

2025 வாக்கில் ஆண்டுக்கு 13 லட்சம் புதிய வேலை உருவாகும்
தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் கல்லூரி முடித்த உடனே, நல்ல ஊதியத்தில் நல்ல வேலையில் அமர்வது என்பது மிகப் பெரும் போராட்டமே. எனினும், ஒரேயடியாக மனதை தளரவிடும் அளவுக்கு சூழல் இல்லை என்பதை இந்தியாவின் டிஜிட்டல் நகர்வு காட்டுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை வாய்ப்புக்காக தாய்லாந்து சென்ற தமிழக இளைஞர்கள் சிலர், அங்குள்ள ஒரு மோசடிக் கும்பலால் மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்டு சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐடி வேலை என்று அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், அந்தக் கடத்தல் கும்பலால் துப்பாக்கி முனையில் மோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பெரும் போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு தமிழகத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
அவர்களில் ஒருவருடன் பேசும்போது, “எனக்கு இந்தியாவிலேயே நல்ல ஊதியம் கிடைத்திருந்தால், நான் வெளிநாடு செல்வதை யோசித்துக்கூடப் பார்த்திருக்க மாட்டேன். வேறு வழியில்லாமல்தான் நாங்கள் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டுக்கு பயணப்பட்டோம்" என்றார். தற்போது கல்லூரி முடித்து வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் பலரும் இந்திய வேலைவாய்ப்புச் சூழல் குறித்து இத்தகைய கருத்துகளையே பிரதிபலிக்கின்றனர். "வேலை கிடைக்கவில்லை. கிடைத்தாலும் சொற்ப ஊதியத்தில்தான் வேலை கிடைக்கிறது” என்கின்றனர். உண்மையில் இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலவரம் எப்படி இருக்கிறது? 50 ஆண்டுகளுக்கு முன்னால், கல்லூரி படிப்பு முடித்த ஒருவர் எளிதாக அரசு வேலையில் சேர்ந்துவிட முடியும். நாட்டின் முன்னணி தனியார் நிறுவனங்களில் நல்ல வேலை பெற்றுவிட முடியும். ஆனால், தற்போதைய சூழல் அப்படி இல்லை. ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் பேர் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைச் சந்தைக்குள் நுழைகின்றனர். இதனால் வேலைச் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது.
விளைவாக, சொற்ப ஊதியத்துக்கு நிறுவனங்கள் வேலைக்கு அழைக்கின்றன. ஆட்களை வடிகட்ட தற்போது நிறுவனங்கள் கல்லூரிப் படிப்பைத் தாண்டி வேலை சார்ந்து கூடுதல் திறன்களை எதிர்பார்க்கின்றன. அந்த வகையில், தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் கல்லூரி முடித்த உடனே, நல்ல ஊதியத்தில் நல்ல வேலையில் அமர்வது என்பது மிகப் பெரும் போராட்டமே. எனினும், ஒரேயடியாக மனதை தளரவிடும் அளவுக்கு சூழல் இல்லை என்பதை இந்தியாவின் டிஜிட்டல் நகர்வு காட்டுகிறது. வேலைவாய்ப்பு சார்ந்து இந்தியா மிகப் பெரிய மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. செயற்கை தொழில் நுட்பம், பிளாக்செயின், கிளவுட் கம்ப்யூட்டிங் என நவீன தொழில்நுட்பங்கள் நாட்டின் அடிப்படை தொழில் கட்டமைப்பை மாற்றி வருகின்றன. 5ஜி அறிமுகம் இந்த மாற்றத்தை முடுக்கிவிடுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில், அதிக எண்ணிக்கையில் மட்டுமல்ல, புதிய வகையான வேலைகள் இந்தியாவில் உருவாகி வருகின்றன. இந்தச் சூழலில் இந்திய இளைஞர்கள், வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் உள்நாட்டிலேயே நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்: கல்வி, மருத்துவம், சில்லரை வர்த்தகம், சுற்றுலா, உள்கட்டமைப்பு, உற்பத்தி, வேளாண்மை, அரசு சேவைகள் என இந்தியாவின் அனைத்துத் துறைகளும் மிக வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகின்றன. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு வேகமடையத் தொடங்கிய இந்தியாவின் டிஜிட்டல் பயணம் கரோனாவுக்குப் பிறகு பல்வேறு தளங்களிலும் கிளை பரப்பத் தொடங்கியது. தற்போது நம்மைச் சுற்றி இருக்கும் பொருள்கள் எல்லாம் டிஜிட்டல் தன்மையைப் பெறுவது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) என்று அழைக்கப்படுகிறது. இணையத்துக்கும், ஏனைய பொருள்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்துவதுதான் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ். நாம் ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் ஹோம் என்று கூறுபவற்றை சாத்தியப்படுத்துவது ஐஓடிதான். இந்நிலையில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 2025-ம் ஆண்டில் 1 லட்சம் கோடி டாலராக இருக்கும் என்றும் டிஜிட்டல் சார்ந்து
