

தன் தடுப்பாற்றல் நோய் (ஆட்டோ இம்யூன் நோய்) நவீன வாழ்க்கைமுறையால் நமக்கு ஏற்படும் நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் நம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, நம் உடலையே தாக்கும். பொதுவாக, நம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு தன்னுடைய செல் எது, வெளியிலிருந்து நுழையும் செல் எது என்பதைப் பிரித்து உணரும் திறன் உண்டு. தன் தடுப்பாற்றல் நோயில், அது இந்தத் திறனை இழந்துவிடுகிறது. இதன் காரணமாக மூட்டுகள், சருமம், உள்ளுறுப்புகள் உள்ளிட்ட நம்முடைய உடலையே அது அந்நியமாகக் கருதி, ஆட்டோஆன்டிபாடிகள் எனப்படும் புரதங்களை வெளியிட்டு ஆரோக்கியமான செல்களைத் தாக்கி சேதப்படுத்தும்.
தன் தடுப்பாற்றல் நோய்களில் பல வகைகள் உள்ளன. டைப்-1 நீரிழிவுகூட தன் தடுப்பாற்றல் நோய்களில் ஒன்றே. டைப்-1 நீரிழிவு கணையத்தைச் சேதப்படுத்தும்.
ஏன் ஏற்படுகிறது? - தன் தடுப்பாற்றல் நோய்களுக்கான காரணம் இதுவரை திட்டவட்டமாகக் கண்டறியப்படவில்லை. இருப்பினும், தன் தடுப்பாற்றல் நோய்களின் தாக்குதல் தற்போது அதிகரித்து வருவதால் தொற்றுகள், வேதிப்பொருட்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணிகள், அயல் உணவு இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். பரவலாக அறியப்படும் தன் தடுப்பாற்றல் நோய்கள் 80க்கும் மேற்பட்ட தன் தடுப்பாற்றல் நோய்கள் உள்ளன. அவற்றில் மிகவும் பொதுவானவை:
டைப் 1 நீரிழிவு நோய்: இன்சுலின் எனும் ஹார்மோனை கணையம் உற்பத்திசெய்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இன்சுலினே உதவுகிறது. டைப் 1 நீரிழிவு நோயில், நோயெதிர்ப்பு அமைப்பு கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்திசெய்யும் செல்களைத் தாக்கி அழிக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அபாயகரமான அளவில் அதிகரிக்கிறது. இதயம், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை இது சேதப்படுத்தும்.
முடக்கு வாதம்: முடக்கு வாதத்தில், நோயெதிர்ப்பு அமைப்பு மூட்டு களைத் தாக்குகிறது. இந்த தாக்குதல் மூட்டு களில் சிவத்தல், உஷ்ணம், புண், விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. பொதுவாக முதிய வர்களைப் பாதிக்கும் மூட்டுவலியைப் போலல்லாமல், முடக்கு வாதம் 30 வயதிலோ, அதற்கு முன்பாகவோ ஏற்படலாம்.
சொரியாசிஸ் / சொரியாடிக் ஆர்த்ரிடிஸ்: சொரியாசிஸ் சருமச் செல்களை மிக விரைவாகப் பெருக்கச் செய்கிறது. இவ்வாறு கூடுதலாக உருவாகும் செல்கள் சிவப்பு நிறத் திட்டுகளை உருவாக்குகின்றன. பொதுவாக வெள்ளை நிற சருமத்தில் வெள்ளி-வெள்ளை செதில்களுடனும், கருமையான சருமத்தில் சாம்பல் / ஊதா அல்லது அடர் பழுப்பு நிற செதில்களுடனும் சொரியாசிஸ் தோன்றும். சொரியாசிஸ் அழற்சியால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதத்தினருக்கு மூட்டுகளில் வீக்கம், விறைப்பு, வலி போன்றவை ஏற்படும். இதுவே சொரியாடிக் ஆர்த்ரிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
தண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்கிலரோசிஸ்) - தண்டுவட மரப்பு நோய், நமது மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்பு செல்களைச் சுற்றியுள்ள மெய்லின் ஷீத் எனப்படும் பாதுகாப்பு உறையைச் சேதப்படுத்துகிறது. இது நமது மூளைக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையேயான சமிக்ஞை பரிமாற்ற வேகத்தைக் குறைக்கிறது. இதன் காரணமாக, உடலின் மற்ற பகுதிகளுக்கு கடத்தப்படும் சமிக்ஞைகளின் வேகம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உணர்வின்மை, பலவீனம், சமநிலை இழப்பு, நடப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
மையோசைட்டிஸ்: மையோசைட்டிஸ் என்பது ஒரு வகையான தசை அழற்சி நோய். இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தசை செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு அதைச் சேதப்படுத்தும். இதைக் கவனிக்காவிட்டால் இயல்பு வாழ்க்கை முடங்கிவிடும். தசை செல்கள் நிரந்தரமாக அழியக்கூடிய சாத்தியமும் இதில் உண்டு. உலகம் முழுவதும் இந்நோய் பரவலாக உள்ளது. நடிகை சமந்தா வுக்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்பும் இதுவே.
