ஆழ்கடல் அதிசயங்கள் 27: பிரம்மாண்ட விலங்குகளின் குட்டித் தூக்கம்!

ஆழ்கடல் அதிசயங்கள் 27: பிரம்மாண்ட விலங்குகளின் குட்டித் தூக்கம்!
Updated on
2 min read

ஜப்பானின் கடற்பகுதியில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, கடற்பரப்புக்கு அருகில் வந்து வேகத்தைக் குறைத்தது. கடல்மட்டத்திலிருந்து இரண்டு மீட்டர் ஆழத்தில் இருப்பதாகத் தகவல் பலகையில் தெரிந்தது. அங்கும் இங்கும் தலையைத் திருப்பி ஏதாவது இருக்கிறதா என்று மூவரும் தேடினர்.

“அதோ!” என்று செந்தில் கைகாட்டினான்.

ரக்‌ஷா அலறிவிட்டாள். “ஆ! என்ன இது, பெரிய திமிங்கிலங்கள் செங்குத்தா மிதக்குது! என்னாச்சு?”

அங்கே பெட்டி போன்ற பிரம்மாண்டமான தலையைக்கொண்ட பத்து சாம்பல் நிறத் திமிங் கிலங்கள் செங்குத்தாக மிதந்துகொண்டிருந்தன!

“இவை ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் (Sperm Whales). பல்லுள்ள திமிங்கில வகையிலேயே மிகப் பெரியவை. எல்லாம் குட்டித் தூக்கத்தில் இருக்கு” என்று விளக்கினார் அருணா.

“கடல்வாழ் விலங்குகள் எப்பவும் தண்ணிக் குள்ளயே இருக்கே, அதுங்க எப்படித் தூங்கும்?” என்று கேட்டாள் ரோசி.

“கடலுக்குள் வாழும் விலங்குகளுக்குத் தண்ணீர்தான் எல்லாமே, ஆக தண்ணீருக் குள்ளேயும் தூங்கும்படி அவை தகவமைக்கப் பட்டிருக்கும்” என்று பதிலளித்த செந்தில், சொன்னது சரியா என்று அருணாவை ஏறிட்டான். அவரும் சரிதான் என்று தலையாட்டினார்.

“சரி, கடல் பாலூட்டிகளுக்கு நீருக்குள் இருக்கும் ஆக்சிஜனைச் சுவாசிக்கும் செவுள் கிடையாது. நம்மைப் போன்ற நுரையீரல் அமைப்புதான் உண்டு. அடிக்கடி கடல் பாலூட்டிகள் கடல் மட்டத்துக்கு வந்து காற்றில் இருக்கும் ஆக்சிஜனைச் சுவாசிப்பதை வீடியோவில் பார்த்திருக்கோம். அப்படின்னா தூக்கத்தில் எப்படி சுவாசிக்கும்?” என்று கேட்டாள் ரக்‌ஷா. செந்தில் குழப்பத்துடன் யோசிக்க, எல்லாரும் அருணாவைப் பார்த்தார்கள்.

“நிறைய கடல் பாலூட்டிகள் கடல்மட்டத் திலேயேதான் தூங்கும். தொடர்ந்து சுவாசிக்க அது ஒரு வழி. கடல் மட்டத்துக்குக் கொஞ்சம் கீழே தூங்கும் விலங்குகளுக்கு வேற சில தகவமைப்புகள் இருக்கும். இதோ இந்தத் திமிங்கிலங்களைப் பொறுத்தவரை நுரையீரல் கொள்ளளவு கொஞ்சம் அதிகம் என்பதால் தூங்கி முடிக்கும்வரை சேமித்த ஆக்சிஜனே போதுமானது. எழுந்த பிறகு உடனே கடல்மட்டத்துக்குப் போய் சுவாசித்துக்கொள்ளலாம்” என்று விளக்கினார் அருணா.

“ஆமா, இதுங்க ஏன் செங்குத்தா மிதக்குது?” என்று கேட்டாள் ரோசி.

“இந்த அம்சம் 2008இல் கண்டறியப்பட்டது. செங்குத்தாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்து நன்றாகப் பராமரிக்கப்படும். வேட்டையாடி களிடமிருந்து தப்பித்துக்கொள்வதும் கொஞ்சம் சுலபம். அதைத் தவிர, செங்குத்தா இருக்கும்போது உடல் வெப்பநிலையையும் கொஞ்சம் பராமரிக்க முடியுங்கிறது எல்லாம் காரணிகளா இருக்கலாம்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க” என்று அருணா சொல்லிக்கொண்டிருந்தபோதே, திமிங்கிலங்கள் விழித்துக்கொண்டன. தூக்கம் கலைந்ததுபோல் உடலை அசைத்தன.

“அடடா! நாம வந்தது இதுங்களுக்குத் தொந்தரவா இருந்திருக்குமோ? சத்தம் கேட்டுத் தூக்கம் கலைஞ்சு போச்சு” என்று கவலைப்பட்டாள் ரோசி.

“இல்லை, இங்க வந்து 10, 15 நிமிஷம் இருக்குமா? அந்தக் குட்டித் தூக்கம் இதுங்களுக்குப் போதும்” என்றார் அருணா.

“என்ன! இது போதுமா?” என்று செந்தில் ஆச்சரியப்பட்டான்.

“ஆமாம், ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் ஒரு நாளைக்கு 7 சதவீத நேரம்தான் தூங்கும். அதாவது வெறும் 100 நிமிடங்கள். இதுங்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை மணிநேரத் தூக்கம் இருந்தா போதும், அதுவும் இப்படிக் குட்டித் தூக்கம்போல விட்டுவிட்டுக் கிடைச்சா போதும். உலகிலேயே மிகக் குறைந்த நேரம் தூங்கும் விலங்கு இதுதான்” என்றார் அருணா.

“ஆச்சரியமா இருக்கு!”

“இது மட்டுமல்ல, மீன் காட்சியகங்களில் இருக்கும் கடல் பாலூட்டிகள் தூங்கும்போது மூளையின் ஒரு பகுதி மட்டுமே ஓய்வெடுக்கும்னு கண்டுபிடிச்சிருக்காங்க. இன்னொரு பகுதி முழிச்சுகிட்டே இருக்குமாம். இந்தத் திமிங்கிலங் களில் அந்தப் பண்பு இருக்குமான்னு விஞ்ஞானிகள் யோசிக்கிறாங்க. ஆனா, அதை நிரூபிக்கணும்னா இந்த ஸ்பெர்ம் திமிங்கிலங்களின் பிரம்மாண்ட தலையில் சில கருவிகளைப் பொருத்தி நாம ஆராய்ச்சி நடத்தணும். அது நடைமுறையில் இப்போதைக்குச் சாத்தியம் இல்லாததால் வேற ஏதாவது பண்ண முடியுமான்னு யோசிக்கிறாங்க” என்று சொல்லி முடித்தார் அருணா.

தூங்கி முடித்து அடுத்த வேட்டைக்குத் திமிங்கிலங்கள் தயாராக, புறப்பட்டது நாட்டிலஸ் நீர்மூழ்கி.

(அதிசயங்களைக் காண்போம்!)

நாராயணி சுப்ரமணியன்
nans.mythila@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in