Published : 31 Oct 2022 06:51 PM
Last Updated : 31 Oct 2022 06:51 PM

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 17

ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

இந்திய வரலாறு -6
மராத்தியர்கள்

மராத்திய சிவாஜி

மராத்தியப் பேரரசிற்கு வித்திட்டவர் சத்ரபதி சிவாஜி என்றழைக்கப்படும் சிவாஜி ராஜே போன்ஸ்லே. இவர் பொ.ஆ. 1627 இல் சாகாஜி போன்ஸ்லே மற்றும் ஜீஜாபாய்க்கும் இளைய மகனாக பிறந்தார். தாய் ஜீஜாபாய் மூலமாக இளம் வயதிலேயே வீரக்கதைகளைக் கேட்டு அவற்றின் மூலம் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். அவரது பாதுகாவலர் தாதாஜி கொண்டதேவ். ரெய்கர் கோட்டையில் பொ.ஆ.1674இல் சத்ரபதி என முடிசூட்ட பட்ட சிவாஜி, இந்து சுயராஜ்ஜிய சித்தாந்தத்திற்கு ஆதரவளித்தார்.

போர்களில் கொரில்லா (மராத்தியில் கானிமி காவா) உத்திகளைப் கையாண்டவர். இந்தியக் கடற்படையின் தந்தை என அழைக்கப்படும் சிவாஜி தனது தளபதி கான்ஹோஜி ஆங்ரேயின் கீழ் கடற்படை மூலம் பேரரசின் கடற்கரை சார்ந்த பகுதிகளை பாதுகாத்தார். சிந்துதுர்க் என்ற துறைமுகத்தை உருவாக்கியதோடு விஜயதுர்க் உள்ளிட்ட பழைய துறைமுகங்களையும் வலிமைபடுத்தினார்.

எட்டு மந்திரிகள்

அவரது மந்திரி சபை அஷ்டப்பிரதான் என அழைக்கப்பட்டது.
பேஷ்வா (பிரதமர்)
சர்-இ-நபௌத் (ராணுவத்துறை)
நியாயாதீஷ் (நீதித் துறை)
அமாத்தியா அல்லது மசும்தார் (நிதித் துறை)
வாகியா-நவீஸ் (உள்துறை)
சமந்த் அல்லது தபீர் (வெளியுறவுத் துறை)
சச்சீவ் (கடிதப் போக்குவரத்து)
பண்டிட் ராவ்(அரசவை புரோகிதர்)

அஷ்ட பிரதான அமைச்சர்களுக்கு உதவியாக ஜம்தார், போட்னீஸ், திவான், மசூம்தார், டபர்தார், பட்னாவீஸ், சிட்னீஸ், கர்கானி ஆகிய எட்டு அதிகாரிகள் செயல்பட்டனர்.

தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளை மூன்று மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் வைஸ்ராய் ஒருவரை நியமித்தார். மேலும் மாகாணங்களை ப்ரான்ட்ஸ், பின்னர் பர்கானா, தாராஃப்ஸ் என பிரித்தார். மிக குறைந்த அலகு கிராமத்தின் தலைவர் படேல் ஆவார்.

குரு ராம்தாஸ் என்பவரைத் தனது அரசியல் மற்றும் ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டார் சத்ரபதி சிவாஜியின்.

சம்ஸ்கிருத அறிஞர் ஜெய்ராம் பிண்டியே, அரசு புரோகிதர் கேஷவ் பண்டிட் போன்றோரை ஆதரித்தார். சௌத் எனும் வரி அவரது பேரரசின் வெளிப் பகுதிகளில் மாவட்ட வருவாயில் நான்கில் ஒரு பங்கு வரியாக வசூலிக்கப்பட்டது.சர்தேஷ்முகி எனும் வரி கிராமங்கள்/நகரங்களின் மக்கள்தொகையைப் பொறுத்து மொத்த நில வருவாயில் பத்தில் ஒரு பங்கு வரியாக வசூலிக்கப்பட்டது.

முகலாயர்களுடனான மோதல்


பொ.ஆ.1659 இல் நயவஞ்சகமாக சிவாஜியை கொல்ல பார்ததார் பீஜப்பூர் சுல்தான். அனுப்பிய அப்சல்கானை தனது அறிவு திறமையால் பாக்நக் என்ற புலிநகம் மூலம் கிழித்து கொன்றார் சிவாஜி. பொ.ஆ.1660 இல் ஔரங்கசீப் அனுப்பிய செயிஸ்டகானை தாக்கியபோது அவர் தப்பினார்.

புரந்தர் கோட்டையை ஔரங்கசீப் அனுப்பிய ராஜா ஜெய்சிங் முற்றுகையிட்டதை தொடர்ந்து புரந்தர் உடன்படிக்கை பொ.ஆ. 1665 இல் சிவாஜிக்கும் ஜெய்சிங்கிற்கும் இடையே கையெழுத்தானது. பொ.ஆ.1666இல் ஔரங்கசீப்பைச் சந்திக்க சென்ற சிவாஜி கைது செய்யப்பட்டாலும் பழக்கூடை மூலமாக தப்பினார். ‘மலை’, ‘எலி’, ‘தக்காண புற்றுநோய்’ என்றெல்லாம் ஔரங்கசீப்பால் குறிப்பிடப்பட்டவர் சிவாஜி. பொ.ஆ.1672 இல் சால்கர் என்ற போர்க்களத்தில் முகலாயர்களை தோற்கடித்தார்.