தோல் முடிச்சு / தோல் செந்தடிப்பு நோய் (Systemic lupus erythematosus - SLE) - 1800களில் மருத்துவர்கள் லூபஸை ஒரு சரும நோய் என்று விவரித்தனர். ஆனால், இந்த நோய் உண்மையில் மூட்டுகள், சிறுநீரகங்கள், மூளை, இதயம் உட்படப் பல உடல் உறுப்புகளைப் பாதிக்கிறது. மூட்டு வலி, சோர்வு, தடிப்பு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள்.
ஹாஷிமோட்டோவின் தைராய்டிடிஸ்: ஹாஷிமோட்டோவின் தைராய்டிடிஸில், தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைக் குறைத்து, அதன் பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. உடல் எடை அதிகரிப்பு, சோர்வு, முடி உதிர்தல், தைராய்டு வீக்கம் ஆகியவை இதன் அறிகுறிகள்.
குடல் அழற்சி நோய்: குடல் அழற்சி நோய் குடல் சுவரின் உள் உறையில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் ‘கிரானின் நோய்’ என்பது வாயிலிருந்து ஆசன வாய் வரையில், இரைப்பை குடலின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ’பெருங்குடல் அழற்சி’யானது பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றின் உள் உறையை பாதிக்கும்.
ஷோகிரின்ஸ் நோய் (Sjögren’s syndrome) - இந்த நோய் கண்களுக்கும் வாய்க்கும் மசகை வழங்கும் சுரப்பிகளைத் தாக்குகிறது. வறண்ட கண்கள், உலர்ந்த வாய் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். இது மூட்டுகளையும் சருமத்தையும் பாதிக்கலாம்.
தன் தடுப்பாற்றல் நாள அழற்சி (ஆட்டோ இம்யூன் வாஸ்குலிடிஸ்) - இதில் நோயெதிர்ப்பு அமைப்பு ரத்த நாளங்களைத் தாக்கும். இதன் விளைவாக ஏற்படும் வீக்கம் தமனிகளையும் நரம்புகளையும் சுருக்கும்; அவற்றின் வழியாகச் செல்லும் ரத்த ஓட்டமும் குறையும்.
தன் தடுப்பாற்றல் நோய்களின் அறிகுறிகள்: சோர்வு l தசைகளில் வலி l வீக்கம், சிவத்தல் l குறைந்த அளவில் காய்ச்சல் l கவனக்குறைவு l கை கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு
முடி கொட்டுதல் சருமத் தடிப்புகள்: இவைத் தவிர, ஒவ்வொரு நோய்க்கும் தனித்துவ அறிகுறிகளும் உண்டு. சொரியாசிஸ் அல்லது முடக்குவாதம் போன்ற தன் தடுப்பாற்றல் நோய்களில் அறிகுறிகள் தோன்றி மறையலாம். அறிகுறிகள் தோன்றும் காலம் நோயின் பெருக்கம் என்றும், அறிகுறிகள் மறையும் காலம் நிவாரணம் கிடைத்தல் என்றும் அழைக்கப்படுகிறது.
பரிசோதனைகள்: சோதனைகள், அறிகுறிகள், உடல் பரிசோதனைகள் ஆகியவற்றைக் கொண்டே ஒரு மருத்துவர் இந்த நோய்களைக் கண்டறிகிறார். அறிகுறிகள் தன் தடுப்பாற்றல் நோயை உணர்த்தும்போது மருத்துவர்கள் பெரும்பாலும் ஆன்டிநியூக்ளியர் ஆன்டிபாடி சோதனையை (ANA) பயன்படுத்துகின்றனர். இந்த சோதனையின் முடிவு நேர்மறையாக இருந்தால், இந்த நோய்களில் ஏதேனும் ஒன்று இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படும்.
சிகிச்சைகள்: தன் தடுப்பாற்றல் நோய்களைக் குணப்படுத்தச் சிகிச்சைகள் கிடையாது. ஆனால், அதிகப்படியான நோயெதிர்ப்பு எதிர்வினையைக் கட்டுப்படுத்தவும், அழற்சியைக் குறைக்கவும், வலியைத் தணிக்கவும் சிகிச்சைகள் உதவும். வலி, வீக்கம், சோர்வு, சரும வெடிப்பு போன்ற அறிகுறிகளைப் போக்கவும் சிகிச்சைகள் உள்ளன. பொதுவாக, அழற்சி எதிர்ப்பு மருந்துகளும் நோயெதிர்ப்பு ஆற்றலை மட்டுப்படுத்தும் மருந்துகளும் சிகிச்சையில் பயன் படுத்தப்படுகின்றன. சமச்சீர் உணவை உட்கொள்வதும், வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்வதும் உடல் நிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமாக உணர உதவும். - முகமது ஹுசைன், mohamed.hushain@hindutamil.co.in