Last Updated : 18 Nov, 2016 10:43 AM

 

Published : 18 Nov 2016 10:43 AM
Last Updated : 18 Nov 2016 10:43 AM

அலையோடு விளையாடு! 9 - துரத்தி வந்த பருவமழை

போலாவரத்துக்கு முன்பே வீரபத்திர சாமி கோயிலுக்கு வருமாறு நண்பர்கள் அழைத்தார்கள். நீங்கள் செல்லுங்கள் என்ற கூறிவிட்டு, காலம் கடத்தாமல் கோதாவரி அன்னையை வணங்கி, பேட்லிங் பலகையில் ஏறித் துடுப்பு போட ஆரம்பித்தேன். கோயிலுக்குப் போய்விட்டுச் சீக்கிரமே திரும்பி வந்து பின்தொடருமாறு நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். துடுப்பைத் தலைகீழே காண்பித்தால் ஆபத்து, இடது பக்கம் காட்டினால் வீடியோ பதிவு செய்ய வேண்டும், வலது பக்கம் காண்பித்தால் ஒளிப்படம் எடுக்க வேண்டுமென முன்கூட்டியே நான் தெரிவிக்கும் சைகைகளுக்கான அர்த்தத்தை அவர்களுக்குச் சொல்லியிருந்தேன்.

கைகொடுத்த கடல் அனுபவம்

மதியம் 12 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்தேன். போகும் பாதையில் எத்தனை வளைவுகள் இருக்கும்; சுழல்கள் வந்தால் அதை எப்படிக் கடந்து போவது; ஆழம் அதிகமாக இருந்தால் அலை கொஞ்சமாகவும் நீரோட்டம் அதிகமாகவும், ஆழம் குறைவாக உள்ள இடத்தில் அலை அதிகமாகவும் நீரோட்டம் குறைவாகவும் இருக்கும், வழியில் உள்ள நான்கு பாலங்களைக் கடந்து செல்வது எப்படி, கரையின் வலது, இடது பக்க நிலைகள் எப்படி என்பதைப் பற்றியெல்லாம் புறப்படுவதற்கு முன்பே திட்டமிட்டிருந்தேன்.

ஆற்றின் வலது பக்கம் வேகம் அதிகமாக இருந்தது. 10 நிமிடங்களில் மூன்று கிலோமீட்டர் தொலைவைக் கடந்தேன். எதிரில் பாலத்தின் மீது எரிவாயுக் குழாய் அமைக்கப்பட்டிருந்தது. பாலத்தின் அடியில் தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், ஓரத்தில் சென்றால் பேட்லிங் பலகையைத் தண்ணீரின் வேகம் தூக்கி அடித்துவிடும் என்பதைக் கணித்து நடுவில் சென்றேன். சுழல் வந்தால் அதன் வெளி விளிம்பின் வழியே கடந்தேன், இப்படியே ஒரு மணி நேரத்தில் 12 கி.மீ. தொலைவைக் கடந்தேன்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மூன்று நிமிடங்களுக்குத் துடுப்பு போடாமல் ஓய்வெடுத்து வாழைப்பழம், கடலை மிட்டாயைப் போன்று உடனடி சக்தி தரும் உணவைச் சாப்பிட்டேன். அப்போது உடல் உற்சாகம் பெறும். கடலில் பேட்லிங் செய்திருந்த அனுபவம், கோதாவரிப் பயணத்தில் கைகொடுத்தது. நதியின் அகலம் மிக அதிகமாக இருந்ததால் போகிற வழியில் உள்ள தடயங்களை மனதில் பதிவு செய்துகொண்டேன்.

ரத்தக்கட்டு ஏற்படுத்திய துடுப்பு

திடீரென்று தண்ணீரில் சலசலப்பு, நீர்க்குமிழிகள் தோன்றின. தொலைநோக்கியின் மூலம் கவனித்தேன். நான் பேட்லிங் செய்ய வசதியாகத் தாழ்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. ஐந்து கி.மீ. அகலத்தில் கோதாவரி ஆறு நான்காகப் பிரியும் இடம் அது. தொடர்ந்து செல்லவிருக்கும் வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம். ஏற்கெனவே, நான் பயணம் செய்திருந்த எருமை மாடுகளின் தீவு தெரிந்தது. அதைக் கடந்து வழியைத் தேர்ந்தெடுத்தேன். 20 கி.மீ. கடந்தால் ராஜமுந்திரி வந்துவிடும்.

