Last Updated : 08 Nov, 2016 10:35 AM

 

Published : 08 Nov 2016 10:35 AM
Last Updated : 08 Nov 2016 10:35 AM

ஆங்கிலம் அறிவோமே - 133: முதலில் வந்தால் முதல் உரிமை

கேட்டாரே ஒரு கேள்வி

“செருப்பு பிய்ந்துவிடும்” என்று ஒரு பெண் கோபமாகக் கூறுவதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?

“Witch என்றால் சூனியக்காரக் கிழவி என்று கூறுகிறோம். ஆண்களோ இளம் பெண்களோ சூனியம் வைக்க மாட்டார்களா?”

கிழவி என்றல்ல. சூனியம் வைக்கும் எந்தப் பெண்ணையும் Witch என்றுதான் சொல்வர்கள். அது ஆணாக இருந்தால் Wizard. ஆனால் Witch என்பதை எதிர்மறை அர்த்தத்தில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். Wizard என்பதை மந்திர தந்திர சக்தி கொண்டவர் என்ற எதிர்மறையல்லாத அர்த்தத்திலும் பயன்படுத்துகிறார்கள். A financial wizard என்றால் நிதிப் பிரிவில் அவர் கில்லாடி என்று அர்த்தம்.



“என் டி.வி. repair ஆயிடுச்சு என்று ஒருவர் கூறினால் அவர் டி.வி. கெட்டுப்போய்விட்டது என்று அர்த்தமா? சரியாகிவிட்டது என்று அர்த்தமா?” என்ற ஒரு நண்பரின் கேள்வி இயல்பானதுதான். கிராமத்தில் இட்லிக் கடை ஒன்றுக்குச் சென்றபோது ‘’இட்லி ஆயிடுச்சு” என்றார் அங்கிருந்த பாட்டி. ஆஹா இட்லி தயாராகிவிட்டது என்று ஆர்வத்துடன் உள்ளே நுழைய, பிறகுதான் இட்லிகளெல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது புரிந்தது.

வழக்கத்தில் கெட்டுப் போய்விட்டதைத்தான் ‘ரிப்பேர்’ ஆகிவிட்டதாகக் குறிப்பிடுகிறோம். ஆனால் அது தவறு.

Pair என்றால் இணைந்திருப்பது. Re-pair என்றால் (இடையில் பிரிந்து) மீண்டும் இணைந்துவிட்டது என்ற அர்த்தம். அதாவது சரி செய்யப்பட்டுவிட்டது என்பதுதான் பொருள்.

Under repair என்றால் சரி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற அர்த்தம். Beyond repair என்றால் சரி செய்ய முடியாத அளவுக்குப் பாதிப்பு என்று பொருள்.



‘First come first served’ பற்றி வாசகர் ஒருவர் சந்தேகம் எழுப்பியிருந்தார். என்ன காரணத்தினாலோ நான் படித்த ஒரு நகைச்சுவை எனக்கு நினைவுக்கு வருகிறது.

பிரசவ வார்டுக்கு வெளியே சில ஆண்கள் தவிப்புடன் காத்திருந்தனர். அப்போது உள்ளிருந்து வெளியே வந்த நர்ஸ் காத்திருந்த ஆண்களில் ஒருவரைப் பார்த்து “உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது” என்றார். அருகிலிருந்த மற்றொருவருக்குக் கடும் கோபம் “சிஸ்டர் இது அநியாயம். நான் அவருக்கு முன்னதாகவே வந்து இங்கு காத்திருக்கிறேன்” என்றாராம். அதானே, first come first served இல்லையென்றால் எப்படி?!

இப்போது வாசகர் குறிப்பிட்டுள்ள first come, first served பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். எந்தவித விருப்பு வெறுப்புமில்லாமல் வாடிக்கையாளரின் தேவைகள் அவர்கள் வந்த வரிசையில் நிறைவேற்றப்படும் என்பதை ‘First come first served’ என்று குறிப்பிடுகிறோம்.

சிலர் இதை First come, first serve என்று எழுதுகிறார்கள். இது தவறு. ஏனென்றால் come என்பது past participle ஆக இங்கு பயன்படுகிறது. அதாவது The first to have come is the first to be served என்பதுதான் இதற்குப் பொருள்.



கூப்பிடு தூரம் என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?

மிகவும் அருகில் என்பதை ‘a stone’s throw’ என்று குறிப்பிடலாம். The house is just a stone’s throw from the bus stand.

“Is your office far from here?”, “No, it is only a stone’s throwaway”.