ஆண்டுக்கு 13 லட்சம் புதிய வேலைகள் உருவாகும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் டிஜிட்டல் மயமாக்கத்தை
முன்னெடுத்துச் செல்லும் நவீனதொழில் நுட்பங்கள்தான் இந்தியாவின் புதிய வேலை வாய்ப்புகளுக்கான அச்சாணி என்று கூறப்படுகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் முக்கியமான தொழில்நுட்பங்கள், அவற்றின் மூலம் உருவாகும் வேலைவாய்ப்புகள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மனிதர்கள் போலவே இயந்திரங்கள் செயல்படுவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது உலகம் தொழில்நுட்ப ரீதியாக அடைந்திருக்கும் உச்சப்புள்ளி இதுதான். நாம் புதிதாக தரவுகளை உள்ளீடு செய்வதற்குப் பதிலாக, இயந்திரமே தனக்குத் தேவையான தரவுகளை எடுத்துகொண்டு, செய்ய வேண்டிய வேலைகளை தானே செய்வதைத்தான் செயற்கை நுண்ணறிவு என்று சொல்கிறோம். தானியங்கி கார்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். எதிரே யார் வருகிறார்கள். எவ்வளவு தூரத்தில் அவர்கள் இருக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை கண நேரத்தில் அலசி அது முடிவெடுக்கும். நாம் அன்றாடம் புழங்கும் கூகுள், யூடியூப், அமேசான், பிளிப்கார்ட் உட்பட பல்வேறு தளங்களின் செயல்பாட்டில் பின் புலமாக செயற்கை தொழில்நுட்பம் உள்ளது. இந்தச்சூழலில் செயற்கை தொழில்நுட்பம், மெஷின் லேர்னிங் தொடர்பான வேலைத் திறன்கள் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
பிளாக்செயின்: பிளாக்செயின் தொழில்நுட்பத்தை இணையத்தின் இரண்டாம் கட்ட பரிணாமம் என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு இணைய கட்டமைப்பில் மிகப் பெரும் புரட்சியை பிளாக்செயின் ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பான தரவுகள் பரிமாற்றத்தையும், அதில் வெளிப் படைத் தன்மையையும் பிளாக்செயின் தொழில் நுட்பம் சாத்தியப்படுத்துகிறது. கிரிப்டோகரன்சி பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகிறது. வங்கிச் செயல்பாடுகளில் பிளாக்செயின் தொழில்நுட்பம் இன்றியமையாததாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஓரிரு ஆண்டுகளில் பிளாக்செயின் தொழில்நுட்பம் தொடர்பான வேலைவாய்ப்புகள் 6,000 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கிளவுட் கம்ப்யூட்டிங்: நிறுவனங்கள் அதன் வேலைசார் தரவுகளை சேமித்து வைப்பதற்கான சாத்தியத்தை கிளவுட் கம்ப்யூட்டிங் வழங்குகிறது. தரவுகள் மட்டுமில்லை. நிறுவனத்துக்குத் தேவையான மென்பொருள் அனைத்தையும் கணினியில் இன்ஸ்டால் செய்வதற்குப் பதிலாக, கிளவுட் மூலமே பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் தரவுகளை சேமிக்கும்போது, அந்தத் தரவுகளை உலகின் எந்த மூலையிலிருந்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும். கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தின் சந்தை மதிப்பு 2021 –ல் 37,000 கோடி டாலராக இருந்தது. தற்போது 48,500 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2030- ல் 1.6 லட்சம் கோடி டாலரை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பை உறுதி செய்யும் புதிய திறன்கள் இந்த வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் சார்ந்து, டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, டெவலப்மென்ட் ஆகிய பிரிவுகளில் வேலைவாய்ப்புகள்
தற்போது மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
டேட்டா சயின்ஸ்: டிஜிட்டல் உலகில் தரவுகள்தான் கச்சாப் பொருள். பயிரிடுதல் முதல் அமேசானில் பொருள்களை வாங்குவது வரை அனைத்துச் செயல்பாடுகளும் தரவுகளை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. இது பிக் டேட்டா என்று அழைக்கப்படுகிறது. நம்முன் எக்கச்சக்கமான தரவுகள் குவிகின்றன. ஆனால், அந்தத் தரவுகளை வகை பிரித்து அர்த்தப்படுத்துவதன் வழியாகவே அவற்றை பயனுள்ளதாக மாற்ற முடியும். தரவுகளை அலசி ஆராய்ந்து அவற்றை பயன்பாட்டுக்கு உரியதாக மாற்றுவதுதான் டேட்டா அனாலிடிக்ஸ். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பிளாக்செயின், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், மெஷின் லேர்னிங் ஆகியவற்றில் டேட்டா அனாலிடிக்ஸ் என்பது மிக அடிப்படையானது. பெரிய தொழில்நுட்பங்கள் சார்ந்து மட்டுமல்ல, தற்போது ஒரு நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளுக்கே டேட்டா அனாலிடிக்ஸ் இன்றிமையாததாக உள்ளது. இந்நிலையில் டேட்டா சயின்ஸ் தொடர்பான படிப்புகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.
