

தென்னிந்தியாவின் தனித்துவ அடையாளங்களில் ஒன்றான நீலக்குறிஞ்சி மலர், மூணாறு மலைப் பகுதியில் சமீப காலமாகப் பூத்துக் குலுங்கத் தொடங்கியிருக்கிறது. இடைவிடாத தொடர்ச்சி, அபூர்வத்தின் குறியீடு, இயற்கையின் அதிசயங்களில் ஒன்று குறிஞ்சி. வாழ்க்கையில் ஒரு முறையாவது குறிஞ்சி மலர்வதை நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதே இயற்கையின் பால் தீவிர ஆர்வம் கொண்டவர்களின் ஆவல்.
சொல்லி வைத்ததுபோல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டம்கூட்டமாகக் குறிஞ்சி மலர்கள் பூத்து, நீல நீறப் போர்வை போர்த்தப்பட்ட மலைப்பகுதிகளை உருவாக்கி மெய்மறக்க வைத்துவிடுகின்றன. மூணாறில் நீலக்குறிஞ்சியின் பூத்தல் இன்னும் இரண்டு வாரங்களுக்குத் தொடர வாய்ப்புள்ளது என்கிறார் மறையூரைச் சேர்ந்த பி.கே. தனுஷ்கோடி. கேரள வனத்துறையில் சமூக ஒருங்கிணைப்பாளராக அவர் பணியாற்றிவருகிறார். நீலக்குறிஞ்சி பூத்தல் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை:
தனித்துவ குணங்கள்: “உலகிலுள்ள பூக்கும் தாவரங்களில் ஒரு சில மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் பூக்காமல், அவற்றினுடைய வாழ்நாளின் முடிவில் ஒரேயொரு முறை பூத்து, காய்த்து, மடிந்துவிடும். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் பூக்கும் நீலக்குறிஞ்சி அத்தகைய தாவரங்களில் ஒன்று. அது மட்டுமல்லாமல் ஒருமித்த பூத்தல் பண்பையும் இது கொண்டுள்ளது - அதாவது ஒரே காலகட்டத்தில் எல்லா தாவரங்களும் பூக்கும் இயல்பு. காலை ஐந்து முதல் ஒன்பது மணிவரை இந்தப் பூக்கள் மலரும். அடுத்த மூன்று மணி நேரத்துக்குள் மகரந்தச் சேர்க்கை நடைபெற்றுவிடும்; ஒவ்வொரு பூவும் 3-4 விதைகளை உருவாக்கும்.
காலகட்ட மாறுபாடு: மூணாறும் ஊட்டியும் ஒரே மண்டலத்தில் உள்ளபோதும், இந்த இரண்டு பகுதிகளிலும் ஒரே காலகட்டத்தில் நீலக்குறிஞ்சி பூப்பது இல்லை. அவற்றுக்கு இடையே இடைவெளி உண்டு. இயற்கையின் புரிபடாத மர்மங்களில் ஒன்று இது. இடுக்கி மாவட்டத்தை மட்டுமே எடுத்துக்கொண்டால், மாட்டுப்பட்டி, கள்ளிப்பாறை, சதுரங்கப் பாறை, மூணாறு (இரவிக்குளம் தேசிய பூங்கா உள்ளிட்ட மலைப்பகுதி) என நான்கு இடங்களில் நீலக்குறிஞ்சியின் வெவ்வேறு தொகுப்புகள் காணப்படுகின்றன. அந்த இடங்களில் பூத்தலின் இயல்பும் காலகட்டமும் சற்று மாறுபட்டிருக்கின்றன. சூழலியல் மாறுபாடுகள், பறவைகளின் குறுக்கீடு, மனிதத் தலையீடு போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, நீலக்குறிஞ்சி விதைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மனிதரோ பறவையோ வெவ்வேறு இடங்களில் தூவியிருக்கலாம். அதே நேரம் இந்தக் கருதுகோளை உறுதிசெய்வதற்கு அறிவியல்பூர்வ ஆய்வுகள் தேவை.
பொதுவாக குறிப்பிட்ட ஒரு தாவரம் பூப்பதை நிறுத்தவது பேரழிவின் வருகையை உணர்த்தும். நாம் இன்னும் அந்த மோசமான நிலைக்குச் செல்லவில்லை. ஆனால் மனிதர்கள் ஏற்படுத்திய சூழலியல் மாற்றங்களால், நீலக்குறிஞ்சியின் பரவல் பெருமளவு சுருங்கிவிட்டது. இந்த ஆண்டு நீலக்குறிஞ்சி பூத்துள்ள பரப்பு 100 சதுர மீட்டர் அளவுக்கே உள்ளது.
அழகின் மதிப்பு: நீலக்குறிஞ்சி பூத்தல் ஓர் அரிய நிகழ்வு; பேரழகை நம் கண்முன் நிறுத்தும் அற்புதம். ஒரு சுற்றுலா நிகழ்வாக அரசாங்கம் இதை மாற்றுவதில் தவறில்லை. நீலக்குறிஞ்சியின் பூத்தலைக் காண்பது, இயற்கையின் மீதான காதலையும் அக்கறையையும் மக்களிடையே அதிகரிக்கும். இயற்கையின் மீதான அக்கறை அதிகரிப்பது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும். இன்று நீலக்குறிஞ்சியைக் காண்பதற்கும் அது வளர்ந்துள்ள பகுதிகளுக்குச் செல்வதற்கும் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாகனங்களில் செல்ல முடியாது; மலை மீது நடந்தே செல்ல வேண்டும்; மலர்களுக்கு மிக அருகில் செல்லக் கூடாது; மலர்களைப் பறிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட நெறிமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால், இவை மட்டும் போதாது. நீலக்குறிஞ்சியின் அழகை ரசிக்க வருபவர்களிடம், அந்த அழகுக்குப் பின் இருக்கும் அறிவியலையும், அதன் சிறப்புகளையும் விளக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குத் தேவைப்படும் பதாகைகள், விளக்கக்காட்சிகளை அரசு நிறுவவேண்டும். அழகின் உண்மையான மதிப்பை உணர்ந்தால்தானே, அதை முறையாகப் பராமரித்துக் காக்க வேண்டும் என்கிற உணர்வு மக்களின் மனங்களில் இயல்பாகக் குடியேறும். - முகமது ஹுசைன், mohamed.hushain@hindutamil.co.in