Last Updated : 18 Nov, 2016 10:29 AM

 

Published : 18 Nov 2016 10:29 AM
Last Updated : 18 Nov 2016 10:29 AM

மொழி கடந்த ரசனை 9: என்னை ஏன் இங்கு கொண்டுவந்தாய்?

நிஜங்களின் நிழலாக விளங்கும் திரைப் பாடல்கள், நிகழ்வுகளின் பட்டியலாக விளங்காமல் சம்பவங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு அழுத்தம் தருவதால்தான் காலம் கடந்து நிற்கின்றன.

‘சாயா’ (நிழல்) என்ற இந்திப் படத்துக்காக ராஜேந்திர கிஷன் எழுதிய ஒரு பாடல் சோக நிகழ்வுகளின் மூலம் மனிதர்கள் அடையும் விரக்தி உணர்வை அழுத்தமாக எடுத்துக் காட்டுகிறது. கணவனை இழந்த நாயகி கைக்குழந்தையுடன் ஆதரவு தேடி உறவினர்களை நாடுகிறாள். அவர்களும் கைவிட, அவள் மனம் நொந்து அலையும் நிலையை விளக்கும் இப்பாடல் இந்தித் திரை உலகில் அரிதான ஒன்று.

தனது சொல்லழகால் அனைவரையும் கட்டிப்போட்ட கண்ணதாசன் ‘அவன் பித்தனா’ என்னும் படத்துக்காக எழுதிய, “இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான், இருந்தால் அவன் எங்கே வாழ்கிறான்” என்ற வரிகளைப் பிரதிபலிப்பதுபோல அமைந்துள்ளது இந்த இந்திப் பாடல்.

“யே கஹ் தோ ஹம் இன்சான் நஹீன் யா மான் ஜா தும் பகவான் நஹீன்” என்று தொடங்கும் ராஜேந்திர கிஷனின் இப்பாடல் தொடும் உணர்வுகளின் எல்லை மீண்டும் ஒரு போதும் இந்தியில் எட்டப்படவில்லை எனச் சொல்லலாம்.

பாடலின் பொருள்:

நான் மனிதன் இல்லை என்று சொல்லிவிடு

இல்லை நீ கடவுள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்.

நான் என் விருப்பத்தின் பேரில் இவ்வுலகுக்கு வரவில்லை

நீ என்னை ஏன் இங்கு கொண்டுவந்தாய்?

நான் இங்கு இருப்பது உண்மையென்றால்

பிறகு நீயே ஏன் மிகவும் தூரத்தில்

நிழலாகப் படிந்திருக்கிறாய்?

நான் உன் விருந்தினர் இல்லையா?

இந்தத் துன்பத்தின் வெயிலைக் கொடுத்தாய்

ஆனால் ஒரு தடவையாவது

மகிழ்ச்சியின் மழையைத் தந்தாயா?

நிம்மதியாகத் தூங்கும் ஒரு இரவாவது தந்தாயா?

எனக்கென்று ஒரு இலட்சியமும் இருக்கக் கூடாதா?

அஞ்சும் என் உள்ளம் சொல்கிறது

நான் இறந்து விடுவதே மேல் என்று

ஆனால் உயிர் போவதும்

உன் கையில் அல்லவா உள்ளது.

வாழ்வதும் சுலபம் இல்லை.

துன்பச் சுமையைக் குறைக்கவும் தெரியவில்லை.

விரக்தி உணர்வின் உச்சக்கட்டமாக அமைந்த இப்பாடலுக்கு இணையாக, இதே படத்தில் கழிவிரக்கத்தை வெளிப்படுத்தும் பாடலும் உள்ளது.

“ஆசு சமஜ்கே தும் முஜே, ஆங்கோன் ஸே கியோன் கிரா தியா, மோதி கிஸீக்கி பியார் கா, மிட்டி மே கியோன் மிலா தியா” எனத் தொடங்கும் இந்தப் பாடலை, இம்மாதிரி உணர்வை வெளிப்படுத்தும் மென் குரலை இயற்கையாகவே கொண்ட தலத் முகமது பாடும்போது, கேட்பவர் உருகாமல் இருக்க முடியாது.

விழிகளில் வழியும் கண்ணீரைப் போல

என்னை ஏன் கண்களிலிருந்து வழித்தெறிந்தாய்?

என்னுடைய காதல் என்னும் வைரத்தை

மண்ணில் ஏன் வீசிவிட்டாய்?

சுகமான சூழலில் பூக்காத மலரானேன்

வசந்தம் பொருட்படுத்தாத வைக்கோல் ஆனேன்.

என்னைப் பூக்கவைத்துப் போற்றியவளே

புதைத்துவிட்டாள் என்னை.

நான் இங்கு வரக் கூடாது எனத் தெரிந்தும்

வந்த என் பிழையை மன்னித்துவிடு.

அறியாமை என்ற தூக்கத்தில் இருந்த என்னை

எழுப்பியதற்கு நன்றி.

நிழல் (சாயா) என்ற பெயரை உடைய இந்தச் சிறந்த படத்தில் மகிழ்ச்சியான பின்னணியைக் கொண்ட மென்மையான பாடலும் உள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர், ‘செம்மீன்’ மலையாளப் படம் மூலம் நமக்கு பரிச்சயமான சலீல் சௌத்ரி. அவரின் வழக்கமான மேற்கத்திய - இந்திய இசைச் சங்கம பாணியில் அமைந்த இப்பாடலின் தொடக்கம் மேற்கத்திய இசை மேதை மொஸார்ட் உருவாக்கிய சிம்பொனி 40-லிருந்து எடுக்கப்பட்டது. வங்காள, இந்தி, மலையாளப் படங்களுக்கு மட்டுமின்றி, உயிர், கரும்பு, பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள், தூரத்து இடி முழக்கம் ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ள சலீல் சௌத்ரி பாடலாசிரியராகவும் நாடக ஆசிரியராகவும் விளங்கினார்.

இவரது இசைக் குழுவில் கிட்டார் வாசிப்பவராக இருந்த ஒருவரைப் பற்றி இவர், “இந்த கிட்டர் கலைஞர் ஒரு நாள் இந்தியாவின் தலை சிறந்த இசை அமைப்பாளராக வலம் வருவார்” என்று கூறியது அச்சுப் பிசகாமல் அப்படியே நிகழ்ந்தது. சலீல் தீர்க்கதரிசனமாக அடையாளாம் காட்டிய அந்த இசைச் சாதனையாளர் வேறு யாருமல்ல. நம் இசை ஞானி இளையராஜாவேதான்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x