சைபர் செக்யூரிட்டி: அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாகிறபோது அவற்றின் பாதுகாப்பு என்பது மிக முக்கியம். எந்த அளவுக்கு டிஜிட்டல்மயமாகிறமோ அந்த அளவுக்கு டிஜிட்டல் சார்ந்த மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தரவுகளைப் பாதுகாப்பதற்கான வலுவான கட்டமைப்பு அவசியமாகிறது. அதைச் சாத்தியப்படுத்துவதுதான் சைபர் செக்யூரிட்டி. பெரு நிறுவனங்கள் சைபர் செக்யூரிட்டி சார்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிற நிலையில் அதற்கான வேலைவாய்ப்புகளும் பெருகி வருகின்றன.
டெவலப்மெண்ட்: டிஜிட்டல் உலகுக்கு மிக அடிப்படையானது இணையதங்களும் செயலிகளும்தான். நம்முடைய டிஜிட்டல் செயல்பாடுகள் அனைத்தும் இணையதளங்கள் மற்றும் செயலிகள் வழியாகவே நடைபெறுகின்றன. அந்த வகையில், வெப் டெவலப்மெண்ட் மற்றும் மொபைல் ஆப் டெவலப்மெண்ட் பணிகள் டிஜிட்டல் பயணத்தில் மிக மிக அடிப்படையானவை.
எங்கே படிப்பது? - இந்த வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் தொடர்புடைய திறன்களை கற்றுக்கொள்வதற்கு கல்லூரி சென்று 4 ஆண்டு செலவிட வேண்டிய அவசியமில்லை. 6 மாதங்களிலே கற்றுக்கொள்ள முடியும். இவற்றைக் கற்றுத் தருவதற்கென்று நிறைய இணையதளங்கள் உள்ளன. சில தளங்களில் இவற்றை இலவசமாகவே கற்றுக்கொள்ளலாம். இந்தத் தொழில்நுட்பங்கள் இந்தியாவின் முக்கியமான வேலைவாய்ப்புகளாக உருவாக உள்ள நிலையில், இதற்கான திறன்களை மக்களிடம் வளர்ப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மத்திய மின்னணு துறை மற்றும் நாஸ்காம் இணைந்து ‘பியூச்சர் ஸ்கில் பிரைம்’ (Future Skill Prime) தளத்தை உருவாக்கி உள்ளன. இந்தத் தளத்தில் இந்தியாவின் டிஜிட்டல் பயணத்துக்குத் தேவையான தொழிநுட்பத் திறன்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு பெறுவது எப்படி? - பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அன்பரசி, தொழில்நுட்பத் துறையின் வேலைவாய்ப்புச் சூழல் குறித்து பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது: தொழில்நுட்பத் துறைக்குள் நீங்கள் வரவேண்டுமென்றால் நீங்கள் கல்லூரியில் கணினி அறிவியல் அல்லது ஐடி துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் ஆங்கிலம், வேதியியல், தமிழ் என எந்தத் துறையிலும் பட்டம் பெற்றவராக இருக்கலாம். நிறுவனங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது நவீன தொழில்நுட்ப திறன்களைத்தான். அதாவது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது என்றால், அந்தத் தொழில்நுட்பம் தொடர்பான திறன் உங்களிடமிருந்தால் அந்த நிறுவனம் உங்களை வேலைக்கு எடுத்துவிடும். வேறு துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவர்கள்கூட இப்போது இந்தத் திறன்களை கற்று, டிஜிட்டல் துறைக்குள் நுழைகின்றனர்.
கல்லூரி முடித்து வேலைச் சந்தைக்குள் நுழைபவர்களுக்கு ‘பூட் கேம்ப்’ சிறப்பான வாய்ப்பாக உள்ளது. ‘பூட் கேம்ப்’ என்பது வேலை வாய்ப்பு முகமை நிறுவனங்களால் நடத்தப்படுவதாகும். அந்நிறுவனங்கள் சந்தைக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுத்தந்து வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்து தரும். அதேபோல், ஒரு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்வதன் வழியாகவும் புதியவர்கள் எளிதாக வேலைக்குச் சென்று விட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கல்வி, மருத்துவம், அரசு சேவை, போக்குவரத்து, வேளாண் என எந்தத் துறையை எடுத்தாலும், இனி அவை தொழில்நுட்பங்களின் இணைவோடுதான் பயணப்பட இருக்கின்றன. அந்த வகையில் வளர்ந்துவரும்டிஜிட்டல் தொழில்நுட்ப திறன்களை கற்றுக்கொண்டால் தற்போதைய போட்டிச் சூழலில் எளிதாக வேலை பெற்றுவிட முடியும். - riyas.ma@hindutamil.co.in