Last Updated : 05 Nov, 2016 01:13 PM

 

Published : 05 Nov 2016 01:13 PM
Last Updated : 05 Nov 2016 01:13 PM

சுவர் மூலைகளை இப்படியும் பயன் படுத்தலாம்!

வீட்டின் எந்தப் பகுதியையும் பயன்படுத்தாமல் விட்டுவைக்கத் தேவையில்லை. அதற்கான சிறந்த உதாரணம்தான் இப்போது பிரபலமாகிக் கொண்டிருக்கும் மூலை அலமாரிகள். சுவரின் மூலைகளில் வடிவமைக்கப்படும் இந்த அலமாரிகள் வீட்டில் பொருட்களைத் திறம்பட அடுக்கி வைக்கப் பெரியளவில் உதவுகின்றன. இந்த மூலை அலமாரிகளில் உங்களுடைய ரசனையை வெளிப்படுத்தும் பொருட்கள், சிறந்த ஒளிப்பட நினைவுகள் போன்றவற்றை வைத்து அலங்கரிக்கலாம்.

இந்த மூலை அலமாரிகளைச் சரியான விதத்தில் வடிவமைத்தால் அறையின் தோற்றத்தை விசாலமாகவும் பிரம்மாண்டமாகவும் மாற்ற முடியும். இந்த மூலை அலமாரிகள் இப்போது விதவிதமான வடிவமைப்புகளிலும் வண்ணங்களிலும் கிடைக்கின்றன. இந்த அலமாரிகளில் புத்தகங்கள், அலங்காரப் பொருட்கள், சிலைகள், குடும்ப ஒளிப்படங்கள், செடிகள் என எல்லாவிதமான பொருட்களையும் கலவையாக அடுக்கிவைக்கலாம்.

மரப்பெட்டிகள்

சுவரின் மூலைகளில் பொருத்துவதற்கு இப்போது அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்படுவது பெட்டி அலமாரிகள்தான் (Box Shelves). இந்தப் பெட்டி அலமாரிகளைச் சதுரம், செவ்வகம் என உங்களுக்குப் பிடித்த ஜியோமெட்ரிகல் வடிவத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ‘ஆன்லைன் ஷாப்பிங்’ தளங்களில் இந்தப் பெட்டி அலமாரிகள் விதவிதமான வண்ணங்களில் கிடைக்கின்றன.

குறுக்கு மறுக்காகவும் அடுக்கலாம்

‘ஜிக் ஜேக்’ (Zig Zag) மூலை அலமாரிகள் புதுமையாகப் பொருட்களை அடுக்க நினைப்பவர்களுக்கு ஏற்றத் தேர்வாக இருக்கும். இந்த அலமாரியில் குறுக்கு மறுக்காகப் பொருட்களை அடுக்கி வைத்திருப்பது அறைக்கு நவீனத் தோற்றத்தைக் கொடுக்கும்.

ஏற்றம் தரும் ஏணிகள்

சுவர் மூலைகளை வைப்பதற்காகப் பிரத்யேகமான வடிவமைப்புகளில் ஏணி வடிவமைப்பில் அலமாரிகள் கிடைக்கின்றன. பொருட்களை முன்னுரிமை கொடுத்து வரிசையாக அடுக்க நினைப்பவர்கள் இந்த அலமாரியைத் தேர்ந்தெடுக்கலாம்.

மிதக்கும் அலமாரிகள்

‘எல்’ வடிவ மிதக்கும் மர அலமாரிகள் பெரிய வீடுகளில் வடிவமைப்பதற்குச் சிறந்த தேர்வாக இருக்கும். நிறையப் பொருட்களை அடுக்க நினைப்பவர்கள், வீட்டுக்குப் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொடுக்க நினைப்பவர்கள் இந்த மிதக்கும் மர அலமாரிகளைச் சுவர் மூலைகளில் அமைக்கலாம்.

முக்கோண அலமாரிகள்

எளிமையான அலங்காரத்தை விரும்புபவர்கள் இந்த முக்கோண அலமாரியைச் சுவரின் மூலைகளில் பொருத்தலாம். இதுவும் மிதக்கும் அலமாரியைப் போலத்தான். இதைச் சுவர்களில் பொருத்துவது சுலபம். புதுமையான வண்ணங்களிலும் வடிமைப்பிலும் ‘ஆன்லைன் ஷாப்பிங்’ தளங்களில் இந்த அலமாரி கிடைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x