Last Updated : 29 Nov, 2016 11:24 AM

 

Published : 29 Nov 2016 11:24 AM
Last Updated : 29 Nov 2016 11:24 AM

டிரம்ப்பின் வெற்றி: இந்திய மாணவர்களுக்குத் தடையா?

அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை வெளிநாட்டினர் பறிக்கிறார்கள்; அதனால் அமெரிக்காவில் குடியேறக் கடுமையான சட்டங்கள் விதிக்கப்படும் எனப் பரப்புரை செய்தவர் டொனால்ட் டிரம்ப். அவர் அமெரிக்காவின் புதிய அதிபரானது வெளிநாட்டவருக்குக் குறுக்கீடாக இருக்கும். இதனால் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கல்வி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதே வேளையில், அமெரிக்காவின் சர்வதேசக் கல்வி நிறுவனத்தின் அதிபரும் தலைவருமான ஆலன் ஈ. குட்மேன், “சர்வதேச மாணவர்களை எப்போதும்போல அமெரிக்கா இனியும் வரவேற்கும். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கும் அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கும் எப்போதும்போல மாணவர்கள் வந்துபோய்ப் படிப்பார்கள். சர்வதேசக் கல்வி பரிமாற்றம் என்பது சமூகத்தின் முக்கிய அங்கம் என நான் நம்புகிறேன். எங்களுடைய மாணவர்களும் மற்ற நாடுகளுக்குச் சென்று படித்துக் கலாச்சாரத் தூதுவர்கள் ஆவார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க வகுப்பில் ஜொலிக்கும் இந்தியர்கள்

கடந்த ஆண்டுவரை, உலக நாடுகளிலேயே உச்சபட்சமான எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவர்களைத் தன் வசம் ஈர்த்த நாடு அமெரிக்காதான். கிட்டத்தட்ட 10 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தற்போது படித்துக்கொண்டிருக்கிறார்கள். அதில்1 லட்சத்து 65 ஆயிரத்து 918 பேர் இந்திய மாணவர்கள் என்கிறது சர்வதேசக் கல்வி பரிமாற்றம் குறித்த 2016-ன் ‘ஓப்பன் டோர்’ ஆய்வறிக்கை. சீனாவுக்கு அடுத்த படியாக அமெரிக்காவைத் தேடிச் சென்று படிப்பதில் இந்தியர்கள்தான் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார்கள்.

அப்படி என்னதான் இருக்கிறது அமெரிக்காவில்? அங்கு நானும் சேர்ந்து படிக்க முடியுமா? போன்ற கேள்விகள் உங்களில் பலருக்கு எழலாம். உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் படிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது! உலகத் தர சான்று பெற்ற 4500 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அமெரிக்காவில் இருக்கின்றன. அவற்றில் படிப்பவர்களுக்கு உலகெங்கிலும் அங்கீகாரமும் வேலை வாய்ப்பும் பிரகாசமாக உள்ளன. அதிலும் இந்திய மாணவர்கள் தங்கள் திறமையாலும் கடின உழைப்பாலும் அமெரிக்க வகுப்பறைகளில் ஜொலிக்கிறார்கள்.

எப்படித் தயாராவது?

பொதுவாகக் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு 10 மாதங்களுக்கு முன்கூட்டியே அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அனுமதி விண்ணப்பங்களை விநியோகித்து மாணவர் சேர்க்கையை முடித்துவிடுகின்றன. சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே வருடம் முழுவதும் மாணவர்களை அனுமதிக்கின்றன. எந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் எனத் தேடுவதற்கு முன்னதாக அவற்றில் படிக்கத் தகுதித் தேர்வுக்குத் தயாராக வேண்டும். இளநிலை பட்டப் படிப்பைப் படிக்க விரும்புபவர்கள் Scholastic Aptitude Test (SAT) தேர்வுக்கும் ஆங்கில மொழித் திறனைச் சோதிக்கும் TOEFL, IELTS, PTE ஆகிய தேர்வுகளில் ஏதோ ஒன்றை எதிர்கொள்ள வேண்டும். முதுநிலைப் பட்டப் படிப்பு மற்றும் முனைவர் ஆய்வு பட்டப் படிப்பைப் படிக்க ஆசைப்பட்டால் GRE, GMAT மற்றும் ஆங்கில மொழி திறன்

தேர்வை எழுத வேண்டும். சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் TOEFL உள்ளிட்ட தகுதித் தேர்வுகள் எழுதுவது கட்டாயம் அல்ல என அறிவித்துள்ளன. ஆனால் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற கல்வி நிறுவனங்களிலோ உதவித் தொகையுடனோ படிக்க விரும்பினால் தகுதித் தேர்வுகளைக் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும்.

இந்தியாவைத் தேடி

அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க இந்திய இளைஞர்கள் முந்தியடிக்கும் அதே வேளையில் இந்தியாவில் படிக்க அமெரிக்க இளைஞர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ‘இம்பார்ட்டன்ஸ் ஆஃப் இந்தியா’ என்கிற படிப்பை அமெரிக்காவின் ஓஹாயோ மாநிலப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

மேஸிவ் ஓபன் ஆன்லைன் கோர்ஸஸ் MOOCS (Massive Open Online Courses) எனப்படும் பதிவு செய்யப்பட்ட வகுப்பை ஆன்லைனில் நடத்தும் திட்டத்தில் இது இயங்கும் என ‘பாஸ்போர்ட் டூ இந்தியா’(Passport to India) திட்டத்தை அறிமுகப்படுத்தி அமெரிக்க அரசு தெரிவித்தது. டிசம்பர் 19 அன்று இதில் மாணவர் சேர்க்கைத் தொடங்கவிருக்கிறது. இது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரிச்சர்ட் வர்மா, “உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆகையால் இந்தியாவைத் தேடி வந்து படிக்கப்போகும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கும்” எனச் சமீபத்தில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x