Last Updated : 18 Nov, 2016 10:48 AM

 

Published : 18 Nov 2016 10:48 AM
Last Updated : 18 Nov 2016 10:48 AM

இது ‘மாற்று’ ஃபேஷன் ஷோ!

அந்த அரங்கினுள் ஜூலி ராட்ரிக்யூஸ் ஒய்யாரமாய் நடந்து வந்து சுழன்று நின்றபோது பார்வையாளர்கள் கண் இமைக்க மறந்துதான் போனார்கள். இரண்டு கால்கள் உடையவர்களே ஃபேஷன் ஷோக்களில் தடுமாறும்போது, பிறக்கும்போதே கால்களின்றி பிறந்த ஜூலி இயந்திரக்காலில் மயில்போன்று நடந்து வந்தது, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கொலம்பியாவின் பிரபல ஃபேஷன் டிசைனர் குயோ டி, ஃபேஷன் ஷோவின் காலங்காலமாகத் தொடர்ந்து வரும் வழக்கங்களை மாற்றி நிகழ்ச்சி நடத்துபவர். அதன் தொடர்ச்சியாக, ‘அழகுப் புயல்களின் அணிவகுப்பு… ஆடைகளின் தொகுப்பு’ என்ற வழக்கத்தை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஃபேஷன் ஷோவைக் கடந்த வாரம் நடத்தியிருக்கிறார். இந்த ‘வாக்வே இன்க்ளூஷன் ஃபேஷன் ஷோ’வில், செயற்கைக் கை, கால்கள் பொருத்திய மாற்றுத் திறனுடையோர், நிறமிக் குறைபாடு, அடர்த்தியான நிறமுடைய ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள், ஆண், பெண் தன்பாலின உறவாளர்கள் என வித்தியாசமான மாடல்கள் மேடையை வலம் வர ஃபேஷன் உலகம் சற்று நெகிழ்ந்துதான் போனது. இயந்திரக் கை, கால்கள் பொருத்தப்பட்டவர்கள் மேடையை வலம் வர பார்வையாளர்கள் உற்சாக விசில் எழுப்ப, படு உற்சாகமாய் மாறிப்போனது கலிபோர்னியாவின் காலி நகரம்.

உலகம் முழுவதும் வித்தியாசமான ஃபேஷன் ஷோக்கள் பரவலாக நடத்தப்பட்டு வரும் நிலையில் மாற்றுத் திறனாளிகள், மாற்றுப்பாலினத்தவர், மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கப் பழங்குடியின மக்கள் எனச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வர்களுக்கான மரியாதையைப் பெற்றுத்தருவதே இந்த நிகழ்வின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கனவுகளும், ஆசைகளும் இருந்தாலும், தனக்கான கூட்டை விட்டு வெளியே வரத் தயங்கும் இவர்களுக்கான ஒரு வெளி ஏற்படுத்தித் தருவது ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றமாகத்தான் ஃபேஷன் உலகில் பார்க்கப்படுகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x