Published : 18 Nov 2016 10:23 AM
Last Updated : 18 Nov 2016 10:23 AM

இயக்குநரின் குரல்: சமூகத்துக்காகப் படம் பண்ணுகிறேன்! - சுசீந்திரன்

‘‘சில படங்கள் அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டுப் பார்க்கும்போது முழுமையான திருப்தி கிடைக்கும். அப்படி ஒரு திருப்தி எனக்கு ‘மாவீரன் கிட்டு’வில் கிடைத்தது’’ என்று பேச ஆரம்பித்தார் இயக்குநர் சுசீந்திரன். ‘மாவீரன் கிட்டு’, உதயநிதி படம், ‘பாயும் புலி’ படத்தின் தோல்வி என பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்ததிலிருந்து…

‘மாவீரன் கிட்டு' படத்தின் கதை பற்றி...

படத்தில் விஷ்ணுவின் பெயர்தான் கிட்டு. பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 1985 - 87 காலகட்டத்தில் இக்கதை நகரும். எனது ஊரில் உண்மையிலேயே ஒரு சம்பவம் நடந்தது. அந்தச் சம்பவம் இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனைதான் இந்தப் படம். இப்படம் பார்க்கும்போது கடந்த ஆண்டு வெளியாகி இந்தியா முழுக்க வரவேற்பைப் பெற்ற ‘சாய்ராட்' மராத்திப் படம் பார்த்த ஒரு அனுபவம் கிடைக்கும். காதல், நம்பிக்கை துரோகம், ஆணவக் கொலை என அனைத்துமே இப்படத்தில் இருக்கும். படத்தின் கடைசி 30 விநாடிகளில் நான் சொல்ல நினைத்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறேன். முக்கியமாக இது ஈழம் சம்பந்தப்பட்ட படமல்ல.

ஒருபுறம் வணிக ரீதியான படங்கள், மறுபுறம் சமூக அக்கறையுள்ள படங்கள் என இரண்டிலுமே பயணிக்கிறீர்களே?

‘வெண்ணிலா கபடி குழு', ‘அழகர்சாமியின் குதிரை', ‘ஜீவா', ‘ஆதலால் காதல் செய்வீர்' ஆகிய படங்களில் ‘வெண்ணிலா கபடிக் குழு' மட்டும்தான் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. மற்ற 3 படங்களும் எனக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தன. இவையனைத்துமே சமூகப் பிரச்சினையை மையப்படுத்திய படங்கள்தான். குறைந்த முதலீட்டில் படம் பண்ணுகிறேன் என்றால் பணத்துக்காகப் பண்ணவில்லை, சமூகத்துக்காகத்தான் பண்ணுகிறேன்.

‘மாவீரன் கிட்டு' எனக்கு ஒரு விஷப் பரீட்சை மாதிரி. இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றி பெறாவிட்டால், “சார்… நல்ல கமர்ஷியல் படங்களை மட்டுமே பண்ணுங்க. ஏன் புதுமுகங்களை வைத்து ரிஸ்க் எடுக்கிறீர்கள்” எனக் கேட்டுவிடுவார்கள்.

இதுபோன்ற கதைகளை இயக்கும்போது அவற்றுக்கு ஏன் பெரிய நாயகர்களை நீங்கள் தேர்வு செய்வதில்லை?

150 பிரேம்களில் நீங்கள் வருகிறீர்கள்... அப்படியே தூசி பறந்தது சார் என்றால் ஆர்வமாகக் கேட்பார்கள். பெரிய நாயகர்களிடம் இந்தக் கதையைச் சொன்னபோது, நல்ல கதை சார்... ஆனால் பார்த்திபன் சாருடைய கதாபாத்திரம் அவ்வளவு வலுவாக இருக்கிறதே என்றார்கள். அதற்காக, பார்த்திபன் கதாபாத்திரத்தை நான் குறைக்க விரும்பவில்லை. இந்தக் கதையை நான் 3 வருடங்களுக்கு முன்பே செய்திருப்பேன். பல கதாநாயகர்கள் வேண்டாம் என்றதால் மட்டுமே காத்திருந்தேன்.

உதயநிதியை நீங்கள் இயக்குவதாகத் தொடங்கப்பட்ட படம் நிறுத்தப்பட்டதற்கான என்ன காரணம்?

உதயநிதியுடன் நான் தொடங்கிய படம் இரண்டு நாள் படப்பிடிப்புக்குப் பிறகு, 2-ம் பாதிக் கதையில் ஒருசில மாற்றங்கள் செய்தேன். நான் செய்த மாற்றங்கள், உதயநிதிக்குப் பிடிக்கவில்லை. முதல்பாதி அளவுக்கு, 2-ம் பாதி இல்லை என்றார். “என்னை நம்பிச் செய்தால், பண்ணலாம். இல்லையென்றால் வேண்டாம் சார். படம் வெளியானவுடன் புலம்புவது வேண்டாம்” என்று பேசிவிட்டு, வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். இதனால் எனக்கு ஒரு 6 மாதம் வீணானது. அவ்வளவுதான்.

‘பாண்டிய நாடு'க்கு கிடைத்த வரவேற்பு, ‘பாயும் புலி'க்குக் கிடைக்காமல் போனதற்கு காரணம் என்ன?

அந்தப் படத்தின் முதல் பாதியில் நான் ஒரு தவறு செய்துவிட்டேன். எப்போதுமே என் படங்களில் குடும்பங்களின் உறவு தொடர்பான காட்சிகள் நன்றாக இருக்கும். ‘பாயும் புலி ' முதல் பாதியில் நான் விஷாலை விடுதியில் தங்குவது போன்று செய்துவிட்டதால், குடும்பக் காட்சிகளை வைக்க முடியாமல் போய்விட்டது. அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

விஜயை நீங்கள் இயக்கப்போகிறீர்கள் என்று வெளியான செய்திகள் குறித்து...

இதுவரை இரண்டுமுறை விஜயை சந்தித்திருக்கிறேன். ‘நான் மகான் அல்ல' பார்த்துவிட்டு அழைத்தார். அப்போது ஒரு கதை சொன்னேன். அது சரியாக அமையவில்லை. கொஞ்சம் கமர்ஷியலாகக் கேட்டார். நான் யதார்த்தமாகச் சொன்னேன். ‘பாண்டிய நாடு' முடித்தவுடன் சந்தித்தோம். ‘ஹாய்... ஹலோ' சந்திப்பாகத்தான் அமைந்தது. நாம் ஒரு படம் பண்ணுவோம் என்று சொல்லியிருக்கிறார். அதற்காக ஒரு கதை தயார் செய்தேன். அதை அவர் இன்னும் கேட்கவே இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x