Published : 26 Nov 2016 09:41 AM
Last Updated : 26 Nov 2016 09:41 AM

இளைப்பாற ஒரு வெளி வேண்டும்

பொதுவாக வீடு என்றால் பின்வாசல் அல்லது முன்வாசல் வெளியையும் சேர்த்தது. பழைய வீடுகள் இம்மாதிரி சிறிய அளவிலாவது இடம் விட்டுத்தான் கட்டிடம் கட்டுவார்கள். ஆனால், இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் நம்முடைய வீடு என்பது அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறு சிறு அறைகளாக மாறிவிட்டது. இதில் எங்கு வெளி?

ஆனால், கட்டிட விதிமுறையின் படி இளைப்பாறுதலுக்குச் சிறு இடம் என்பது அவசியம். அடுக்குமாடிக் குடியிருப்பில் பால்கனிதான் அப்படியான இடம். பல விதமான வேலைகளுக்குப் பிறகு களைப்படைந்து வீட்டுக்குள் உழன்று வரும்போது சிறு புத்துணர்ச்சிக்காக பால்கனியில் வந்து நின்றால் கிடைக்கும் சுகமே தனி. ஒரு வீட்டின் பால்கனியைச் சிறப்பாக அமைத்தால் வீட்டுக்கு அது அருமையான சூழலைத் தரும். ஓரளவு இட வசதியைக் கொண்ட பால்கனியில் இனிய மாலையையும் காலையையும் சுகமாய்க் கழிக்கலாம். பாரம்பரியமான பால்கனிகளின் காலம் முடிந்துவிட்டது. இப்போது புதுவகையான பால்கனிகளை உருவாக்கும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

பால்கனி என இடம் ஒதுக்கிவிட்டு அதை முற்றிலும் சுவர் மூலம் மூடுவதைச் சட்டம்கூட அங்கீகரிப்பதில்லை. ஏனெனில், பால்கனி என்பது முழுமையாக மூடப்படாத அமைப்பு என்றே சட்டம் தெரிவிக்கிறது. ஏதேனும் ஒரு பகுதியை மூடியபடி பால்கனியை அமைக்கலாம். இப்படி அமைக்கும் முன்னர் அது கட்டிடத்தின் பாதுகாப்புக்கு உகந்ததா என்பதை நிபுணர்களுடன் ஆலோசித்துக்கொள்வது அவசியம்.

பால்கனியை எங்கு அமைக்கப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதை எப்படி அமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இயலும். வீட்டின் வரவேற்பறையை ஒட்டியோ அல்லது உணவருந்தும் அறையை ஒட்டியோ பால்கனியை அமைத்தீர்கள் எனில் அதில் நாற்காலிகள் போடுமளவுக்கு இடம் விட வேண்டும். நண்பர்களுடன் அமர்ந்து உரையாடும் இடமாக அதை உபயோகிக்கலாம். படுக்கையறையை ஒட்டிய பால்கனி என்றால் அது தனிப்பட்ட இடமாக நீங்கள் மட்டுமே புழங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும். பால்கனியில் வளர்க்கும் செடி வகைகளை வளர்த்து அதை அழகுபடுத்தலாம். அது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.

புதுவகை பால்கனிகள்

பெரிய அளவிலான பால்கனி அமைந்திருந்தால் சிறிய அளவிலான பார்ட்டிகளைக்கூட அதில் நடத்தலாம். நான்கைந்து நாற்காலிகள், மேசையைப் போட்டு அந்த இடத்தையே ஒரு திறந்த வெளி உணவகம் போலப் பயன்படுத்தலாம். கேளிக்கைகளுக்கான இடமாக பால்கனி மாறும். இப்படி அமைக்கும்போது அந்த பால்கனியை விதவிதமான செடி கொடிகளால் அலங்கரிக்க வேண்டும். கண்ணுக்குக் குளிர்ச்சியான பால்கனிகள் மனதிற் கும் இதமானதாக இருக்கும்.

தினந்தோறும் உடற்பயிற்சிக்கு உதவும் வகையிலும் பால்கனியை உருவாக்கலாம். உடற்பயிற்சிக் கருவிகள் மூலம் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளிலும் யோகா போன்ற ஆரோக்கியச் செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். இதற்கு பால்கனி மிகவும் உகந்த இடமாகவும் அமையும். கையாள எளிதான கருவிகளையும் யோகா மேட்களையும் வைக்க உதவும் சிறிய ஷெல்ப்களை பால்கனியில் அமைக்க வேண்டும். தண்ணீர் பாட்டில்கள், முகம் துடைக்க உதவும் துண்டுகள் போன்றவற்றை வைக்கவும் ஷெல்ப்கள் பயன்படும்.

குளிக்கும் சிறிய தொட்டிகளைக் கூட பால்கனியில் வைத்துப் பராமரிக்க இப்போது வாய்ப்புகள் உள்ளன. மறைப்புடன் கூடிய பால்கனி எனில் அங்கே நீங்கள் சுடுநீர் டப்புகளைப் பயன்படுத்த முடியும். சிறிய நீச்சல்குளம் போன்ற அமைப்பையே பால்கனியில் உருவாக்கிக்கொள்ள முடியும். என்ன ஒன்று இதை எல்லாம் தாங்கிக்கொள்ள ஏதுவாகக் கட்டிடம் இருக்கிறதா என்பதை அவதானித்துக்கொள்வது அவசியம். மேலும் நீச்சல் குளத்து நீர் கசிந்து தரைக்கோ சுவருக்கோ வராமல் பராமரிக்க வேண்டும். குளியல் போன்ற காரியங்களுக்கு பால்கனியைப் பயன்படுத்தும்போது போதிய மறைப்பு இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சூரிய மின்சக்தி உருவாக்கவல்ல தகடுகளை பால்கனிகளில் பொருத்தலாம். இதன் மூலம் வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து பசுமை வீடாக வீட்டை மாற்ற முடியும். பால்கனியை மூங்கில் போன்ற இயற்கைப் பொருள்கள் கொண்டு அலங்கரித்துப் பயன்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x