உலகை மாற்றிய நியூட்டன்

உலகை மாற்றிய நியூட்டன்
Updated on
2 min read

உலகில் இதுவரை தோன்றிய விஞ்ஞானிகளிலேயே மனித குலத்தின் மீது மிகுந்த தாக்கம் செலுத்திய விஞ்ஞானி என்றால், அவர் ஐசக் நியூட்டனாகத்தான் இருக்க முடியும்.

தனிமை வாழ்க்கை

இங்கிலாந்தில் உள்ள லிகோன்ஷயரில் வூல்ஸ்த்ரோப் என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். நியூட்டன் பிறப்பதற்கு முன்பே அவரது அப்பா இறந்துவிட்டார். நியூட்டனுக்கு மூன்று வயதாகும்போது அவரது அம்மா இன்னொரு திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். அதனால், நியூட்டன் பெரும்பாலும் தனது அம்மா வழித் தாத்தாவுடனேயே வளர்ந்தார். 12 வயது முதல் 17 வயது வரை கிராந்தமில் உள்ள தி கிங்க்ஸ் பள்ளியில் படித்தார்.

இதற்கிடையே இவரது அம்மா தனது இரண்டாவது கணவரையும் இழந்தார். அவர், நியூட்டனின் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தினார். நியூட்டனை விவசாயியாக்க விரும்பினார். அதனால் அவரை விவசாயப்பணிகளில் ஈடுபடுத்தினார். ஆனால் அவரது ஆசிரியர் நியூட்டனை விடவில்லை.அவரின் வற்புறுத்தலின் பேரில் நியூட்டன் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். முதல் முறை பள்ளியில் படித்தபோது மிகச் சுமாரான மாணவராகவே நியூட்டன் இருந்தார்.ஆனால் இரண்டாவது முறை சேர்க்கப்பட்டபோது மிகச் சிறந்த மாணவராக ஆகிவிட்டார். 1661- ல் கேம்பிரிட்ஜில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

அன்றைய உலகம்

நியூட்டன் பிறந்த பதினேழாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி பெரும் அறிவியல் கொந்தளிப்பு நிலவிய காலகட்டம். அந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது.அது வானவியல் ஆய்வில் பெரும் புரட்சியை ஏற்படுத்த ஆரம்பித்திருந்தது. அரிஸ்டாட்டிலின் புவிமையக் கோட்பாட்டையும் தாண்டி வானிவியல் ஆய்வை மேற்கொள்ள அறிஞர்கள் முனைந்திருந்தனர்.

கலிலியோ அந்தத் திசையில் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தார். ட்ரினிட்டி கல்லூரியில் பாடங்கள் பெரிதும் அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை ஒட்டியே அமைந்திருந்தாலும் நியூட்டனின் ஆர்வமெல்லாம் கோபர்நிகஸ், கலிலியோ, கெப்ளர் ஆகியோர் உருவாக்கிய நவீன கருத்துக்களின் மீதே இருந்தது.

1965 ஆகஸ்டில் நியூட்டன் கேம்பிரிட்ஜ் பட்டத்தைப் பெற்றார்.அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவியதால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகள் தனது இல்லத்திலேயே தீவிரமாகப் படித்துவந்தார் நியூட்டன். பின்னாளில் கால்குலஸ், ஆப்டிக்ஸ், புவியீர்ப்பு விதி ஆகியவை குறித்த அவரது ஆய்வுகளுக்கு இந்தக் காலகட்டமே மிக முக்கியமானதாக இருந்தது.

ஒளியின் கோட்பாடு

தமது கோட்பாடுகளில் பெரும்பாலானவற்றை அவர் 1669-லிலேயே வகுத்துவிட்டார். ஆனாலும் அவற்றில் பெரும்பாலானவை பல ஆண்டுகளுக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. ஒளியின் இயல்பு பற்றிய கோட்பாடே முதன்முதலாக வெளியானது.

சாதாரண வெண்ணிற ஒளியானது, வானவில்லின் வண்ணங்கள் அனைத்தும் அடங்கிய கலவை என்பதை இவர் அறிவித்தார். 1668- ல் முதல் பிரதிபலிப்புத் தொலைநோக்கியையும் கண்டுபிடித்தார் நியூட்டன். இந்த வகைத் தொலைநோக்கிதான், பெரும்பாலான வானியல் ஆராய்ச்சிக் கூடங்களில் தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

ஒளியியலில் மகத்தான புரட்சியை ஏற்படுத்திய நியூட்டன், தூய கணிதத்திலும் எந்திரவியலிலும் பெரும் சாதனைகளைப் படைத்தார்.

எந்திரவியலைப் பொறுத்தவரை, பள்ளி மாணவர்களுக்கே நியூட்டனின் விதிகள் மிகவும் அறிமுகமானவை. ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாவது விதியைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் எந்த மாணவரும் சொல்லிவிடுவார்.

நியூட்டனின் விதிகள் ஏராளமான அறிவியல் மற்றும் பொறியியல் சிக்கல்களுக்குத் தீர்வு காணப் பயன்படுத்தப்பட்டன. அவருடைய ஆயுட்காலத்திலேயே வானியல் துறையில் அவரது விதிகள் பயன்படுத்தப்பட்டு அதிசயமான முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

1687-ல் அவரது தலைசிறந்த நூலான இயற்கைத் தத்துவத்தின் கணித விதிகள் வெளிவந்தது. இந்த நூலில்தான் இயக்க விதிகள் மற்றும் புவியீர்ப்பு விசை குறித்த கருத்துக்களை வெளியிட்டார் நியூட்டன். அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் விஞ்ஞான ஆராய்ச்சியில் இந்த நூல் மிக முக்கியமான பங்கை வகித்தது. அடுத்து வந்த தொழிற்புரட்சியில் ஏற்பட்ட பல முன்னேற்றங்களுக்கு இந்த விதிகளே காரணம்.

1727-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி லண்டனில் தூக்கத்திலேயே நியூட்டன் காலமானார். நியூட்டனின் மறைவுக்குப் பிறகு அவரது உடலை ஆராய்ந்தபோது, அவரது உடலில் பெருமளவு பாதரசம் இருந்தது. ரசவாதத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடும், அதற்காக அவர் பயன்படுத்திய பாதரசமுமே இதற்குக் காரணம். பிற்கால வாழ்வில் அவரது தாறுமாறான மனநிலைக்கும் இதுவே காரணம். நியூட்டன் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

நியூட்டனும் ஆப்பிளும்

புவியீர்ப்பு விசையைப் பற்றி விளக்கும்போது மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்தே அதுபற்றிய கருத்துகளை உருவாக்கியதாக நியூட்டனே பல முறை சொல்லியிருக்கிரார். ஆனால், ஆப்பிள் விழுந்த ஒரே ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே நியூட்டன் புவியீர்ப்பு விசை பற்றிய கருத்துக்களை உருவாக்கிவிடவில்லை. பல்வேறு ஆராய்ச்சிகள், சோதனைகள் மூலமாக அவர் அந்த முடிவுக்கு வந்தார்.

நியூட்டனுடன் சம்பந்தப்படுத்திக் கூறப்படும் ஆப்பிள் மரத்தின் வழி வந்த மரம் இன்னமும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in