மராத்திய குதிரைப்படையில் இரு பிரிவுகள் இருந்தன. அரசு நேரடி மேற்பார்வையில் பர்கிர்கள் என்ற பிரிவும் உயர்குடியினர் மேற்பார்வையில் சிலாதார்கள் எனும் பிரிவும் இருந்தன. மாவ்லா எனும் காலாட்படை வீர்கள் அவர்களது ராணுவத்தில் முக்கிய பங்காற்றினர். பொ.ஆ.1680 இல் ராய்கரில் சிவாஜியின் உயிர் பிரிந்தாலும் வரலாற்றில் அவர் புகழ் உயர்ந்து நிற்கிறது.

பூசல்களும் சமரசங்களும்

சிவாஜிக்கு பின் அவரது மகன்கள் ஷாம்பாஜிக்கும் ராஜாராமுக்கும் இடையே நடந்த வாரிசுரிமை போரில் ஷாம்பாஜி வெற்றி பெற்றாலும் முகலாயர்களால் சிறைபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். பின் ராஜாராம் ஆட்சி பொறுப்பேற்றாலும் முகலாயருக்கு பயந்து செஞ்சியில் தஞ்சம் புகுந்து சதாராவில் இறந்தார். தாய் தாராபாய் துணைகொண்டு அவரது மகன் இரண்டாம் சிவாஜி ஆட்சி பொறுப்பேற்றார். அதற்குப் பின் வந்தவர் ஷாகு. இவரது ஆட்சி காலத்தில் பேஷ்வாக்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் (1713 - 1720) சிறு அதிகாரியாக சேர்ந்து பேஷ்வா வரை உயர்ந்த இவர் அப்பதவியை வாரிசுப் பதவியாக மாற்றினார். ஷாகுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து மராட்டிய தலைவர்கள் பலரை ஷாகுவுக்கு ஆதரவளிக்க செய்தார். 1719இல் முகலாயப் பேரரசர் பரூக்ஷியரிடமிருந்து சில உரிமைகளை கோரி பெற்றார்.

முதலாம் பாஜி ராவ் தனது இருபது வயதில் தந்தை பாலாஜி விஸ்வநாத் வகித்த பேஷ்வா பதவிக்கு வந்தார். மராத்திய தலைவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆட்சிப் பகுதியில் தன்னாட்சி உரிமை பெற்று ஆட்சி செய்ய வழிவகை செய்தார். புனேயில் பேஷ்வா, பரோடாவில் கெய்க்வாட், குவாலியரில் சிந்தியா, நாக்பூரில் போன்ஸ்லே மற்றும் இந்தூரில் ஹோல்கர் என அவரவர் பகுதிகளில் மராத்திய தலைவர்கள் செல்வாக்குடன் விளங்கினர். மொத்தத்தில் மராத்தியர் புகழ் உயர்ந்து நின்றது.

முதலாம் பாஜிராவ்விற்கு பின் அவரது மகன் பாலாஜி பாஜிராவ் பேஷ்வாக பதவியேற்றார். பொ.ஆ.1749 இல் மன்னர் ஷாகு வாரிசின்றி இறந்த பின் அவரின் வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்த ராம்ராஜ் என்பவரை சதாரா சிறையில் அடைத்தார் பாலாஜி. மராத்திய பேரரசு முழுவதும் பேஷ்வா கட்டுப்பாட்டிற்கு வந்ததால் முகலாயப் பேரரசருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு வருவாயை பெருக்கினார்.

பொ.ஆ. 1761இல் மூன்றாம் பானிபட் போரில் அகமது ஷா அப்தலியை எதிர்த்து மராத்தியர்கள் போரிட்டு பல ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்து தோற்றனர். அச் சோகத்தில் பாலாஜி பாஜி ராவ் இறந்தார். மராத்திய கூட்டமைப்பின் உட்பூசல்கள் காரணமாக அதில் விரிசல் விழுந்ததால் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை தடுக்க இயலவில்லை.

வீர சிவாஜி

மராத்திய வழித் தோன்றல்களில் தஞ்சாவூரை ஆண்ட மன்னர் இரண்டாம் சரபோஜி மராத்தி மற்றும் தேவநாகிரியில் முதல் புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார். சரஸ்வதி மஹால் என்ற நூலகம் தஞ்சாவூரில் இவரால் நிறுவப்பட்டது.

இந்திய வரலாற்றில் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் வீர சிவாஜி என்றால் அது மிகையாகாது.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி - https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/888831-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-16-5.html

அடுத்த பகுதி நவம்பர் 2 (புதன்கிழமை) அன்று வெளியிடப்படும்


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x