திரை (இசைக்) கடலோடி 15 | வாலியின் வரிகளுக்கு இசை மறுத்த எம்.எஸ்.வி!

திரை (இசைக்) கடலோடி 15 | வாலியின் வரிகளுக்கு இசை மறுத்த எம்.எஸ்.வி!
Updated on
4 min read

சமுதாயத் தீமைகளில் முதலிடத்தில் இருப்பது மதுதான்.

மதுவின் தீமைகளை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எடுத்துச் சொன்னதைப் போல வேறு எந்தக் கதாநாயக நடிகரும் சொன்னதே இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். தனது திரைப்படங்களில் மதுவின் தீமையைச் சொல்லும் காட்சிகளையும் வசனங்களையும் - ஏன் பாடல் காட்சிகளைக் கூட அமைத்தவர் அவர். அந்த வகையில் அமைந்த ஒரு மறக்கமுடியாத பாடல் தான் அவரது நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தில் இடம் பெற்ற பாடல்.

படத்தில் கதாநாயகன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவது போன்ற காட்சி. அதில் நடிப்பதற்கு சற்றுத் தயங்கினார் எம்.ஜி.ஆர். தான் மது அருந்துவது போல் நடித்து அது மக்களிடம் சென்று சேர்ந்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடுமே என்பதால் கவிஞர் வாலியிடம் ஆலோசனை கேட்டார்.

கவிஞர் வாலியோ ‘சூழ்ச்சியால் சந்தர்ப்ப வசமாக நீங்க மதுவின் பிடியில் சிக்க நேரிடுகிறது. ஆனாலும் உங்கள் மனசாட்சி பலவேறு வடிவங்களில் வந்து உங்கள் தவறை சுட்டிக்காட்டி மதுவின் தீமைகளை விளக்கி பாடுவதாகக் காட்சி அமைத்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.’ என்று கூறியவர்

'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா.. மனிதன் தானா.. - இல்லை நீ தான் ஒரு மிருகம்' என்று தொடங்கி மளமளவென பாடலை எழுதி எம்.ஜி.ஆரிடம் கொடுக்க மக்கள் திலகத்துக்கு பாடல் மிகவும் பிடித்துப் போய்விட்டது.'உடனே கொண்டு போய் தம்பி விசு கிட்டே கொடுத்து மெட்டுப்போடச் சொல்லுங்க.' என்று அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.

மெல்லிசை மன்னரிடம் வந்து பாடலைக்கொடுத்து எம்.ஜி.ஆரிடம் தான் வரிகளைக் காட்டிய கதையைச் சொன்னார் கவிஞர் வாலி.

பொதுவாக மெல்லிசை மன்னரிடம் ஒரு பழக்கம் உண்டு. யார் பாடலை எழுதினாலும் அவரிடம் தான் முதலில் காட்ட வேண்டும். மெட்டுக்குள் அடங்கி வருகிறதா, இல்லை.. மாற்றம் ஏதாவது செய்யவேண்டுமா என்று அவர் பார்த்து ஒப்புதல் அளித்த பிறகுதான் மற்றவரிடம் காட்ட வேண்டும். அது எம்.ஜி.ஆர். ஆனாலும் சரி, சிவாஜி ஆனாலும் சரி. அப்படி இருக்கும்போது வாலி முதலில் எம்.ஜி.ஆரிடம் பாடலைக் காட்டிவிட்டார் என்றதும் மெல்லிசை மன்னருக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது.

'எம்.ஜி.ஆர். ஓக்கே பண்ணிட்டாருல்ல. அப்ப அவர் கிட்டேயே போய் டியூன் போட்டு இசை அமைச்சுக்குங்க.' என்று கோபத்துடன் கொந்தளித்தார் அவர். கவிஞர் வாலி சொன்ன சமாதானம், விளக்கங்கள் எதுவும் எடுபடவில்லை. 'அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ எப்படிய்யா முதல்லே அவர்கிட்டே காட்டலாம்? இந்தப் பாட்டுக்கு நான் கண்டிப்பா டியூன் போடமாட்டேன்.' என்று நிர்த்தாட்சண்யமாக மறுத்து விட்டார் மெல்லிசை மன்னர்.

விஷயம் எம்.ஜி.ஆரின் செவிகளை எட்டியது. மெல்லிசை மன்னரை அழைத்து விபரம் கேட்டார் எம்.ஜி.ஆர்.

