Published : 11 Nov 2022 07:08 PM
Last Updated : 11 Nov 2022 07:08 PM

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 22

ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

இந்தியா - புவியியல் - 1
எளிய குறிப்புகள்

இரண்டாவது பெரிய ஆசிய நாடு

ஆசியக்கண்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவின் குறுக்கே கடகரேகை (20°30' வடக்கு அட்சம்) சென்று நாட்டை இரு பகுதிகளாக பிரிக்கிறது. இங்கிலாந்தைப்போல் பன்னிரண்டு மடங்கும் பாகிஸ்தானைப் போன்று நான்கு
மடங்கும் பெரியது. இந்துகுஷ் மற்றும் காரகோரம் மலைகளைக் கொண்ட இமயமலைத் தொடர்கள்
இந்தியாவின் வடக்கு இயற்கை அரணாக உள்ளது. கிழக்கில் உள்ள மலைத்தொடர்கள் இந்தியாவை மியான்மரிலிருந்து பிரிக்கிறது. தெற்கே உள்ள பாக் நீரிணை இந்தியாவை இலங்கையிலிருந்து பிரிக்கிறது.


மலைகள், கணவாய்கள், சமவெளிகள், பீடபூமிகள்

இந்தியாவின் நிலப்பரப்பில் மலைகள் 29.3%, பீடபூமிகள் 27.7% மற்றும் சமவெளிகள் 43% உள்ளன. உலகின் பழமையான மலைத்தொடர் இந்தியாவில் உள்ள ஆரவல்லியாகும். இமயமலை மடிப்புமலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதன் உயரம் மேற்கிலிருந்து கிழக்காக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகின் பல உயர்ந்த சிகரங்கள் வஹிடமாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ளன. ஹிமாத்ரி மலைத்தொடரில் பல ஆறுகள் உருவாகின்றன. முக்கிய சிகரங்கள் எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா, கே2, நங்கபர்வதம், தவளகிரி ஆகியன. உலகின் மிக உயரமான கணவாய் இந்திய திபெத் எல்லையில் அமைந்துள்ள மானா கணவாய் ஆகும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை இணைக்கும் கணவாய் கைபர். இந்தியா, சீனா, மியன்மார் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகளும் சந்திக்கும் புள்ளியில் மக்மோகன் எல்லைக் கோட்டில் அமைந்துள்ளது திபு கணவாய்.

மேலும்சில முக்கிய கணவாய்கள்: போலன் (கைபர் அருகில்), சொஜிலா(லடாக்), ஷிப்கிலா(இந்தியா - சீனா எல்லை), நாதுலா (சிக்கிம்) , ஜிலாப்புலா(இந்தியா-லாசா இணைப்பு சாலை) ஆகியவை.

பங்கார் எனும் சமவெளி பழைய வண்டல் மண் படிவு ஆகும். தராய் என்பது சேறும் சகதியும் கொண்ட நிலப்பகுதி ஆகும். வட இந்தியச் சமவெளிகளில் சில - கங்கைச் சமவெளி, பிரம்மபுத்திரா சமவெளி, ராஜஸ்தான் சமவெளி. சட்லெஜ், ராவி, பியாஸ் ஆகிய ஆறுகளால் ஏற்படும் படிவுகளால் ஆன சமவெளி பஞ்சாப்-ஹரியாணா சமவெளியாகும். மிகப்பெரிய கங்கைச் சமவெளி மேற்கிலுள்ள யமுனை ஆற்றிலிருந்து கிழக்கிலுள்ள வங்கதேசம் வரை பரவியுள்ளது. இந்தியாவில் உத்திரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் இச்சமவெளி பரவியுள்ளது. கங்கையின் துணையாறுகள் யமுனா, ராம்கங்கா, சோன், கோமதி, கோசி, காக்ரா ஆகியன. கழிமுகங்கள், தீவு, சதுப்புநிலக் காடுகள், மணல்திட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது சுந்தரவனம் ஆகும்.

ஆரவல்லி, விந்திய, சாத்பூரா, ராஜ்மால், மேற்கு-கிழக்கு தொடர்ச்சி மலைகள் தீபகற்ப பீடபூமி சுற்றிலும் அமைந்துள்ள மலைத்தொடர்களாகும். மாளவா பீடபூமி லாவா எனும் எரிமலைக் குழம்பால் உருவாகி கறுப்பு மண்ணால் ஆன பகுதியாகும். இப்பீடபூமி ஆரவல்லி , விந்திய மலை, பண்டல் கான்ட் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

சோட்டா நாகபுரி பீடபூமி மத்திய உயர்நிலங்களின் வழியாகப் பாயும் ஆறுகள் தாமோதர், கோயல், சுபர்ணரேகா.

சுமார் ஐந்து லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள தக்காண பீடபூமி இந்தியாவின் தென்பகுதியாகும். இப்பீடபூமியின் தென்பகுதியான கர்நாடகா பீடபூமி நீலகிரி மலைத்தொடருடன் இணைகிறது.
இப்பீடபூமியின் வடமேற்குத் திசையில் விந்திய மலைத் தொடரும், வடக்கில் மகாதேவ் மலைத்தொடரும் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளன.

