Last Updated : 22 Nov, 2016 11:44 AM

 

Published : 22 Nov 2016 11:44 AM
Last Updated : 22 Nov 2016 11:44 AM

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்-23: நண்பர்களின் ஊக்கத்தால் ஐ.பி.எஸ். ஆனேன்!

முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ். ஆனவர் பி. தினேஷ்குமார். 2009 பேட்ச்சில் தேர்வாகி உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலிகர், ஆக்ரா, ஜான்சி, லக்னோ, கான்பூர் எட்டவாவில் பணியாற்றிய பின் கன்னோஜ் மாவட்டச் சிறப்புக் காவல்துறைக் கண்காணிப்பாளராக உள்ளார்.

எட்டாக் கனி அல்ல!

சேலம் மாவட்டம் சின்னத் தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். பெரிய வாய்ப்பு வசதிகள் அற்ற கிராமச் சூழல் என்பதால் வெவ்வேறு ஊர்களில் பள்ளிப் படிப்பை முடித்துக் கோவை அரசு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். படிப்பை விடவும் விளையாட்டில் அதிகப்படியான ஆர்வம் காட்டியவர் பல்கலைக்கழகத்தின் ஹாக்கி விளையாட்டு வீரராக வலம்வந்தார். ஒரு கட்டத்தில் தீவிரமாக முயற்சி செய்து யூ.பி.எஸ்.சி. தேர்வில் வெல்ல வேண்டும் என்கிற உந்துதலை ஒரு சம்பவம் உண்டாக்கியது.

“பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு முடிவடையும்போது நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில், எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் என்னவாகப் போகிறோம் என்கிற கேள்வி எழுந்தது. நான் மேடை ஏறியதும் எல்லோரும் ஏளனமாகச் சிரித்தார்கள். ஹாக்கி தவிர எதிலும் ஆர்வம் காட்டாமல் ஊர் சுற்றித் திரிந்தவனுக்கு லட்சியமா என்று சொல்லாமல் சொன்னது அவர்களுடைய சிரிப்பு. இதனால், கோபமும் அவமான உணர்ச்சியும் கொப்பளிக்க, ‘எல்லோருடைய லட்சியமாகவும் இருக்கும் ஒன்றை நான் பெறுவேன்’ என்று பேசிவிட்டு இறங்கினேன். அதன் பிறகு யோசித்தபோது, ஒரு முறை எங்கள் பல்கலைக்கழகத்தில் சங்கர் ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடமியின் சங்கர் பேசியது நினைவுக்கு வந்தது. அதற்குப் பிறகுதான் யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்தேன்” என்கிறார் தினேஷ்குமார்.

அதனை அடுத்து சங்கரைச் சந்தித்து ஆலோசனை பெற்று வேளாண்மை, புவியியலை விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்தார். புவியியலுக்கு மட்டும் சங்கர் அகாடமியில் பயிற்சி பெற்றார். வேளாண்மை பாடத்துக்கு அவருடைய உ.பி. பேட்ச்மேட்டான முனிராஜ் மிகவும் உதவினார். சென்னைக்கு வந்த பிறகும் படிக்காமல் திசை திரும்பிய காலகட்டத்தில் தினேஷின் விடுதி அறையில் தங்கியிருந்த நண்பர் கந்தசாமி நல்வழிப்படுத்தி ஊக்கப்படுத்தினார். அதனை அடுத்து, யூ.பி.எஸ்.சி.க்காக முயன்றுகொண்டிருந்த அரவிந்தன் ஐ.ஏ.எஸ்., தயானந்தன் ஐ.ஆர்.எஸ்., சேவியர் ஐ.பி.எஸ். ஆகியோர் ஆக்கத்துடன் உதவினர். இவர்களுடைய தன்னலமற்ற நட்பினாலும் சிறப்பான வழிகாட்டுதலாலும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார்.

எப்படித் தயாரானேன்!

பயிற்சியின்போது அடிக்கடி மாதிரித் தேர்வு எழுதுவது, அதன் விடைத்தாள்களைத் திருத்தித் தவறுகளைக் கண்டுபிடித்துச் சரிசெய்வது எனத் தீவிரமாகத் தயாரானார். இரண்டு எழுத்துத் தேர்வுகளையும் வென்ற பிறகு, நேர்முகத் தேர்வுக்காக சைலேந்தர் பாபுவிடம் பயிற்சி பெற்றார். நேர்முகத் தேர்வில் அவருடைய விருப்பமான விளையாட்டான ஹாக்கி, விவசாயம் குறித்துக் கேள்விகள் பல கேட்கப்பட்டன.

கல்வி வசதி இல்லாத கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் தன்னைப் போலவே பின்தங்கிய சூழலிலிருந்து வரும் மக்களுக்கு உதவத் தொடர்ந்து முயற்சிக்கிறார் தினேஷ்குமார். ஆக்ராவில் ஏ.எஸ்.பி.யாக வேலைபார்த்தபோது ஒரு ஏழைக் குடும்பத்து ஐந்து வயது குழந்தையைச் சம்பல் பகுதியின் கொள்ளையர்கள் கடத்திவிட்டனர். அவர்கள் கேட்ட 5 லட்சம் ரூபாய் பணயத்தொகை இல்லாத நிலையில் அக்குழந்தையின் பெற்றோர் இவரிடம் புகார் கொடுத்தார்கள்.

இதில் குழந்தையை மீட்டதுடன் அந்தக் கும்பலையும் ராஜஸ்தான் எல்லையில் கைது செய்தார். இதுபோல, ஆக்ராவில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட கடத்தல் சம்பவங்களில் அனைவரையும் உயிருடன் மீட்டிருக்கிறார். தற்போது சில வாரங்களுக்கு முன்னால் கன்னோஜில் தன் சித்தப்பாவாலேயே கடத்தப்பட்ட 3 வயது குழந்தையைக் காப்பாற்றினார் இந்தத் துடிப்பான தமிழர்.

புதியவர்களுக்கான யோசனை

கடினமாக உழைத்தால் கான்வென்ட் பள்ளியில் படித்த மாணவர்களைப் போலவே நாமும் சரளமான ஆங்கிலத்தில் பேச முடியும். நம்மால் முடியுமா எனப் பயப்படாமல் எடுத்த லட்சியத்தை நிறைவேற்றத் திட்டமிட்டு உழைத்தால் வெற்றி உறுதி. இதற்கு நல்ல நண்பர்கள் மிகவும் முக்கியம். நாம் பயிலும் பயிற்சி நிலையங்கள் காட்டும் வழிகாட்டுதலைச் சரியாகப் புரிந்து கொண்டு அதன்படி தேவையான நூல்களைப் படித்தாலே போதுமானது. உண்மையில் வெற்றிக்கும் நமக்கும் உள்ள தூரம் மிகவும் குறைவு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x