Published : 01 Nov 2016 12:03 PM
Last Updated : 01 Nov 2016 12:03 PM

வேலை வேண்டுமா? - தபால்காரர் ஆகலாம்

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் தபால்காரர், மெயில் கார்டு பணியில் 310 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எனினும், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியுள்ள நபர்கள் எழுத்துத் தேர்வு (Aptitude Test) அடிப்படையில் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர்.

மைனஸ் மதிப்பெண் இல்லை

‘அப்ஜெக்டிவ்’ முறையில் நடத்தப்படும் இத்தேர்வில் பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் மொழி ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் வீதம் மொத்தம் 100 வினாக்கள் இடம்பெற்றிருக்கும். மதிப்பெண் 100. கேள்விகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும். 2 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளைப் போன்று தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண் எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு பகுதியிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்ணை எடுக்க வேண்டியது அவசியம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 ஊர்களில் உள்ள மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

பதவி உயர்வு உண்டு

உரிய கல்வித் தகுதியும், வயதுத் தகுதியும் உடையவர்கள் www.dopchennai.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி நவம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப முறை, தேர்வு முறை, தேர்வுக்கான பாடத்திட்டம், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இந்த இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

பணிக்கு தேர்வுசெய்யப்படுவோர் தமிழ்நாடு வட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் தபால்காரராக பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு ஆரம்ப நிலையில் சம்பளம் ரூ.22 ஆயிரம் அளவுக்குக் கிடைக்கும். 3 ஆண்டு பணிக்குப் பின்னர் துறைத் தேர்வெழுதி அஞ்சலக உதவியாளர் (Postal Assistant), தபால் பிரிப்பு உதவியாளராக (Sorting Assitant) பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x