Throwaway என்றால் பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படுகிற என்று அர்த்தம். பெரியவர்கள் அலுத்துக் கொள்வதைக் கேட்டிருக்கலாம். “அந்தக் காலத்திலே ஒரு இங்க் பேனா வாங்கினால் ஆயுசுக்கும் பயன்படுத்துவோம். இப்பல்லாம் கம்ப்யூட்டர், ஃபோன் எதை வாங்கினாலும் இரண்டு வருடத்துக்கு ஒரு முறை மாத்திகிட்டிருக்காங்க”. என்ன செய்ய, We live in a throwaway society.

Throwaway comment அல்லது throwaway remark என்றால் யோசிக்காமல் கூறப்படுவது அல்லது சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லாத கருத்து அல்லது பேச்சு என்று அர்த்தம்.



இந்தப் பகுதியில் கேட்டாரே ஒரு கேள்வி தொடர்பான நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. ஓர் அப்பாவி இப்படிக் கூறினார். “அந்தப் பெண்ணுக்கு பாவம் காது கேட்காது என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். I love you என்று அவளிடம் சொன்னேன். பதிலுக்கு அவள் “இன்னிக்குத்தான் புதுசா செருப்பு வாங்கினேன்” என்கிறாள்.

சில சமயம் மொழியைவிட body language அதிகமாக உணர்த்தும். கோபத்துடன் விழித்துப் பார்த்தோ, காலணியைக் கையில் எடுத்தோ, வசிக்கிற காலனியைத் துணைக்கு அழைத்தோ காமுகர்களை எதிர் கொள்ளலாம்.

இருந்தாலும் ஆங்கில மொழிபெயர்ப்பை இந்தப் பகுதியில் சொல்லாமல் விடலாமா?

“I will slipper you” என்பது பரவாயில்லை என்று படுகிறது (slippery என்பது வேறு department - வழுக்குத் தன்மை கொண்ட என்று அதற்கு அர்த்தம்).



போட்டியில் கேட்டுவிட்டால்

_____ are intelligent.

a)Educated

b)The educated

c)I and you

d)All the peoples

இவற்றில் எது சரி?

I and you என்று வரக் கூடாது. You and I என்பதுதான் சரி. ஏனென்றால் I என்பது இதுபோன்ற பயன்பாடுகளில் இறுதியில்தான் வர வேண்டும். மூன்றாம் நபரும் சேர்க்கப்படும்போது You, he and I என்பதுபோல் வர வேண்டும்.

Pupil (மாணவன்) என்பதற்கான பன்மை pupils. ஆனால் மக்கள் என்பதைக் குறிக்கும் people என்பதே பன்மை வார்த்தைதான். எனவே peoples என்று குறிப்பிடக் கூடாது.

இந்த இரண்டும் புரிந்தவர்களுக்குக்கூட முதல் இரண்டில் எதைப் பயன்படுத்துவது என்பதில் ஒரு சிறிய சந்தேகம் வந்திருக்கலாம். கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் ‘educated’ என்ற வார்த்தை படித்த என்பதைக் குறிக்கவில்லை. ‘படித்த மக்கள்’ என்பதையே குறிக்கிறது. அதாவது Educated people என்று கூறுவது சரி. ஆனால் இங்கே educated என்ற adjective ஒரு noun போலப் பயன்படுகிறது. எனவே அதற்கு முன்னால் the சேர்க்க வேண்டும்.

The rich are affluent என்பதுபோல The educated are intelligent என்பதே சரியான தேர்வு.



சிப்ஸ்

# Uxoricide என்றால் என்ன அர்த்தம்?

தன் மனைவியை ஒருவன் கொன்றுவிட்டால் அதை இப்படிக் குறிப்பிடுவதுண்டு. லத்தீன் மொழியில் Uxor என்றால் மனைவி.

# Overpass என்பதற்கும் Passover என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Passover என்பது யூதர்களின் வசந்தத் திருவிழா. Overpass என்பது நாம் மேம்பாலம் (Flyover) என்று அழைக்கிறோமே அது.

# It is Kamesh who is the trouble maker in this class என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். Kamesh என்பதிலிருந்து அந்த வாக்கியம் தொடங்கியிருக்கலாமே. It is எதற்கு?

அவை வலியுறுத்தும் சொற்கள். அதாவது காமேஷைத் தவிர வேறு யாரும் பிரச்சினைகள் உண்டாக்குவதில்லை. அவன் மட்டுமேதான் இதற்குக் காரணம்.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x