அப்போது கருமேகங்கள் சூழத் தொடங்கின, பருவமழை மேகங்கள் மழை பொழியத் தொடங்குவதற்கு முன்னால் இடி இடித்தது. மழை பெய்ய ஆரம்பித்தால் சீக்கிரம் நிற்காது. வெள்ளமாக மாறினால் இன்னும் ஆபத்து. தொலைநோக்கியின் மூலம் பார்த்து, வேகமாகத் துடுப்பு போட்டேன். தொலைவில் பெய்த மழை நீர் நுரைநுரையாக வந்துகொண்டிருந்தது. கையில் ரத்தக்கட்டு ஏற்படும் அளவுக்குத் துடுப்பை வேகமாக வலித்துக் கொண்டிருந்தேன். ‘கோதாவரி அன்னையே என் பயணம் இனிதாக முடியத் துணை செய்ய வேண்டும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அப்போது பாலம் வரவே, அதைக் கடந்து, கைபேசி மூலம் உதவிக்கு வந்த படகைத் தொடர்புகொண்டேன். கோதாவரியின் மடியில் 32 கி.மீ. தொலைவை பேட்லிங்கில் வெற்றிகரமாகக் கடந்து முடித்திருந்தேன்.

பாதுகாப்புக்காகப் படகில் வந்த நண்பர்களுக்கு நன்றி சொல்வதற்குப் படகில் ஏறினேன். இந்தப் பயணத்தின்போது சாதனை செய்யும் வேகம், நதியின் பிரம்மாண்டம், வழியில் இருக்கும் ஆபத்து ஆகியவை ஏற்படுத்திய கவலைகளைத் தாண்டி அனுபவித்த ஆனந்தம், வியப்பு, திகில், பயம் - இப்படிப் பல்வேறு உணர்வுகள் மனதுக்குள் சுழற்றியடித்ததால் அன்று இரவு முழுக்கத் தூங்கவில்லை.



‘கேஞ்சஸ் எஸ்.யு.பி.’ பேட்லிங் பயணத்தில் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமான கான்பூரை ஒருவழியாகத் தாண்டிவிட்டோம். கங்கை நதியில் 760 கி.மீ. தொலைவைக் கடந்து பயணித்துக்கொண்டிருக்கிறோம். இந்தப் பயணத்தைப் பதிவு செய்ய டிஸ்கவரி சேனலின் வீடியோ குழு எங்களுடன் வந்துகொண்டிருக்கிறது.

கங்கையில் நிறைய பராஜ் உண்டு. பராஜ் என்பது பாசன வசதிக்காக ஆற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்துவிடும் இடம். இந்தப் பராஜ் நெருங்கும் பகுதிகளில் பேட்லிங் செய்ய முடியாது. கான்பூருக்கு முன்னதாக இருக்கும் பராஜை தாண்டி நாங்கள் பேட்லிங் செய்ய ஆரம்பித்தபோது உள்ளூர் மக்கள் 300, 400 பேர் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டார்கள். அதைப் பார்த்து, “பேட்லிங் செய்யக் கூடாது, வெளியே வாருங்கள்” என்று உள்ளூர் போலீஸ் கூறியது. பிறகு அவர்களிடம் எங்களுடைய அனுமதியைக் காட்டி விளக்கினோம்.

கான்பூரில் பாயும் கங்கை நதிக்குள் ஒரு பக்கம் கழிவு நீர், மற்றொரு பக்கம் தொழிற்சாலைக் கழிவுகள், குறிப்பாகத் தோல் ஆலைக் கழிவுகள் கலக்கப்படுகின்றன. வேதிக் கழிவுகள் கலப்பதால் தண்ணீரே தெரியாமல் ஆறு நுரைத்துப்போய்க் கிடக்கிறது. ஆற்றில் பேட்லிங் செய்வதே மோசமான அனுபவமாக இருந்தது. எங்களால் சுவாசிக்கவே முடியவில்லை.

துரதிருஷ்டம் என்னவென்றால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிலேயே உள்ளூர் மக்கள் குளிப்பதும் மீன் பிடிப்பதும்தான். கங்கை புனிதமான நதி, எவ்வளவு சீர்கெட்டாலும் அது தன்னைத் தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் என்று நம்புகிறார்கள். கோடை காலத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்குமாம்.

கழிவுகள் குறைவாகக் கலக்கும் புறநகர் பகுதிகள் வந்த பிறகு எதிர் நீரோட்டமும் ஆற்றின் மணலும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்தப்படுத்துகின்றன. நகர்ப் பகுதி ஆறுகள்தான் பெரும்பாலும் சீர்கெட்டிருக்கின்றன. கங்கையுடன் யமுனை கலக்கும் திரிவேணி சங்கமம் நோக்கி இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

கான்பூர் குப்பைக்கு நடுவே…

(அடுத்த வாரம்:வெள்ளக்காட்டில் ஒரு சேவை)
தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x