தெலுங்கானா பீடபூமியில் ஓடும் ஆறுகள் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள அபு மலையில் குருசிகார் சிகரம் உள்ளது. விந்திய மலைத்தொடர் கங்கையின் தொகுதிளுக்கும் தென்னிந்திய ஆறுகளுக்கும் இடையே நீர்ப்பிரி மேடாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் முக்கிய கணவாய்கள் தார், போர், பாலக்காட்டு கணவாய்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி மேற்குக் கடற்கரை சமவெளி எனப்படுகிறது.

கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி கிழக்குக் கடற்கரை சமவெளி எனப்படும்.

தமிழ்நாட்டுச் சமவெளி தென்னிந்தியாவின் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது.

தீவுகள், ஆறுகள், பருவங்கள், காலநிலை, மண் வளம்

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளின் தென்கோடி முனை இந்திரா முனையாகும். அந்தமான் தீவுகளில் பெரும்பாலானவை எரிமலைகளால் உருவானவை. ஒரு சில தீவுகள் முருகைப் பாறைகளால் ஆனவை.

லேக்கடிவ்ஸ், மினிக்காய்,அமினிதிவி தீவுகள் லட்சத்தீவில் உள்ள தீவுக் கூட்டங்களாகும். லூனி ஆறு ஆஜ்மிருக்கு தென்மேற்கே ஆரவல்லி மலைத்தொடரில் உருவாகி கோவிந்தகார்க் எனுமிடத்தைக் கடந்து சரஸ்வதி ஆற்றுடன் கலக்கிறது. வங்காள விரிகுடாவில் கலக்கும் சில ஆறுகள் - கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகியவை.

நர்மதை, தப்தி ஆகிய இரு ஆறுகளும் அரபிக்கடலில் கலக்கின்றன.

இந்தியாவில் பருவக்காற்றின் தொடக்க காலத்தையும் அதன் முடிவுக் காலத்தையும் நிரணயிக்கும் ஜெட் காற்றோட்டம் வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டமாகும். மலைகளின் அமைப்பு ஒரு இடத்தின் காலநிலையை நிர்ணயப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்காற்றை இமயமலைத் தொடர் தடுக்கிறது. இதே போன்று ஆரவல்லி மலைத்தொடர் தென்மேற்கு பருவக்காற்றினை தடுக்கிறது.

இந்தியாவின் காலநிலையை நிர்ணயிக்கும் பருவக்காற்றுகள் நிலமும் கடலும் வெப்பம் அடைவதால் ஏற்படும் மாறுபாட்டால் உருவாகின்றன. பருவ காலங்களை மாற்றி மாற்றி அமைப்பதும் பருவகாற்றுகளே.
நம் நாட்டின் 80% மழைப் பொழிவிற்கு காரணமானது தென்மேற்கு பருவகாற்று.

உலகிலேயே மிக அதிகமாக மழை பெறும் மௌசின்ராம். சிரபுஞ்சிக்கே மேற்கே 16 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு சராசரி மழைப்பொழிவு 1187செ.மீ. ஆகும். ஒரு நாட்டின் மழைப்பரவலை நிர்ணயிப்பது மழையைத் தாங்கி வரும் காற்றின் திசையும் மலைகளின் அமைப்பும் ஆகும். இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள் - கிழக்கு இமயமலையின் தெற்கு சரிவு, அசாம், வங்காளம், கொங்கனம், மலபார் கடற்கரை. குறைவாக மழை பெறும் பகுதிகள் - காஷ்மீரின் வடபகுதி, மேற்கு ராஜஸ்தான், தெற்கு பஞ்சாப்.

மண்ணிலுள்ள சத்துப் பொருட்களும் நுண்சத்து பொருட்களும் மண்ணின் செழிப்பை நிர்ணயிக்கின்றன.

மண்ணின் உயிரிப் பொருட்கள் அதிகரிக்க அதிகரிக்க மண்ணின் செழிப்பும் அதிகமாகும். பொதுவாக மண்ணில் இருக்கவேண்டிய சத்துப் பொருட்கள் நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாசியம் போன்றவை.

மண்களில் வண்டல் மண், கரிசல் மண், செம்மண், சரளை மண், பாலைவன மண் என பல வகைகள் உண்டு.
ஆற்றுச் சமவெளியில் வண்டல் மண்ணும், மண் தீப்பாறைகள் சிதைவுறுவதால் கரிசல் மண்ணும், பழைய படிகப் பாறைகளும் உருமாறிய பாறைகளும் சிதைவடைவதால் செம்மண்ணும், அதிக வெப்பமும் அதிக மழையும் வறண்ட காலநிலை உள்ள பகுதிகளில் சரளைமண்ணும் உருவாகின்றன.

இந்தியாவில் பாயும் ஆறுகள், அவை உற்பத்தியாகுமிடங்கள், பாயும் மாநிலங்கள் போன்றவை, காடுகள், சரணாலயங்கள், பலநோக்குதிட்டங்கள் ஆகியவை பற்றியும் பட்டியலிட்டு குறிப்புகள் எடுத்து போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வது மதிப்பெண்கள் அதிகம் பெற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி
- https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/894763-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-21-5.html

அடுத்த பகுதி நவம்பர் 14 (திங்கள்கிழமை) அன்று வெளியிடப்படும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x