

சமயச் சண்டைகள் மலிந்திருப்பதைக் கண்ட ராமலிங்க வள்ளலார் அதிலிருந்து மக்களைக் காக்கவே சுத்த சன்மார்க்கம் என்னும் நல்வழியை மக்களிடையே அறிமுகப்படுத்தினார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளலாரின் அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டிருக் கின்றன. தொடக்கத்தில் வள்ளலார் முழுமுதற் கடவுளான பிள்ளையார், சிவன், முருகன், அம்பிகை உள்ளிட்ட தெய்வங்களைப் பற்றி 27 பதிகங்களைப் பாடியிருக்கிறார். இவை அனைத்தையும் உள்ளடக்கியதே மூன்றாம் திருமுறை. அவற்றில் சில பதிகங்கள் பற்றிய அறிமுகத்தை இங்கே தருகிறோம்.
திருவடிப் புகழ்ச்சி: இறைவனின் திருவடியைப் பாடும் மரபு நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது. அந்த மரபின் தொடர்ச்சியாகவே வள்ளலார், “ஈறிலாப் பதம் எல்லாம் தரு திருப்பதம்” என்று பாடுகிறார்.
விண்ணப்பக் கலிவெண்பா: தில்லை முதல் திருக்கைலாயம் வரையுள்ள ஆலயங்களின் சிறப்பைப் போற்றிப் பாடுவதே விண்ணப்பக் கலிவெண்பாவின் சிறப்பு. அதில் திருவொற்றியூர் ஆலயத்தைப் பற்றிய பாடல் இது:
“வெற்றியூர் என்ன வினையேன் வினைதவிர்த்த
ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே - தெற்றிகளில்
பொங்குமணிக் கால்கள் பொலஞ்செய் திருவொற்றியூர்நகர்
தங்கும் சிவபோக சாரமே”
- என்று அமைந்திருக்கிறது. இறைவனிடம் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்று மாறு வைக்கும் வேண்டுதலே இந்தப் பதிகங்களில் மறைபொருளாக நிறைந்திருக்கும்.
நெஞ்சறிவுறுத்தல்: இறைவனைத் தந்தை, தாய், துணைவன் உள்ளிட்ட பல உறவு நிலைகளில் வைத்து, அப்படிப்பட்ட அருளாளனைத் தொழுவாய் என் நெஞ்சே என்று தன் நெஞ்சத்தை அறிவுறுத்தும் பாடல்கள் இவை.
சிவநேச வெண்பா: தனக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கும் அணுக்கமான பிணைப்பை, அன்பை வெளிப்படுத்தும் பாடல்கள் இவை. இவற்றைத் தவிர, மகா தேவ மாலை, திருவருள் முறையீடு, சிகாமணி மாலை, வைத்திய நாதர் பதிகம், நல்ல மருந்து, திருவாரூர் பதிகம், திருமகள் வாழ்த்து, கலைமகள் வாழ்த்து, பழமலைப் பதிகம், பழமலையோ கிழமலையோ, பெரிய நாயகியார் தோத்திரம், திருவண்ணாமலைப் பதிகம், அருணகிரி விளங்க வளர்ந்த சிவக்கொழுந்து, சமரசானுபவ அனுக்கிரக அருட்குரு தோத்திரம், திருவோத்தூர் சிவஞான தேசிகன் திருச்சீர் அட்டகம், திருஞானசம்பந்தர் தோத்திரம், சிங்கபுரிக் கந்தர் பதிகம், சித்தி விநாயகர் பதிகம், வல்லபை கணேசர் பிரசாத மாலை, கணேசத் திரு அருள் மாலை, கணேசத் தனித்திருமாலை, தெய்வத் தனித்திருமாலை, மங்களம் ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது. மூன்றாம் திருமுறையில் இருக்கும் இந்த 27 பதிகங்களைப் பாடி இறை அனுபூதியில் கரைவோம். பிறவிப் பெருங்கடலில் கரையேறுவோம்.