Published : 05 Nov 2016 12:32 pm

Updated : 05 Nov 2016 12:32 pm

 

Published : 05 Nov 2016 12:32 PM
Last Updated : 05 Nov 2016 12:32 PM

நலம் நலமறிய ஆவல்: கருத்தரிப்புக்கு நீர்க்கட்டிகள் பிரச்சினையில்லை

இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் செங்கல்பட்டைச் சேர்ந்த சித்த மருத்துவர் க. சங்கர்:


எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை. டியூப் டெஸ்ட் எடுத்திருக்கிறேன். நீர்க்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருந்து சாப்பிட்டு வருகிறேன். தைராய்டு பிரச்சினைக்கு மருந்து உட்கொண்டு வருகிறேன். தைராய்டு சரியான அளவில் உள்ளது. நான் எந்த மாதிரிச் சிகிச்சை எடுத்தால் குழந்தைப் பேறு கிடைக்கும்?

- மணிமேகலை, ஊர் குறிப்பிடவில்லை

திருமணமாகி ஐந்து வருடங்கள் என்பது சற்றுக் கூடுதலாகத் தோன்றினாலும் நீங்கள் கூறியுள்ள அறிகுறிகள் அனைத்தும் விரைவாகச் சீராகி எளிதாகக் கரு உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

உங்களுக்கு உள்ள தைராய்டு ஹார்மோன் குறைபாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் அளவை கூட்டவோ குறைக்கவோ, உங்களுக்கு அம்மருந்தைப் பரிந்துரைத்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். நீங்களாகவே மருந்தின் அளவை குறைக்க முயற்சிக்க வேண்டாம்.

அதேபோல மருந்தைத் திடீரென நிறுத்திவிடவும் கூடாது. கருத்தரிப்பு நிகழத் தைராய்டு ஹார்மோன் இயல்புநிலை முக்கியம்.

உங்களுக்குச் சினைக்குழாய் பரிசோதனை (HSG-Bilateral Patent Tubes) சரியாக உள்ளதால் இயற்கை முறையில் கரு உருவாக வாய்ப்பு மிக அதிகம். உங்கள் கணவரின் விந்தணு பரிசோதனை நார்மலாக இருந்தால் இயற்கையில் கருத்தரிப்பு நிகழும்.

நீர்க்கட்டிகள் இருந்தாலும் மாதவிடாய் சீராக இருக்கும்பட்சத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. இப்பொழுது உள்ள அவசர வாழ்க்கை முறையில் அநேகப் பெண்களுக்கு நீர்க்கட்டிகள் உள்ளன.

# நல்ல நடைப்பயிற்சி உடல் எடையைச் சீராக்கும்.

# உயரத்துக்கு ஏற்ற உடல் எடை சரியாக இருக்கச் சமச்சீர் உணவுமுறை அவசியம்.

# பூமிக்குக் கீழே விளையும் கிழங்குகளைத் தவிர்க்கவும் (கருணைக் கிழங்கு விதிவிலக்கு).

# கொடிக் காய்கள் மிக நல்லது.

# சிறுதானிய உணவை அதிகம் உட்கொள்ளவும்.

# பழங்களை முழுதாக உண்ணவும் (whole fruit).

# மாதவிடாயின் முதல் பதினைந்து நாட்களில் உளுந்தங்கஞ்சி,

# மற்ற நாட்களில் வெந்தயக் கஞ்சி நல்லது.

# உதிரப்போக்கு (menstrual flow) உள்ள நாட்களில் எள்ளு சேர்த்த உணவு நல்லது.

சிகிச்சை

# நீர்க்கட்டிகள் சீரடைவதற்குக் கழற்சி சேர்ந்த மருந்துகள், கருமுட்டை சீராக வளர விஷ்ணு கிரந்தி குடிநீர், கருப்பை வன்மைக்கும், சீரான இயக்கத்துக்கும் குமரி என்ற கற்றாழை மருந்து, சதாவேரி லேகியம்,

# வெண்பூசணி லேகியம் போன்ற சித்த மருந்துகள் உள்ளன. சித்தமருத்துவர் ஆலோசனை பெற்றுக் குறிப்பிட்ட காலம்வரை மட்டும் இந்த மருந்துகளை உட்கொள்ளலாம்.

# சித்த மருத்துவர் அறிவுரைப்படி உங்கள் உடலுக்கு ஏற்ற எண்ணெய் குளியலை மேற்கொள்வது உடல் சூட்டைத் தணிக்கும்.

# குறைந்தது ஆறு மாதம் உரிய மருத்துவரிடம் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெறவும். விரைவாகக் கரு உருவாக வேண்டும் என்பதற்காக அடிக்கடி மருத்துவர் அல்லது மருத்துவ முறையை மாற்றிக்கொண்டே இருப்பது நல்லதல்ல.

தங்களுக்குக் குழந்தை பிறப்பு தாமதமாகியுள்ளதே அன்றி, குழந்தைப்பேறு அமைய வாய்ப்பில்லாத நோய்நிலை இல்லை. எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். சமூக ஏளனங்களைப் புறந்தள்ளி மனச்சுமை நீங்கி, நல்ல எண்ணங்களை நெஞ்சில் நிறுத்தி உற்சாகமாக வாழப் பழகுங்கள்.‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைவாசகர் கேள்விமருத்துவ கேள்வி பதில்நீர்க்கட்டிகள்கர்பப்பை கட்டிகள்கருத்தரிப்பு சந்தேகம்கருத்தரிப்பு சிகிச்சை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author