

சிதம்பரம் குமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஏற்கெனவே இரண்டு முறை கருவுற்ற அவருக்குக் கரு தங்காமல் போனது. மூன்றவாது முறையாகக் கருவுற்றிருந்தபோது கணவர் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றுவிட்டார். இம்முறையும் கரு கலைந்துவிட்டது. தன் கணவருக்கும் குடும்பத்தினருக்கும் தெரிந்தால் தன்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்கிற பயத்தால் வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணிப் பெண்ணைப் போலப் பாவித்து வந்துள்ளார். ஒன்பது மாதங்களாக இப்படி இருந்தவருக்குப் பிரசவம் பார்க்க அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்களிடம் உண்மையைச் சொல்லியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆலோசனை சொல்லி அனுப்பிவைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து ‘தாயானால்தான் பெண்’ என்று காலங்காலமாக பெண்ணின்மீது சுமத்தப்படும் சமூக அழுத்தம்தான் இது போன்ற முடிவுகளை எடுக்க வழிவகுக்கிறது; இந்த மாற்றம் முதலில் குடும்பங்களிலிருந்து தொடங்க வேண்டும் என்கிற கருத்து பரவலாகப் பகிரப்பட்டது.
அமெரிக்கத் தேர்தலில் வரலாறு படைத்த இந்தியப்பெண்!
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே உள்ள மேரிலேண்டு மாகாணத்தின் துணை நிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 57 வயதான அருணா மில்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் இந்தியர் ஒருவர் இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் அருணாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆந்திர மாநிலத்தில் பிறந்த அருணா, 1970களில் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். “பிரிவினையைவிட ஒற்றுமையைத் தேர்ந்தெடுத்த மேரிலேண்டு மக்களுக்காகப் பணியாற்றுவோம்” என வெற்றிக்குப்பின் அவர் தெரிவித்திருக்கிறார்.