு பேசத் தொடங்கியபோது, புதிய சுதந்திர தேசம் உயிர்பெற்று எழுந்தது. 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த உரைகளுள் ஒன்றாகக் கருதப்படும் ‘லட்சியத்தை நோக்கிய பயண’த்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது.
பல ஆண்டுகளுக்கு முன்பு லட்சியத்தை நோக்கிய பயணத்தை முடிவு செய்துகொண்டோம். முழுமையாக இல்லாவிட்டாலும் கணிசமாக அந்த உறுதிமொழியைச் சாத்தியப்படுத்தும் காலம் இப்போது வாய்த்திருக்கிறது. நள்ளிரவு மணி நடுங்கிக்கொண்டே ஒலிக்கும் இந்த நடுநிசிப் பொழுதில், ஒட்டுமொத்த உலகமும் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில், தன் விடுதலைக்காகவும் வாழ்வுக்காகவும் இந்தியா விழித்துக்கொண்டிருக்கிறது!
பழைய நூற்றாண்டுப் பெட்டியைப் பரணில் ஏற்றி, புது நூற்றாண்டுக் காலத்தைக் கனிவாக வரவேற்கும் வாய்ப்பு வரலாற்றில் மிக அரிதாகவே இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சில நூற்றாண்டுகளாக நசுக்கப்பட்ட இந்தத் தேசத்தின் ஆன்மா, சுவாசிக்கவும் பேசவும் வழி கிடைத்துவிட்டது.
இந்தியாவின் எதிர்காலம் மலர்களால் அல்ல, முள்களால் நிறைந்திருக்கிறது. கசியும் ஒவ்வொரு கண்ணிலிருந்தும் கடைசிச் சொட்டுக் கண்ணீரைத் துடைத்து எறிவதே எங்கள் தலைமுறையின் உயர்ந்த லட்சியமாக இருக்கும். ஒருவேளை அது எங்களால் சாத்தியப்படாமல் போகலாம். ஆனால், சாத்தியப்படும் நாள்வரை இந்தக் கடமை ஓயாது.
எனது அருமை இந்தியர்களே! எங்களோடு இந்தப் பயணத்தில் ஒன்று சேருங்கள். தன் குழந்தைகளைப் பாதுகாக்க இந்தியத் தாய் துணிந்துவிட்டாள். தாய்க்கு ஒரு பழி நேர்ந்தால் அது குழந்தைக்கும் தானே?
லட்சியத்தைத் தீர்மானித்த நாள் வந்துவிட்டது! நீண்ட நித்திரைக்குப் பிறகு, இந்தியா விழித்துக்கொண்டது. இடைவிடாத போராட்டங்களால் இன்றியமையாத இழப்புகளைப் பணயம் வைத்து, சுதந்திரத்தைச் சுவாசிக்க இந்தியத் தாய் உதயமாகிவிட்டாள். இனி எழுதப்படும் இந்தத் தேச வரலாறு இந்தியர்களையே பேசப் போகிறது. ஆஹா, எவ்வளவு பெரிய கனவு இது!
கிழக்கில் உதிக்கும் இந்த நம்பிக்கை நட்சத்திரம், பூமிப்பந்து எங்கும் விடுதலை வெளிச்சத்தைப் பறைசாற்றப் போகிறது. நெடுநாள்களாக ஏங்கித் தவித்த இந்த ஒளி, அடுத்த கணம் நம் கைக்குள் அடங்கிவிடப்போகிறது.
வருத்தம் வழிகிற முகத்தோடு இந்தக் கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் பல இன்னல்கள் நம்மை வாட்டியெடுக்கின்றன. அதனால் என்ன, வராது வந்த மாமணியை வாசலோடு வழியனுப்பி வைப்பதா?
இந்தத் தினத்தில் தேசப்பிதா காந்தி பற்றி பேசாமல் இருக்க முடியாது. இந்தியாவின் உலர்ந்துபோன ஆன்மாவைத் தன் மேலாடையாகப் போர்த்திக்கொண்டு, இருண்டு போன தேசத்துக்கு ஒளியேற்றி வைத்த அந்த மகானை நம்மால் எப்படி மறக்க முடியும்? இந்தியாவின் மூத்த மகனை இனிவரும் தலைமுறைகள் தம் இதயத்தில் வைத்துப் போற்றுவது உறுதி.
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு அந்நியராக்கப்பட்ட நம் சகோதர சகோதரிகளை நினைத்துப் பாருங்கள். அவர்களின் ஆண்டுக்கணக்கான போராட்ட வெற்றியை அற்ப அரசியல் காரணங்களால், கொண்டாட மறுக்கலாமா? கிளைவிட்டுப் பிரிந்தாலும் இலைகள் மரத்துக்கே சொந்தம்! எப்போதும் போல நல்லவை, கெட்டவையைப் பகிர்ந்துகொண்ட படி நாம் இருப்போம்.
எந்த மதத்தினராக இருந்தால் என்ன, எல்லாரும் ஒரு குலம்; எல்லாரும் ஒரு நிறை. பாகுபாடுக்கு ஆளான தேசம் எல்லாம் பாழாய்ப்போனதுதான் வரலாறு.
உலக நாடுகளுக்கு நம் அளவற்ற மகிழ்ச்சியையும் நன்றியையும் அனுப்பி வைப்போம். தேச சேவைக்கு நம்மை அர்ப்பணிப்போம். ஜெய் ஹிந்த்!