'அண்ணே.. என் நிலைமை உங்களுக்கு புரியாது. உங்க பாட்டு 'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'ன்னு தொடங்குது. சமீபத்துலதான் நான் நம்ம கவிஞரோட 'லட்சுமி கல்யாணம்' படத்துக்காக சிவாஜி பாடுற மாதிரி 'யாரடா மனிதன் இங்கே'ன்னு ஒரு பாட்டு போட்டு இருக்கேன். இரண்டும் ஒரே மாதிரி இருக்குறதால வீணா ரசிகர்கள் மத்தியிலே பிரச்சினை வரும். அதனாலே தான் அப்படிச் சொன்னேன்' என்று விஷயத்தைப் போட்டு உடைத்தார் விஸ்வநாதன்.

அருமையான பாடலை இழக்க விரும்பாத எம்.ஜி.ஆர் 'நீ வேணும்னா கவிஞர் கிட்டே போய் பாட்டை படத்துலே இருந்து நீக்கிட முடியுமான்னு கேட்டுப்பாரேன்' என்றார் எம்.ஜி.ஆர்.

கவிஞர் கண்ணதாசனிடம் வந்து எம்.எஸ்.வி. கேட்டதுதான் தாமதம் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார் கவியரசர்.

'என்ன விளையாடுறியா நீ? நானே வட்டிக்கு கடன் வாங்கி படாத பாடுபட்டு படத்தை எடுத்திருக்கேன். அவர் சொன்னா நான் உடனே பாட்டை நீக்கிடணுமா? அதெல்லாம் முடியாது போ’என்று குதித்தார் கவியரசர்.

இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். நிமிட நேர யோசனைக்குப் பிறகு ‘நீ பதிவு பண்ணிய பாட்டை எடுத்துட்டு வந்து எனக்கு போட்டுக்காட்டு. நான் கேட்கணும்.' என்றார். அடுத்த சிலமணி நேரங்களில் ‘யாரடா மனிதன் இங்கே' பாடல் எம்.ஜி.ஆருக்கு போட்டுக் காட்டப்பட்டது.

பாடலை முழுவதும் கேட்ட எம்.ஜி.ஆர். 'விசு! ரெண்டு பாட்டுக்கும் சம்பந்தமே இல்லே. ‘ஒளிவிளக்கு’ படத்தில் வரும் பாட்டு குடித்துவிட்டு வருபவனுக்கு அறிவுரை சொல்லித் திருத்தும் பாட்டு. இந்தப் பாட்டு பொதுவா நல்ல மனிதன் எங்கே இருக்கான் என்று தேடும் பாட்டு. ரெண்டுலேயும் 'மனிதன்' என்ற வார்த்தை மட்டும் தான் வருது. ஒரு பிரச்சினையும் வராது. நீ தைரியமா டியூன் போடு' என்று மெல்லிசை மன்னரின் சந்தேகத்தைப் போக்கி பாடலுக்கு இசை அமைக்க வைத்து அதைக் காட்சிப்படுத்தவும் செய்தார் எம்.ஜி.ஆர்.

ஒளி விளக்கு
ஒளி விளக்கு

இனி நாம் பாடலுக்குள் மூழ்குவோம்..

எடுத்த எடுப்பிலேயே ஆவேசத்தாக்குதல் தொடுக்கிறார் எம்.எஸ்.வி.

மது அருந்திவிட்டு வரும் ஒருவனைப் பார்த்ததும் உடனே ஆத்திரம் தானே வரும். அந்த ஆத்திரத்தை வாலி வார்த்தைகளில் வடிக்க அந்த ஆவேச உணர்ச்சியை இசையில் உணர வைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.

'நீயெல்லாம் ஒரு மனிதனா? இந்த மதுவில் விழுந்துவிட்ட நீ மனிதனே இல்லை. மிருகம்..’

சாதாரணமாக எழுதி படித்தால் ஒரு வசனம் தான் இது. ஆனால் தான் அமைத்த இசையால் இந்த வார்த்தைகளுக்கு ஒரு காவிய அந்தஸ்தையே ஏற்படுத்தி இருக்கிறார் மெல்லிசை மன்னர்.

'போயும் போயும் இந்த மதுவுக்குள் விழுந்துவிட்டாயே. இதனால் என்ன ஆகும் தெரியுமா?' -

'மனமும் நல்ல குணமும் உன் நினைவை விட்டு விலகும்' - இந்த வார்த்தைகளின் முடிவில் ட்ரம்ஸை பயன்படுத்தி அழுத்தமான ஒரு தீர்மானத்தை வைத்து பல்லவியை முடிக்கிறார் மெல்லிசை மன்னர். 'உன்னுடைய மனம் உன் வசம் இருக்காது. நல்ல குணமும் உன் நினைப்பை விட்டே போய்விடும். போனது போனதுதான்." என்று அழுத்தம் திருத்தமாக வார்த்தைகளில் சொல்லி விளங்க வைக்க வேண்டிய ஒன்றை ஒற்றை ட்ரம்ஸ் தீர்மானத்தின் மூலமே வெளிப்படுத்தி இருக்கிறார் எம்.எஸ்.வி. மூன்று அட்சரம் கொண்ட திஸ்ர நடை பாடல் முழுவதும் மதுவால் தள்ளாடும் மனிதனின் நடையை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

முதல் வரியில் நான்கு அட்சரங்கள். அடுத்த இரண்டாவது வரியில் மூன்று அட்சரங்கள் என்று குறைத்து அமைத்து மதுவின் பிடியில் சிக்கிடும் மனிதனிடம் ஏற்படும் குறைபாட்டைத் தனது இசையாலேயே அருமையாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறார் மெல்லிசை மன்னர்.

