

வங்கிகளுக்கு எல்லாம் வங்கி என்றழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி 610 உதவியாளர் பணியிடங்களை (சென்னை அலுவலகத்தில் மட்டும் 25 காலியிடம்) நேரடியாக நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேவையான தகுதி
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் தேவை. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் என்றால் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். கல்வித் தகுதியுடன் கணினி அறிவு (Word processing on PC) அவசியம். வயது வரம்பு 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
என்ன கேட்பார்கள்?
தகுதியுள்ள நபர்கள் எழுத்துத் தேர்வு (முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு) மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் ரீசனிங், பொது ஆங்கிலம், கணிதம் ஆகிய பகுதிகளில் (மெயின் தேர்வில் கூடுதலாகப் பொது அறிவு, கணினி அறிவு) இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தனித் தனியே குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க வேண்டும். தேர்வில், தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு.
முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு இரண்டுமே ஆன்லைனில்தான் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 23, 24-ம் தேதிகளிலும் மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரியிலும் நடைபெறும். உரிய கல்வித் தகுதியும், வயது வரம்புத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை (www.rbi.org.in) பயன்படுத்தி ஆன்லைனில் நவம்பர் மாதம் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
உதவியாளர் பணிக்குச் சம்பளம் ரூ.32 ஆயிரத்துக்கு மேல் கிடைக்கும். அதோடு ஏராளமான சலுகைகளையும் பெறலாம். உதவியாளர் பணியில் சேர்ந்த பிறகு பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகள் எழுதி உயர் பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டு. இது தொடர்பான கூடுதல் விவரங்களை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.