வெற்றிச் சொல்: இந்த ஆண்டின் சொல்!

வெற்றிச் சொல்: இந்த ஆண்டின் சொல்!
Updated on
2 min read

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் குழுவினர் ஆண்டுதோறும் ‘இந்த ஆண்டின் சொல்’ என்று ஒரு சொல்லைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். 2016-ன் சொல்லாக அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் சொல்லை ஆங்கிலம் அறிந்த இந்தியர்களும்கூட அநேகமாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த ஆண்டின் வெற்றியாளர் ‘Post-truth’ என்ற சொல்தான்.

“மக்களிடையே பொதுக் கருத்தை உருவாக்குவதில் உண்மைத் தகவல்களைவிட உணர்ச்சியும் தனிப்பட்ட நம்பிக்கையும் அதிகச் செல்வாக்கு வகிக்கும் சூழலுக்குத் தொடர்பான அல்லது அந்தச் சூழலைச் சுட்டிக்காட்டும் விதத்திலான” என்று இந்தச் சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி விளக்கம் கொடுத்திருக்கிறது. இலக்கண வகைப்படி இந்தச் சொல் ஒரு பெயரடை (Adjective).

விருது பெற என்ன தகுதி?

சொல் தேர்வுக்கு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. தேர்ந்தெடுக்கும் சொல் கடந்த ஆண்டின் ஆன்மாவை, போக்கைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும்; ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் ஏற்கெனவே அந்தச் சொல் இடம்பெற்றிருக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். அதே நேரத்தில் ‘இந்த ஆண்டின் சொல்’ லாகத் தேர்ந்தெடுக்கப்படும் சொல் புதிய சொல்லாக இருந்தால் அது எதிர்காலத்தில் அகராதியில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான உத்தரவாதமும் இல்லை;

தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு நிலைபெற்றால் மட்டுமே அந்தச் சொல் அகராதியில் இடம்பெறும். நபர்கள், இடங்கள், நிகழ்வுகளின் பெயர்கள் தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவதில்லை. அதேபோல், ‘இந்த ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல்’லும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அந்த அளவுகோல்படி I, you, and, of போன்ற சொற்களே இந்த விருதை ஆண்டுதோறும் பெறும். பயன்பாட்டில் விகிதாச்சாரப்படி பல மடங்கு உயர்ந்துகொண்டிருக்கும் ஒரு சொல்தான் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். இப்படிப் பல விதிமுறைகள்.

‘இந்த ஆண்டின் சொல்’ லுக்கான வாய்ப்புள்ள சொற்கள் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின் சொல்வங்கியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு மாதமும் செய்தித்தாள்கள், புத்தகங்கள், வலைப்பதிவுகள், பேச்சுகளின் எழுத்து வடிவங்கள் ஆகியவற்றிலிருந்து 15 கோடி சொற்களை ஆக்ஸ்ஃபோர்டு தனது சொல்வங்கியின் உண்டியலில் போடுகிறது. அந்தச் சொல்வங்கியை மென்பொருள் துணையோடு அகராதி நிபுணர்கள் ஆராய்ந்து, புழக்கத்தில் அதிகரித்துவரும் சொற்களைக் கண்டுபிடிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு ஒரு இறுதிப் பட்டியல் தயாரிப்பார்கள். சொல்தேர்வுக்கான பரிந்துரைகளை ஆக்ஸ்ஃபோர்டு சமூக ஊடகங்களின் வழியாகவும் ஏற்கிறது.

அமெரிக்காவும் பிரிட்டனும்

இப்படி எல்லாவற்றையும் பரிசீலித்துதான் ‘இந்த ஆண்டின் சொல்’ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ‘Post-truth’ என்ற சொல்லின் பயன்பாடு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 2000% அதிகரித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகியது, அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றின் பின்னணியில் இந்தச் சொல்லின் புழக்கம் அதிகரித்திருக்கிறது. உணர்ச்சியைத் தூண்டிவிட்டே மக்களிடம் ஒரு பொதுக் கருத்தை உருவாக்கியதன் விளைவுகளை இந்த இரண்டு நிகழ்வுகளிலும் உலகம் கண்டது. இதன் பின்னணியில் சமூக ஊடகத்தின் பங்கும் நிறைய இருக்கிறது. இந்தச் சொல்லின் வெற்றியில் டொனால்டு ட்ரம்ப்புக்கு முக்கியமான பங்கு இருக்கிறதல்லவா!

முதல் முறை

‘Post-truth’ என்ற சொல்லை முதன்முதலில் தற்போதைய அர்த்தத்தில் பயன்படுத்தியவர் செர்பிய-அமெரிக்கரும் நாடக ஆசிரியருமான ஸ்டீவ் டெஸிச். 1992-ல் எழுதிய கட்டுரையொன்றில் தான் இந்தச் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார்.

‘Post-truth’ என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் ஒரு சொல்லை உருவாக்கிப்பார்க்கலாமா? Post-modernism (பின்-நவீனத்துவம்), Post-colonialism (பின்-காலனியம்), post-war (போருக்குப் பிந்தைய), post-match (ஆட்டம் முடிந்த பின்) போன்ற சொற்களில் உள்ளதுபோல் ‘Post-truth’ என்ற சொல்லில் உள்ள ‘post’ என்ற சொல்லுக்கு ‘பிந்தைய’, ‘பின்’ போன்ற அர்த்தங்கள் கிடையாது. குறிப்பிடப்படும் ஒரு விஷயம் தனது முக்கியத்துவத்தையும் பொருத்தப்பாட்டையும் இழந்துபோகும் சூழலைக் குறிக்கும் வகையில் இந்த சொல்லில் உள்ள ‘post’ பயன்படுத்தப்படுகிறது. ஆக, இதற்கு இணையான ஒரு சொல்லாக ‘உண்மை கடந்த’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது. வாசகர்கள் நீங்களும் ‘post-truth’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைக்கலாம்.

‘இந்த ஆண்டின் சொல்’ தேர்வில் சில ஆண்டுகள் அமெரிக்க, இங்கிலாந்து தரவுகளின் படி அந்தந்த தேசங்களுக்கேற்ப வேறுவேறு சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. post-truth என்ற சொல் ஏக மனதாக இரு நாடுகளாலும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. முந்தைய ஆண்டுகளின் சொற்களில் சில: 2004 Chav (US/UK), 2005 - Sudoku (US)/ Podcast (UK) (2005), 2006 - Bovvered (US)/ Carbon-neutral (UK), 2007 - Carbon footprint (US)/ Locavore (UK), 2008 - Credit crunch (US)/ Hypermiling (UK), 2009 Simples (US)/ Unfriend (UK), 2010 - Big society (US)/ Refudiate (UK), 2011 - Squeezed middle (US/UK), 2012 Omnishambles (US)/ GIF (verb- UK), 2013 Selfie (US/ UK), 2014 Vape (US/UK), ஆனால் 2015-ல் இந்த விருதை முதன்முறையாக ‘ஆனந்தக் கண்ணீர் விடும் முகம்’ என்கிற எமோஜி பெற்றது!

இந்த ஆண்டின் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்த மற்ற சொற்கள்: adulting, alt-right, Brexiteer, chatbot, coulrophobia, glass cliff, hygge, Latinx, woke.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in