சரணத்தில் வேற்றுமை அணிவகையை அற்புதமாகக் கையாண்டு பாடலை அமைத்திருக்கிறார் கவிஞர் வாலி.

மானம், கம்பீரம், வீரம் இவை அனைத்தும் ஒரு ஆண்மகனின் தனித்துவமான அடையாளம். இவற்றுக்கு உவமையாக கவரி மான், யானை, வேங்கை ஆகிய விலங்கினங்கள் சொல்லப்படும். இப்படி உவமையாகச் சொல்லப்படுபவற்றை விட அதிகமாக தனித்தன்மை கொடுத்து உவமிக்கப்படும் பொருளை மேலாக உயர்த்தி அல்லது கீழாக தாழ்த்திச் சொல்வது வேற்றுமை அணி எனப்படும். இதோ அற்புதமான அணி நயம் மிக்க கவிஞர் வாலியின் எளிமையான வரிகள்.

'மானைப்போல் மானம் என்பாய் - நடையில்
மதயானை நீயே என்பாய்.
வேங்கை போல் வீரம் என்பாய் - அறிவில்
உயர்வாகச் சொல்லிக்கொள்வாய் - மதுவால்
விலங்கினும் கீழாய் நின்றாய்.

மறுபடி இறுதி வார்த்தைகளுக்கு ட்ரம்ஸ் ரிதம் தீர்மானமாக ஒரு அழுத்தம் கொடுக்கிறது.

தொடரும் அடுத்த சரணத்தில் மதுவை அருந்தாமல் ஆடும் பொருட்களை பட்டியல் போடுகிறார் கவிஞர் வாலி.

அலையாடும் கடலைக் கண்டாய் - குடித்துப்
பழகாமல் ஆடக் கண்டாய்.
மலராடும் கொடியைக் கண்டாய் - மதுவைப்
பருகாமல் ஆடக் கண்டாய்’.

ஆனால் மனிதா 'நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்' என்று மதுவின் மயக்கத்தில் தள்ளாடும் மனிதனை இடித்துரைக்கிறார் கவிஞர் வாலி.

இறுதி சரணத்தில் மதுவை துணைக்கு வைத்துக்கொண்டு மனிதன் புரியும் கொடுமைகளை சொல்கிறார் வாலி.

பொருள் வேண்டி திருடச் செல்வாய் - பெண்ணைப்
பெறவேண்டி விலையைச் சொல்வாய்
துணிவோடு உயிரைக் கொள்வாய் - எதற்கும்
துணையாக மதுவைக் கொள்வாய் - கேட்டால்
நான்தானே மனிதன் என்பாய்’.

இத்தனை தவறுகளையும் மது அருந்திய நிலையில் செய்துவிட்டு துணிச்சலாக உன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ள முடியுமா என்று கேட்பதுபோல ‘தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?’ என்ற பல்லவி ‘இந்த மதுவில் விழும் நேரம்’ என்ற வார்த்தைகளோடு முடிகிறது. தந்தி வாத்தியக் கருவியான வயலின்களின் நேர்த்தியான மீட்டல்கள் மதுவில் விழும் மனிதன் மெல்ல மெல்ல போதை தரும் உறக்கத்தின் பிடியில் ஆழ்வதை உணர்த்துவதுபோல நீண்டு இறங்கி முடியும் அழகே தனி.

கவிஞர் வாலியின் எளிமையான, ஆழமான சொல்லாடல் + பாடலுக்கு மெல்லிசை மன்னர் அமைத்திருக்கும் இசை + அந்த இசையை உள்வாங்கிக்கொண்டு தனது கம்பீரக் குரலின் மூலம் டி.எம்.சௌந்தரராஜன் வெளிப்படுத்தி இருக்கும் நயம் என எல்லாம் ஒன்று சேர்ந்து திரை இசைக்கடலில் மதுவின் தீமை விளக்கும் ஒரு அற்புதமான நல்முத்தாக பாடலை துலங்க வைத்திருக்கிறது.

(தொடர்ந்து முத்தெடுப்போம்.)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in